`ஸ்டாலின் மனசாட்சிக்குத் தெரியும்! - நிவாரணம் குறித்து செல்லூர் ராஜு | madurai sellur raju slams stalin

வெளியிடப்பட்ட நேரம்: 17:23 (01/12/2018)

கடைசி தொடர்பு:18:17 (01/12/2018)

`ஸ்டாலின் மனசாட்சிக்குத் தெரியும்! - நிவாரணம் குறித்து செல்லூர் ராஜு

``ஸ்டாலின் மனசாட்சிக்குத் தெரியும், நாங்கள் புயல் பாதிப்புக்கு எவ்வாறு செயல்படுகிறோம்'' என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.

நிவாரணப் பொருள்களுடன் செல்லூர் ராஜூ மற்றும் அமைச்சர்கள்

கஜா புயல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பல்வேறு அமைப்பினரும் தன்னார்வலர்களும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் தங்கள் பங்குக்கு நிவாரணப் பணிகளுக்கு பொருள்கள் அனுப்பி வைக்க வேண்டும் என்று கட்சித் தலைமை அறிவித்ததால், தங்கள் பவரைக்காட்ட மாவட்டச் செயலாளர்கள் பொருள்களைச் சேகரித்து அனுப்பி வருகிறார்கள். அமைச்சர்கள் டெல்டா மாவட்டங்களில் பிசியாக இருந்தால் சொந்த மாவட்டங்களில் இருந்து பொருள்களை அனுப்ப முடியவில்லை. இந்நிலையில் சொந்த மாவட்டங்களில் இருந்து செயல்பாடுகளைக் காட்ட  அமைச்சர்கள் செயல்படத் தொடங்கியுள்ளனர்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இருந்து 40 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருள்களை 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் அனுப்பி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில், ``மத்திய அரசின் நிவாரணம் கிடைக்கும் முன்பே தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மத்திய அரசு தேவையான உதவிகளைச் செய்யும் என நம்பிக்கை உள்ளது.

கமல்ஹாசன் சினிமா நடிகராகத்தான் இருக்கிறார். இன்னும் அரசியலைக் கற்றுக்கொள்ளவில்லை. அவர் ஒரு கத்துக்குட்டி. கஜா புயலில் அ.தி.மு.க செயல்பாடுகளை முழுமையாகத் தெரிந்துகொள்ளாமல் பேசிவருகிறார். நடிகர் கமல்ஹாசன் சினிமாவிலும் பொது வாழ்க்கையிலும் தூய்மையானவரா என்று அவரோடு நடித்த நடிகைகளைத்தான் கேட்க வேண்டும். ஸ்டாலின் மனசாட்சிக்குத் தெரியும் நாங்கள் புயல் பாதிப்புக்கு எவ்வாறு செயல்படுகிறோம் என்று. அவர் எதிர்க்கட்சி என்ற காரணத்தால் வேறு வழியில்லாமல் குறை சொல்கிறார். அவ்வளவுதான். மற்றபடி அ.தி.மு.க-வை நல்லபடியாகத்தான் நினைக்கிறார்'' என்று கூறினார்.