வெளியிடப்பட்ட நேரம்: 23:45 (01/12/2018)

கடைசி தொடர்பு:23:45 (01/12/2018)

அ.தி.மு.க பிரமுகரின் மகனுக்கு அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி ரூ.10.75 லட்சம் மோசடி! - மதபோதகர் கைது

அ.தி.மு.க ஒன்றிய அவைத்தலைவர் மகனுக்கு, உதவி செய்திமக்கள் தொடர்பு அதிகாரி வேலை வாங்கித்தருவதாகக் கூறி, 10 லட்சம் ரூபாய் மோசடிசெய்த கொடைக்கானலைச் சேர்ந்த மத போதகரை நாகர்கோவில் போலீஸார் கைதுசெய்தனர்.

ஜோன்ஸ்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த தாழக்குடி பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர், தோவாளை ஒன்றிய அ.தி.மு.க அவைத் தலைவராக இருந்துவருகிறார். ராமச்சந்திரன், தனது மகனுக்கு வேலை தேடி அடிக்கடி சென்னை சென்றுவந்துள்ளார். அப்போது, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த மத போதகர் ஜோன்ஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  ஜோன்ஸ் தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாகவும், பலருக்கு வேலை வாங்கிக் கொடுத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

அரசு வேலையான உதவி மக்கள் தொடர்புத் துறை அதிகாரி வேலைக்கு இடம் காலியாக இருப்பதாகவும், அந்த வேலையை ராமச்சந்திரனின் மகனுக்கு  வாங்கிக் கொடுப்பதாகவும் கூறி, 10.75 லட்சம் ரூபாயை போதகர் ஜோன்ஸ் வாங்கியுள்ளார். அதேபோன்று, ராமச்சந்திரன் சகோதரியின் மகளுக்கு மருத்துவப் படிப்பிற்கான இடம் வாங்கித்தருவதாக 2 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். இதில், சுமார் 2 லட்சம் ரூபாயைத் திருப்பிக்கொடுத்த நிலையில், மீதி பணமும் கொடுக்காமல் வேலையும் வாங்கிக் கொடுக்காமல் ஜோன்ஸ் ஏமாற்றியுள்ளார். இதையடுத்து, ராமச்சந்திரன் நாகர்கோவில் குற்றப்பிரிவு  போலீஸில் புகார் அளித்தார். உதவி ஆய்வாளர் முத்துமாரி தலைமையில் விசாரணை நடத்திய போலீஸார், இன்று மத போதகர் ஜோன்ஸ்சை கைதுசெய்தனர். வேறு யாரிடமாவது வேலை வாங்கித்தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டுள்ளாரா என போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.