அத்திக்கடவு அவிநாசி திட்டம் - டெண்டர் கோரிய தமிழக அரசு..! மகிழ்ச்சியில் விவசாயிகள் | Tamilnadu state government announced the tender for avinashi athikadavu scheme

வெளியிடப்பட்ட நேரம்: 18:54 (01/12/2018)

கடைசி தொடர்பு:18:54 (01/12/2018)

அத்திக்கடவு அவிநாசி திட்டம் - டெண்டர் கோரிய தமிழக அரசு..! மகிழ்ச்சியில் விவசாயிகள்

கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட விவசாயிகளின் 60 ஆண்டுக்கால கோரிக்கையான அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு தமிழக அரசு டெண்டர் கோரியிருப்பதால் 3 மாவட்ட விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.

அத்திக்கடவு அவிநாசி திட்டம் - டெண்டர் கோரிய தமிழக அரசு..! மகிழ்ச்சியில் விவசாயிகள்

 

திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய மூன்று மாவட்ட விவசாயிகளின் 60 ஆண்டுக்கால கோரிக்கையாக இருப்பது அத்திக்கடவு - அவிநாசி திட்டம். இந்தத் திட்டத்தின் மூலம் இந்த மாவட்டங்களைச் சேர்ந்த 843 ஊராட்சிகளில் அடங்கிய 74 குளங்கள் மற்றும் 971 குட்டைகளில் நீர் நிரப்பப்பட்டு, சுமார் 50 லட்சம் மக்கள்வரை பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், இத்திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பிலேயே போடப்பட்டு இருந்ததால், கடந்த 2016-ம் ஆண்டில் அந்த மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கத் தொடங்கினார்கள். விவசாயிகளை உள்ளடக்கிய அத்திக்கடவு போராட்டக்குழுவினரின் போராட்டத்தின் விளைவாக இந்தத் திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்காக ரூபாய் 3.27 கோடியை ஒதுக்கி உத்தரவிட்டார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. அதைத்தொடர்ந்து அந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அத்திக்கடவு திட்டம் 1,862 கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்தது.

 

அதைத் தொடர்ந்து, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, திருப்பூர் அத்திக்கடவு - அவிநாசி திட்டம்மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின்போது, ``அத்திக்கடவு திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில் ஈரோடு மாவட்டம் பவானி அருகே காளிங்கராயன் அணைக்கட்டில் இருந்து நீரை மின் மோட்டார் மூலம் குழாய்களின் வழியாக மூன்று மாவட்டங்களில் உள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் ஏனைய நீர்நிலைகளில் நிரப்பும் வகையில் அத்திக்கடவு திட்டத்தை அரசு செயல்படுத்தும்" என்று அறிவித்தார். என்றாலும், அதன் பிறகும் நீண்ட நாள்களாகத் திட்டத்தைச் செயல்படுத்தப்படுவதற்கான எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அத்திக்கடவு திட்டத்துக்கான நிர்வாக அனுமதியை வழங்கியது தமிழக அரசு. அதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் அவிநாசியிலும், ஈரோடு மாவட்டம் பெருந்துறையிலும் பொதுப்பணித் துறையின் சார்பில் கோட்ட அலுவலகங்கள் திறக்கப்பட்டு, அத்திக்கடவு திட்டத்துக்கான அதிகாரிகளும் நியமிக்கப்பட்டார்கள். இந்தநிலையில், தற்போது அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றுவதற்கான டெண்டர் அரசு சார்பில் கோரப்பட்டுள்ளது. இதனால், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களின் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள். ரூபாய் 1,532 கோடி மதிப்புள்ள பணிகளுக்கு வரும் ஜனவரி மாத கடைசி வாரம்வரை டெண்டர் பெறப்பட உள்ளது. அதன் பிறகு டெண்டர் இறுதி செய்யப்பட்டு, திட்டப் பணிகளைத் தொடங்கி 34 மாத காலத்துக்குள் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த டெண்டர் அறிவிப்பைக் கொண்டாடும் வகையில் அவிநாசி உள்ளிட்ட பல பகுதிகளில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் விவசாயிகள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் - சுப்பிரமணியன்அரசின் டெண்டர் அறிவிப்பு குறித்து நம்மிடம் பேசிய அத்திக்கடவு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், "இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும் என்பதற்கான நம்பிக்கை இப்போதுதான் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. எங்கள் மக்களின் 60 ஆண்டுக்கால போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியாகத்தான் இதைப் பார்க்கிறோம். பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள், ஊடகங்களில் பணியாற்றுபவர்கள் எனப் பலரும் எந்தவித சார்பும் இல்லாமல் ஒரே குடையின் கீழ் இணைந்து போராட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருந்தார்கள். அதன் விளைவாகவே எங்களின் போராட்டம் 90 சதவிகித வெற்றியைத் தற்போது எட்டியுள்ளது. இதே வேகத்தில் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவையும் நடத்தி, வெகு விரைவாக அத்திக்கடவு திட்டத்தை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். அத்துடன், குறிப்பாக அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி இரண்டுமுறை தொடர் உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபட்ட 25 பேர் மீது காவல்துறையினர் பதிவு செய்துள்ள வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்" என்றார்.

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் எப்போதுதான் நிறைவேறுமோ என்று மூன்று மாவட்ட விவசாயிகளுடன், ஒட்டுமொத்த தமிழக மக்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.


டிரெண்டிங் @ விகடன்