``ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கச் சொல்வதற்கு அவர்கள் யார்?’’ - கொந்தளிக்கும் கடம்பூர் ராஜு | Minister kadambur Raju speaks about Sterlite issue

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (01/12/2018)

கடைசி தொடர்பு:21:30 (01/12/2018)

``ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கச் சொல்வதற்கு அவர்கள் யார்?’’ - கொந்தளிக்கும் கடம்பூர் ராஜு

``ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும், மூட வேண்டும் என்று கருத்து கூற தருண் அகல்வால் தலைமையிலான குழுவுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க உரிமம் அளிக்கக் கூடாது, இயக்கக் கூடாது என்பதில் தமிழக அரசு தெளிவான நிலைப்பாட்டுடன் உள்ளது” என செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் நடைபெற்ற அ.தி.மு.க மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கிராமங்களில் நடைபெற்று வந்த போராட்டத்தின் 40 வது நாளிலேயே தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலமாக ஸ்டெர்லைட் ஆலை, உரிமத்தை புதிப்பிக்கப்படாததைக் காரணம் காட்டி ஆலையின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. உரிமம் ரத்து செய்யப்பட்டாலே ஆலை இயங்க முடியாது என்பதாக அர்த்தம். ஆலையும் மூடப்பட்டது.

மூடப்பட்ட ஆலைக்கு எதிராகப் போராட வேண்டாம் என அரசு சார்பில் பொதுமக்களுக்கு ஊடகங்கள் வாயிலாகத் தெரிவிக்கப்பட்டது ஆனால், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100-வது நாள் போராட்டம் எனச் சொல்லி சில அமைப்புகளின் தூண்டுதலால் மே 22-ல் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. அதில், விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றது. அதன் பின்னர், மே 29-ம் தேதி ஆலை நிரந்தரமாக மூடப்படுவதாகத் தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டதுடன் ஆலையும் சீல் வைத்து மூடப்பட்டது.  

ஸ்டெர்லைட் ஆலையின் பிரச்னை என்ன, அதன் தன்மை என்ன என்பது குறித்து மட்டும்தான் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு ஆய்வு செய்ய அனுப்பப்பட்டது. அந்த ஆய்வறிக்கை தற்போது தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில், ஆலையைத் திறக்க வேண்டும், மூட வேண்டும் என கருத்துக் கூறுவதற்கு அந்தக் குழுவுக்கு எந்த அதிகாரமும் கிடையாது.

ஆய்வறிக்கையில் கருத்து தெரித்தாலும், பசுமைத் தீர்ப்பாயம் என்ன நிலைப்பாடு எடுத்தாலும் சரி, அந்த ஆலை இயங்க மாநில அரசின் சுற்றுச்சூழல் வாரியத்தின் உரிமம் இருந்தால் மட்டுமே இயங்க முடியும். ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்காது என்பதில் தமிழக அரசு தெளிவாக உள்ளது. தவறான கருத்துகள் பொதுமக்களிடையே பரப்பப்பட்ட காரணத்தினால்தான் 13 உயிர்கள் பறிபோய்விட்டன. எனவே, இதுபோன்ற மக்களைத் தூண்டி விட வேண்டாம். இதை அரசிலாக்கிப் பார்க்க வேண்டாம்” என்றார்.       

நீங்க எப்படி பீல் பண்றீங்க