வெளியிடப்பட்ட நேரம்: 16:57 (01/12/2018)

கடைசி தொடர்பு:16:57 (01/12/2018)

வந்த இடத்தில் காணாமல்போன மகன்... கதறிய டாக்டர்! - ஒரு மணி நேரத்தில் மீட்ட இன்ஸ்பெக்டர்

டாக்டர் கணேசனுக்கு கைகொடுக்கும் போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன்

சென்னை தேனாம்பேட்டை பகுதியில் சைக்கிள் பயிற்சிக்காக மாற்றுத்திறனாளி மகனை டாக்டர் அழைத்துவந்தார். வந்த இடத்தில் மகன் மாயமாகிவிட கதறி துடித்தார் டாக்டர். 

சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் டாக்டர் கணேசன். இவருக்கு 14 வயதில் மாற்றுத்திறனாளி மகன் ஒருவர் உள்ளார். இன்று காலை மகனை அழைத்துக்கொண்டு கணேசன், தேனாம்பேட்டையில் உள்ள பிரபலமான மாலுக்கு வந்தார். அங்கு, அவருடைய மகன் சைக்கிள் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். திடீரென அவரைக் காணவில்லை. இதனால் பதறிப்போன கணேசன், பல இடங்களில் தேடினார். எங்கும் கிடைக்கவில்லை. 

இதையடுத்து தேனாம்பேட்டை போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார். உடனடியாக இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் திருமால், தலைமைக் காவலர் கஜேந்திரன் மற்றும் போலீஸார் அவரைத் தேடும்பணியில் ஈடுபட்டனர். உடனடியாக அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைப் போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது, சைக்கிளில் அண்ணாசாலையில் அவர் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதனால் சிசிடிவி கேமரா மூலம் அவரை போலீஸார் கண்டறிய முடிவு செய்தனர். அவர் செல்லும் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்தபடி வாக்கி டாக்கியில் ரோந்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். 

இறுதியில் அவரை போலீஸார் மடக்கி அவரிடம் அன்பாகப் பேசினர். இதற்குள் கணேசன் அந்த இடத்துக்கு விரைந்து வந்தார். கணேசனிடம் அவரின் மகனை போலீஸார் ஒப்படைத்தனர். காணாமல்போன மகனைக் கண்ட மகிழ்ச்சியில் கண்ணீர்மல்க அவரைக் கட்டியணைத்தார் கணேசன். பிறகு போலீஸாருக்கு நன்றி தெரிவித்தார். அவருடைய மகனும் கைகுலுக்கி போலீஸாருக்கு நன்றி கூறினார். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``காலை 7.30 மணியளவில் கணேசனின் மகன் மாயமாகியுள்ளார். எங்களுக்கு 8.15 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் மாயமான இடத்திலிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தோம். கேமரா மூலம் அவர் செல்வதைக் கண்டறிந்தோம். பிறகு, அவரைப் பின்தொடர்ந்து சென்று ஒரு மணி நேரத்தில் மீட்டுவிட்டோம்" என்றனர். 

மகனை கண்டுபிடித்த மகிழ்ச்சியில் டாக்டர்

கணேசனின் மகன் மாயமான போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் இன்று புதிதாகப் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று தொடங்கிவைத்தார். அந்த விழாவுக்கான ஏற்பாட்டில் தேனாம்பேட்டை போலீஸார் இருந்தாலும், இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீஸார் துரிதமாகச் செயல்பட்டு கணேசனின் மகனை மீட்டுவிட்டனர். விழாவில், கூடுதல் கமிஷனர்கள் அருண், தினகரன், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ வசந்தகுமார், அவரின் மகனும் நடிகருமான விஜய் வசந்த், உதவி கமிஷனர் கோவிந்தராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே கதீட்ரல் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, எல்டம்ஸ் சாலை மற்றும் அதன் சுற்றுப்புறச் சாலைகளில், சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்துப் பிரிவு போலீஸார் இணைந்து கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தியுள்ளனர். விழாவில் செய்தியாளர்களைச் சந்தித்த விஸ்வநாதன், சென்னையில் 50 மீட்டர் இடைவெளியில் ஒரு சிசிடிவி என்கின்ற அடிப்படையில் பொருத்தப்பட்டு வருகிறது. சென்னை முழுவதும் 1.5 லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் இந்த எண்ணிக்கையை 3 லட்சம் முதல் 4 லட்சம் சிசிடிவி கேமராக்களாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளன'' என்றார். 

கேமரா பொருத்தப்பட்ட முதல் நாளிலேயே அதன்மூலம் கணேசனின் மகன் மீட்கப்பட்டுள்ளார் என்கின்றனர் போலீஸார். சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையம் சார்பில் புதியதாக 360 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது தவிர 570 கேமராக்கள் ஏற்கெனவே உள்ளன. இதனால் தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதி முழுவதும் சிசிடிவி கேமரா மூலமே இனி முழுமையாகக் கண்காணிக்க முடியும் என்கின்றனர் போலீஸ்.