``கண்ணீரைத் துடைக்கும் நேரத்தில் எதிர்க்கட்சிகள் கண்துடைப்பு நடத்துகின்றன'' - தமிழிசை | Tamilisai attacks opposition parties

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (01/12/2018)

கடைசி தொடர்பு:21:00 (01/12/2018)

``கண்ணீரைத் துடைக்கும் நேரத்தில் எதிர்க்கட்சிகள் கண்துடைப்பு நடத்துகின்றன'' - தமிழிசை

``கண்ணீரைத் துடைக்கும் நேரத்தில், எதிர்க்கட்சிகள் கண்துடைப்பு நாடகத்தை நடத்தி வருகின்றன'' என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

தமிழிசை சவுந்தரராஜன்

தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திருப்பூர் செல்வதற்காக, கோவை வந்திருந்தார். முன்னதாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை, “கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களைப் பலமுறை நேரில் சந்தித்து, அவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கினோம். பலமுறை சந்தித்ததால், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்தபோது, மக்களுக்கு என்ன தேவை என்பதை விளக்க முடிந்தது. மத்திய அரசு அனைத்து விதத்திலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பக்க பலமாக இருக்கிறது. பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளுக்கு இருக்கும் அக்கறையைவிட எங்களுக்கு அதிக அக்கறை இருக்கிறது. நிவாரணப் பொருள்களைக் கொடுத்து வருவதால் பிரச்னை சரி ஆகிவிடாது. வெறும் நிவாரணப் பொருள்களைக் கொடுப்பதுடன் தங்களது பணி முடிந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன. மக்களோடு நாங்கள் நின்றுகொண்டிருக்கிறோம். சில கட்சிகள் இதை அரசியலாக்குவது வேதனையளிக்கிறது. இவ்வளவு பாதிப்புகள் இருக்கும்போது, அங்கு எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பது கண் துடைப்பு. கண்ணீரைத் துடைக்க வேண்டிய நேரத்தில், கண்துடைப்பு நடத்தி வருகின்றன எதிர்க்கட்சிகள்.

மேக்கே தாட்டூவில் அணை கட்ட அனுமதி வழங்கப்படவில்லை. ஆய்வு செய்யத்தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சிதான் அங்கு நடக்கிறது. திருநாவுக்கரசர், இதுதொடர்பாக கர்நாடக அரசிடம் பேசட்டும். பொன். மாணிக்கவேல் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். எனவே, அவருக்குப் பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்றுதான் நாங்கள் கேட்டுக்கொண்டிருந்தோம். சிலைக்கடத்தலில் நியாயம் கிடைத்துள்ளது” என்றார்.