பியூட்டி பார்லரில் இளம்பெண்ணை தாக்கியவர் மீண்டும் தி.மு.க-வில் சேர்ப்பு! | DMK reinstates Former Councillor suspended for assaulting Woman in Beauty Parlour

வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (01/12/2018)

கடைசி தொடர்பு:16:50 (01/12/2018)

பியூட்டி பார்லரில் இளம்பெண்ணை தாக்கியவர் மீண்டும் தி.மு.க-வில் சேர்ப்பு!

பியூட்டி பார்லரில் இளம் பெண்ணை கடுமையாகத் தாக்கியதற்காக கட்சியிலிருந்து இரண்டு மாதங்களுக்கு முன்னர் நீக்கப்பட்ட தி.மு.க முன்னாள் கவுன்சிலர் ஒருவர், தற்போது மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார். 

திமுக பிரமுகர் தாக்கிய காட்சி

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியம், அன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சி மன்ற தி.மு.க முன்னாள் உறுப்பினர் செல்வகுமார் என்பவர், பியூட்டி பார்லர் ஒன்றுக்குள் நுழைந்து, அங்கிருந்த  சத்யா என்ற இளம்பெண்ணைத் தாக்கி எட்டி உதைத்த சம்பவம், சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அதில்...

கொடுக்கல் வாங்கல் பிரச்னையில், அவர் அந்த இளம்பெண்ணை  வயிற்றிலேயே எட்டி உதைக்கிறார். அதில் அவர் நிலை குலைந்துபோய் நிற்கும் நிலையில்,  ஆத்திரம் அடங்காமல் அந்தப் பெண்ணின் வயிற்றில் மீண்டும் உதைக்கிறார். அதன் பின்னர், அவரது கழுத்தை நெரித்துக் கீழே தள்ளுகிறார் செல்வகுமார். அந்தப் பெண் கீழே விழுந்த பின்னரும் மீண்டும் மீண்டும் மிதித்ததில் அந்தப்பெண் மயக்கமடைகிறார்.

இந்தச் சம்பவம் நடந்து 4 மாதங்களாகியும் பெரம்பலூர் டவுன் போலீஸார், சத்யா புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தியதைத் தொடர்ந்து,  சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி வெளியிடப்பட்டது. அது மொபைல்போன்களிலும், தொலைக்காட்சிகளில், இணையதளங்களில் வைரலாகப் பரவியதும், பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனம் எழுந்தது. 

இதைத் தொடர்ந்து, செல்வகுமார் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட நிலையில், அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் இடைநீக்கம்செய்து,  தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், செல்வகுமார் மீண்டும் தி.மு.க-வில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார். இது தொடர்பாக தி.மு.க-வின் அதிகாரபூர்வ ஏடான முரசொலியில் கட்டம் கட்டி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

 

திமுக அறிவிப்பு

 

 

" செல்வகுமார், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, மீண்டும் கழகப்பணியாற்ற அனுமதிக்குமாறு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வைத்த கோரிக்கையை ஏற்று, அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்துசெய்யப்பட்டு, கழக உறுப்பினராகச் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளார்" என்று தி.மு.க பொதுச் செயலாளர் க. அன்பழகன் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க