வெளியிடப்பட்ட நேரம்: 15:39 (01/12/2018)

கடைசி தொடர்பு:15:39 (01/12/2018)

“பூ ஓகே; கொலுசுக்கு நோ!” - மாணவிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அட்வைஸ்

அமைச்சர்

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கோபி நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கோபி நகரவை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எனப் பல பள்ளிகளைச் சேர்ந்த 723 மாணவ மாணவிகளுக்கு ரூ. 26.79 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், திருப்பூர் எம்.பி சத்தியபாமா ஆகியோர் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினர்.

அமைச்சர்

நிகழ்ச்சியின்போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “ஈரோடு மாவட்டத்தில் 123 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 26,297 மாணவ மாணவியருக்கு சுமார் 9 கோடி மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளன. ஜனவரி மாத இறுதிக்குள் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் விலையில்லா மடிக்கணினிகள் மற்றும் சைக்கிள்கள் வழங்கப்படும். மேலும், ஜனவரி மாத இறுதிக்குள் அனைத்துப் பள்ளிகளிலும் இணையதள வசதியும் ஏற்படுத்தித் தரப்படும்” என்றார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், “ஆசிரியர் இடமாறுதலில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. முறைகேடு ஆதாரங்களைக் குறிப்பிட்டால், அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும். இந்த ஆண்டு நீட் தேர்வுக்காக 26 ஆயிரம் மாணவர்கள் பதிவுசெய்திருக்கிறார்கள். சுனாமி ஏற்பட்ட காரணத்தால், (என்னது சுனாமியா!) அடிப்படையில் 4 மாவட்டங்களில் பெரும் சேதங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதை இந்த அரசு மனதில் கொண்டு நீட் தேர்வை தள்ளிவைக்க மத்திய அரசிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறது. மத்திய அரசும் அந்த கால அவகாசத்தைக் கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது” என்றவரிடம், ‘அது சுனாமி இல்லைங்க, கஜா புயல் எனப் பத்திரிகையாளர்கள் சுட்டிக்காட்ட, சுதாரித்த அமைச்சர் செங்கோட்டையன், “சுனாமி, கஜா புயல் எல்லாம் பாதிப்புதான்” என ஏதோ சமாளித்தார்.

அமைச்சர்

பள்ளி மாணவிகள் கொலுசு அணியவும், பூ வைக்கவும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறதே என பத்திரிகையாளர்கள் கேட்க, “அப்படியா... அது என் கவனத்திற்கு வரலையே... விலையுயர்ந்த தங்க மோதிரங்கள் போன்ற பொருள்களை அணிந்துவந்து அது பள்ளிகளில் தொலைந்துவிட்டால், யார் திருடினார்கள் எனத் தேவையில்லாத மனக்கசப்புகள் ஏற்படும். மாணவிகள் கொலுசு அணிந்துவரும்போது அதனுடைய சலங்கைச் சத்தத்தால் மாணவர்களுடைய படிப்பு பாதிக்கப்படும். ஆனால், பூ வைத்து வருவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை” என்றார்.