`முதல்வரின் தூண்டுதலால் ஏரிக்குள் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டத் தீவிரம்!’ - கொந்தளிக்கும் மக்கள் | People staged protest in salem against government project

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (01/12/2018)

கடைசி தொடர்பு:22:30 (01/12/2018)

`முதல்வரின் தூண்டுதலால் ஏரிக்குள் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டத் தீவிரம்!’ - கொந்தளிக்கும் மக்கள்

முதல்வர்

ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலை புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து வீடுகள் கட்டக் கூடாது என்று நீதிமன்றங்கள் வலியுறுத்தி வரும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடு ஏரிக்குள் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடு கட்ட அடிக்கல் நாட்டினார். அதையடுத்து அந்த இடத்தில் அடித்தளம் அமைக்கக் குழி தோண்டும்போதே தண்ணீர் ஊற்றெடுத்து நிரம்பியது. இந்த இடத்தில் வீடுகள் கட்டினால் இடிந்து விழுந்து பேராபத்தை ஏற்படுத்தும் என்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் விவசாயிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இதுபற்றி சேலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மோகன், ``நீர்நிலைப் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டக் கூடாது என்று நீதிமன்றங்கள் வலியுறுத்தி வருகிறது. சேலம் திருமணிமுத்தாறு அபிவிருத்தி செய்தபோது அங்கு குடியிருந்த மக்களை அப்புறப்படுத்தி அவர்களுக்கு சேலத்தாம்பட்டி ஏரியில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் 840 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த வீடுகள் ஏரிக்குள் இருப்பதால் அங்கு குடியிருக்க முடியாமல் 400-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசிக்காமல் வெளியேறி இருக்கிறார்கள்.

ஏரி

இந்தநிலையில் கடந்த முறை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் வந்தபோது 18-ம் தேதி மாவட்டக் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் சேலத்தாம்பட்டி ஏரியில் 496 வீடுகள் 42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்ட அடிக்கல் நாட்டினார். அதையடுத்து, நேற்றிலிருந்து சேலத்தாம்பட்டி நடு ஏரிக்குள் அடித்தளம் போடுவதற்கு 4 அடி குழி பறிக்கப்பட்டுள்ளது. ஒரு அடி பறிக்கும்போதே தண்ணீர் ஊற்றெடுத்து குழியை மூடிவிட்டது.

அதையடுத்து இந்த இடம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு உகந்தது இல்லை என்று பணியை நிறுத்தி இருக்க வேண்டும். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தூண்டுதலால் தொடர்ந்து அந்த இடத்தில் கட்டடம் கட்டத் தீவிரம்காட்டி வருகிறார்கள். இப்பணியை நிறுத்திவிட்டு வேறு இடத்தில் இப்பணியைத் தொடர வேண்டும். இல்லையென்றால் போராட்டம் வெடிக்கும்'' என்றார்.