வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (01/12/2018)

கடைசி தொடர்பு:23:00 (01/12/2018)

`கஜா புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் போராட்டம் தேவையா?’ - தமிழிசை

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மேற்கு மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

பொன்.ராதாகிருஷ்ணன்

நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், ``பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 2 பேர் பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில், எந்தவித உரிமமும் இல்லாமல் கன்னியாகுமரியில் துறைமுகம் அமையக்கூடிய பகுதிகளைப் பார்வையிட்டுப் படம் பிடித்திருக்கிறார்கள். அவர்களுக்கு இங்குள்ள சில கருங்காலிகளும் உதவி செய்திருக்கிறார்கள். இச்செயல் மிகவும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால், இந்த விவகாரத்தில் மாநில அரசு விழிப்புடன் செயல்படவில்லை. இதுபோன்ற விவகாரங்களைத் தமிழக அரசு மிகத் தீவிரமாகக் கண்காணிக்காவிட்டால், நாட்டுக்கே மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உண்டு.

டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற விவசாயிகளின் பேரணியில் 25 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டார்கள். ஆனால், அதில் தமிழக விவசாயி அய்யாக்கண்ணுவின் தலைமையில் கலந்துகொண்ட ஒரு குழு மட்டும், ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்துக்கும் தலைக்குனிவை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டிருக்கிறார்கள். தமிழக விவசாயிகளின் கெளவரத்தையும் கொச்சைப்படுத்திவிட்டார்கள். இந்தக் குழு தமிழக எல்லைக்குள் நுழைவதற்கே அருகதையற்றவர்களாகத்தான் நான் பார்க்கிறேன். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை சிறப்பாக எதிர்கொள்ளும் அளவுக்கு பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் வலுவாக இருக்கிறது’’ என்றார்.

தமிழிசை

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், ``கஜா புயலால் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் அம்மக்களின் துயரத்தில் பங்கெடுத்துக்கொள்ளாமல், மேக்கே தாட்டூ அணை விவகாரம் தொடர்பான போராட்டத்தை எதிர்க்கட்சிகள் அறிவித்திருக்கிறார்கள். அது தேவையற்றது மட்டுமல்ல, அரசியல் உள்நோக்கமும் கொண்டதாகவே இருக்கிறது.

காவிரி விவகாரத்தையே மத்திய அரசுதான் முடிவுக்குக் கொண்டு வந்தது. மேக்கே தாட்டூவில் கர்நாடக அரசு திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஆய்வுக்கு மட்டுமே தற்போது மத்திய அரசின் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அணையைக் கட்ட யாருக்கும் அனுமதி தரவில்லை. அதை தமிழக பா.ஜ.க-வும் கடுமையாகத்தான் எதிர்க்கும். ஜாக்டோ - ஜியோ அமைப்பினரும் இந்தச் சூழலில் தங்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும்’’ என்றார்.