வெளியிடப்பட்ட நேரம்: 19:05 (01/12/2018)

கடைசி தொடர்பு:19:05 (01/12/2018)

"சூழலியல் விரோத திட்டங்கள் இனி அடிக்கடி இங்கு வரும்!" - மாநில உரிமையைப் பறித்த மத்திய அரசு

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவிப்பு, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது மட்டுமல்ல, மாநில அரசின் உரிமைகளை முழுவதும் பறிப்பதாகும்.

சுற்றுச்சூழல் திட்டங்களுக்கு, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதலை பெறத் தேவையில்லை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதைச் சாதாரண செய்தியைப் போன்று அவ்வளவு எளிதில் கடந்து சென்றுவிட முடியாது. ஏனெனில் நச்சுக் கழிவுகளை வாயுவாகவோ, திரவமாகவோ அல்லது திடப்பொருளாக வெளியேற்றும் ஆலைகள், அனல் மின் நிலையங்கள் மற்றும் அணு உலைகள், நியூட்ரினோ மையம் எனப் பலவற்றை அமைப்பதற்காக மத்திய, மாநில சுற்றுச்சூழல் துறையுடன் சேர்த்து மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியையும் பெற வேண்டும் என்கிற நடைமுறை இருந்து வருகிறது. இனி புதிய உத்தரவுப்படி, மத்திய, மாநில சுற்றுச்சூழல்துறை மட்டும் அனுமதி கொடுத்தால் போதும். மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி தேவையில்லை என்று மாநிலங்களின் உரிமைகளைப் பறித்திருக்கிறது மத்திய அரசு. கடிதம் மூலம் அனைத்து மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர்களுக்கு இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. சுற்றுச்சூழல் துறை அனுமதி பெற்ற பின்னரும்கூட, நியூட்ரினோ போன்ற திட்டங்கள் தமிழகத்தில் ஆரம்பிக்காமல் இருப்பதற்குக் காரணம் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறாததால்தான். அந்த அளவுக்கு ஒரு திட்டத்தை நிறுத்திவைக்கும் அதிகாரம் படைத்த மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சுதந்திரம் தற்போது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. 

'மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவிப்பு, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது மட்டுமல்ல, மாநில அரசின் உரிமைகளை முழுவதும் பறிப்பதாகும். தமிழக அரசு உடனடியாக இதை எதிர்த்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்' எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

நியூட்ரினோ மற்றும் சூழலியல் விரோத திட்டங்கள்

இதுபற்றி பூவுலகின் நண்பர்கள் பொறியாளர் சுந்தர்ராஜனிடம் பேசினோம். "சுற்றுச்சூழல் சட்டவியலில் முன்னெச்சரிக்கை கோட்பாடு (Precautionary principle), இடர் தடுப்புக் கோட்பாடு (Prevention principle), தவறிழைப்பவரே பொறுப்பேற்பு கோட்பாடு (Polluter pays principle), ஒருங்கிணைவு கோட்பாடு (Integration principle), மக்கள் பங்கேற்பு கோட்பாடு (Public participation principle), நீடித்த வளர்ச்சிக் கோட்பாடு (Sustainable development principle) ஆகியவை முக்கியமானவை. ஐக்கிய நாடுகள் அவை முன்னெடுத்த இந்தக் கோட்பாடுகள் உலகின் அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டிய கடமை படைத்தவை. இக்கோட்பாடுகளின் அடிப்படையிலேயே இந்தியாவில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியமும், அனைத்து மாநிலங்களிலும் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களும் இயங்கி வருகின்றன." என்றவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். 

பொதுவாக  மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயல் என்ன?

"சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வாய்ப்புள்ள தொழிற்திட்டங்களுக்கு மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உரியக் கட்டுப்பாடுகளையும், பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்நெறிப்படுத்தல்களையும் விதித்து நிபந்தனைக்குட்பட்ட அனுமதி வழங்கும். பெருந்தொழில் நிறுவனங்களுக்கு, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களை கலந்து ஆலோசித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் “சுற்றுச்சூழல் அனுமதி” (Environment Clearance) வழங்கும். இந்த சுற்றுச்சூழல் அனுமதியில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டதையும், அந்த தொழிற் திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாது என்பதையும் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்த பின்னர்தான் அந்த திட்டம் செயல்படுவதற்கான அனுமதியை (Consent to Establish) வழங்கும், அதன் பின்னர் திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ள விதம் விதிமுறைகளின்படி இருந்தால், திட்டத்தை "இயக்குவதற்கான அனுமதியை" வழங்கும் (consent to operate). 

நச்சுமிகுந்த கழிவுகளை வாயுவாகவோ, திரவமாகவோ, திடப் பொருளாகவோ வெளியேற்றும் ஆலைகள், அனல் மின் மற்றும் அணுமின் நிலையங்களை அமைப்பதற்குச் சுற்றுச்சூழல் தாக்கீது அறிக்கை 2006-ன் படி மாநில சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அனுமதி அவசியம். இவை இரண்டையும் பெற்ற பின்னர் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் திட்டம் செயல்படுவதற்கான அனுமதியினைப் பெற்றால் மட்டுமே திட்டத்தை துவங்க இயலும். துவங்கிய பின்னர்கூட ஆண்டிற்கு ஒருமுறை Consent to operate என்ற தொடர்ந்து இயங்குவதற்கான அனுமதியைப் புதுப்பித்தால் மட்டுமே ஆலை இயங்க முடியும். இந்த இரண்டு அனுமதிகளின் பலத்தால் சுற்றுச்சூழல் விதிகளைப் பின்பற்றாத பல தொழிற்சாலைகள் இயங்க முடியாத நிலை உருவாகியுள்ளது." 

இப்போது தரப்பட்டுள்ள புதிய உத்தரவை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

"இந்தத் திட்டத்தின் மூலம், பெருந்தொழில் திட்டங்களை அனுமதிப்பதில் மாநில அரசுக்கும், மாநிலத்தில் வாழும் மக்களுக்கும் ஓரளவு கட்டுப்பாடு இருந்தது. இப்போது மாநிலங்களுக்கான அந்த உரிமையை பறித்தெடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை ஒன்றை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அண்மையில் அறிவித்துள்ளது. அதில், இனி மத்திய சுற்றுச்சூழல்  வழங்கும் 'சுற்றுச்சூழல் அனுமதி' (Environment Clearance) மட்டுமே போதுமானது என்றும் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வழங்கும் 'தொழிற்திட்டம் தொடங்குவதற்கான  அனுமதி' (Consent to Establish) தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது." 

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையில் சொல்லியிருப்பது என்ன?

"இந்த நிலையில் தொழிற்சாலை சம்பந்தப்பட்ட திட்டங்களுக்கு எளிதில் அனுமதி கிடைப்பதற்காக இந்த விதிகளைத் தளர்த்தி மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மத்திய சுற்றுச்சூழல் துறை வழங்கும் நிபந்தனைகளும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கும் நிபந்தனைகளும் ஒன்றாகவே இருப்பதால் மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி அவசியமில்லை என அனைத்து மாநில அரசு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர்களுக்கு கடிதம் மூலம் அனுப்பப்பட்ட உத்தரவில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது."

நெடுவாசல்

மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதி தேவை இல்லை என்றால் என்ன நிகழும்?

"தமிழ்நாட்டில் உள்ள சர்ச்சைக்குரிய நியூட்ரினோ, ஸ்டெர்லைட் போன்ற திட்டங்களுக்கு தமிழ் மக்களின் எதிர்ப்பு காரணமாக “திட்டம் தொடங்குவதற்கான அனுமதி” (Consent to establish)-ஐ வழங்கத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மறுத்துவிட்டது. இந்நிலையில் மத்திய அரசு விரும்பும் தொழிற்திட்டங்களை அதன் பாதிப்பு குறித்து அக்கறை கொள்ளாமல் மக்கள் மீது திணிக்கவும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மாநில அரசுகளை மதிக்காமல் புறந்தள்ளவும் இந்தப் புதிய திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்துகிறது. இதனால் பல அழிவுத் திட்டங்கள் தமிழகத்திற்கு வரும்."

அப்படியெனில், புதிய அறிவிப்பு சுற்றுச்சூழலுக்கு எதிரானதா?

"ஆம். இது இந்திய அரசமைப்பு சட்டக் கோட்பாடுகளுக்கும், சர்வதேச சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்களுக்கும் எதிரானதாகும். இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை ஒரு 'அலுவலக குறிப்பு' (office memo) மூலமாக மாற்றியமைக்க முயல்வது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை கேலிக்கு உள்ளாக்கும் செயல். மத்திய அரசின் இந்த எதேச்சதிகார மக்கள் விரோதப்போக்கு கடுமையாகக் கண்டிக்கிறோம், தமிழக அரசு தன்னுடைய உரிமையை நிலைநாட்ட இதற்கான எதிர்ப்பு குரலை பதிவு செய்யவேண்டும்." 

தமிழக அரசு இனி என்ன செய்ய போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 


டிரெண்டிங் @ விகடன்