``இன்னும் புயல்காத்து சத்தம் கேட்டுகிட்டே இருக்கு டாக்டர்” - கஜா மிரட்சி நீங்காத டெல்டா மக்கள்! | That noice not left from ears- Gaja victims to Doctors

வெளியிடப்பட்ட நேரம்: 20:09 (01/12/2018)

கடைசி தொடர்பு:21:53 (01/12/2018)

``இன்னும் புயல்காத்து சத்தம் கேட்டுகிட்டே இருக்கு டாக்டர்” - கஜா மிரட்சி நீங்காத டெல்டா மக்கள்!

கஜா மனநலம்

காவிரி டெல்டா பகுதிகளில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட வாழ்வாதாரம் பறிபோனதால் மனச்சிக்கலுக்கு ஆளாகியுள்ளவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும் இந்தப் பேரிடரால் உண்டாகியுள்ள மனப்பிரச்னைகளுக்கான தீர்வு குறித்து ஆய்வு செய்யவும் சென்னையிலிருந்து அரசு மனநல மருத்துவக் குழுவினர் அங்கு சென்றுள்ளனர். 

இயற்கைப் பேரிடர், பெருவிபத்துகள் போன்றவற்றால் அதிக அளவிலான மக்கள் பாதிக்கப்படும்போது, அவர்கள் சந்திக்கும் மனச்சிக்கல்களுக்கும் தற்காலிக மனநோய்களுக்கும் சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநல நிறுவனம் (IMH- Institute of Mental Health) சிகிச்சை அளித்துவருகிறது. கல்பாக்கம் அணு உலை வந்த புதிதில் பல விபத்துகள் நேரிட்டன. பலரும் உயிரிழந்தனர். அந்த சுற்றுவட்டாரத்தில் ஏராளமானவர்களுக்கு உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டன. அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்றும் கூறப்பட்டது. அந்த நிலைமையில் அங்கு பணியாற்றிய 3,000 பேர் எதிர்கொண்ட மனநிலை, மனநலச் சிக்கல்கள் குறித்து, அப்போதைய அரசு மனநல நிறுவனத்தின் பேராசிரியர் முருகப்பன் தலைமையில் மனநல மருத்துவ நிபுணர்கள் சிகிச்சையும் ஆய்வும் மேற்கொண்டனர். ஓராண்டாக நடந்த ஆய்வு குறித்து அரசுக்கு அறிக்கையும் அளிக்கப்பட்டது. 

கஜா மனநலம்

அதைப் போலவே, பழவேற்காட்டுக்கு சுற்றுலா சென்ற மாணவர்கள் பயணித்த படகு மூழ்கி, பலரும் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதில் தப்பியவர்களுக்கு அரசு மனநல நிறுவனம் சார்பில் ஆறு மாதங்களுக்கும் மேலாகத் தொடர்சிகிச்சை அளிக்கப்பட்டது. 

காஞ்சிபுரத்தை அடுத்து திருப்பெரும்புதூர் அருகில் டிராக்டரில் சென்ற திருமண கோஷ்டி மீது பெட்ரோலிய டேங்கர் லாரி மோதியதில் 1,000 டிகிரி வெப்பநிலையில் அவ்வாகனங்கள் எரிந்து பெரும் விபத்து ஏற்பட்டது. அதில் காயம்பட்டு உயிர்தப்பியவர்கள் காஞ்சிபுரம் மருத்துவமனையில் பல மாதங்களாக சிகிச்சை பெற்றுவந்தனர். அவர்களுக்கும் அ.ம.நி மருத்துவர்கள் சிகிச்சையளித்து ஆற்றுப்படுத்தி அவர்களை சகஜநிலைக்குக் கொண்டுவந்தனர். 

கஜா மனநலம்

2004-ல் சுனாமி ஏற்பட்டபோதும் பெங்களூரு நிமான்ஸ் நிறுவனத்தின் மூலம் பேரிடருக்குப் பிந்தைய மனநல சிகிச்சையளித்தல் குறித்த பயிற்சியை அ.ம.நி. மருத்துவர்கள் பெற்றனர். அந்தப் பயிற்சியுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு சுனாமியால் ஏற்பட்ட மனப்பிரச்னைகளைச் சரிசெய்வதற்கான பயிற்சியை மற்ற மருத்துவர்களுக்கு அ.ம.நி டாக்டர்கள் வழங்கினர். 

இப்போது தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கஜா புயலானது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் பலவிதமான மனச்சிக்கல்களுக்கு ஆளாகியுள்ளனர். ஆயிரக்கணக்கான மரங்களை இழந்தவர்கள், அதைத் தாங்க முடியாமல் தற்கொலைக்கு ஆளாகும் கொடுமையும் நடந்துவருகிறது. இந்த நிலைமையில் உடனடி சிகிச்சை அளிக்கவும் இனி இதைப்போன்ற இயற்கைப்பேரிடர் நிகழ்ந்தால் அதை எதிர்கொள்வதற்கான தடுப்புத் திட்டத்தை உருவாக்கும் முயற்சியிலும் அரசு மனநலத்துறை தீவிரமாக இறங்கியுள்ளது. 

தேசிய அளவில் செயல்படுத்தப்படும் மாவட்ட மனநலத் திட்டத்தின் மூலம் (District Mental Health Project), புதுக்கோட்டையில் கடந்த ஓராண்டாக மாணவர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள், போலீஸார் உட்பட்ட அரசு ஊழியர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு மனநல ஆலோசனையும் விழிப்பு உணர்வும் வழங்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், கஜா புயல் மனநலப் பாதிப்பைப் போக்குவதற்கான முயற்சியை, புதுக்கோட்டை மாவட்ட மனநலத் திட்டக் குழு முன்னெடுத்தது. சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநல நிறுவனத்தின் குழுவினரும் இவர்களுடன் இணைந்துகொண்டுள்ளனர். 

கீழ்ப்பாக்கம் அ.ம.நி மனநல மருத்துவ நிபுணர் அரவிந்தன் சிவக்குமார் தலைமையிலான குழுவில், பட்டமேற்படிப்பு மனநல மருத்துவ மாணவர்கள் 4 பேர், எம்.பில் உளவியல் மாணவர்கள் 6 பேரும் மாவட்ட மனநலத் திட்டத்தின் சார்பில் மாவட்ட அலுவலர், உளவியலாளர் ஒருவரும் இந்தக் கூட்டுக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். 

``கஜா புயல் போன்ற பாதிப்புகளில் உடல்நலம் மட்டுமன்றி மனநலச் சிக்கல்களும் உண்டாகின்றன. அதனால் உடல்நலத்துக்கும் சிக்கல் வருகிறது. எனவே, மனநலப் பிரச்னைகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக சென்னை அ.ம.நி குழுவினரும் புதுக்கோட்டைமாவட்ட மனநலத் திட்டக் குழுவினரும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று சிகிச்சையளிக்கின்றனர்” என்கிறார், மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் மரு.சந்திரசேகரன். 

கஜா மனநலம்

முதல் நாளான நேற்று புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் கணேஷ் ஆகியோருடன் கலந்துபேசிவிட்டு இக்குழுவினர் புறப்பட்டனர். 

காவிரி டெல்டா பகுதியில் இக்குழுவினர் நான்கு நாட்கள் இப்பணியை மேற்கொள்கிறார்கள் என்று நம்மிடம் கூறினார், அரசு மனநல நிறுவனத்தின் இயக்குநர் மரு.பூர்ணசந்திரிகா. 

முதல் நாளன்று புதுக்கோட்டை, ஆலங்குடி, வடகாடு, கறம்பக்குடி, நெடுவாசல், முத்தன்பள்ளம், ஆதனக்கோட்டை, விராலிமலை, வாண்டான்விடுதி, சுக்கிரண்குண்டு, அணைவயல், கைகாட்டி ஆகிய இடங்களில், அரசு மனநல மருத்துவக் குழுவினர் சிகிச்சையளித்தனர். பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள், அன்றாட வேலைகளுக்குச் செல்லும் பெண்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் என பல தரப்பினரும் தங்கள் பிரச்னைகளை எடுத்துக்கூறி சிகிச்சை பெற்றனர். 

திருவரங்குளம் இலங்கை அகதிகள் முகாமுக்கும் சென்ற இக்குழுவினர், அங்கு ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பிலிருந்து மீளாதவர்களுக்கு ஆற்றுப்படுத்தி சிகிச்சையளித்தனர். 

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும்பாலும் தென்னை, மா, பலா மரங்களை இழந்த விவசாயிகள் மத்தியில் கடுமையான மனப்பதற்றமும் மன உளைச்சலும் பரவலாக இருக்கிறது என்கிறார்கள், அரசு மனநல மருத்துவக் குழுவினர். 

“குழந்தைகள், பள்ளிச் சிறுவர்கள், முதியவர்கள் என அனைத்து வயதினருக்கும் புயலின் பாதிப்பு இருக்கிறது. `இன்னும் அந்தப் புயல்காத்து சத்தம் கேட்டுகிட்டே இருக்கு டாக்டர்’னு நிறைய பேர் சொல்கிறார்கள். பலருக்கு அழிந்துபோன அவர்களின் தென்னை, மா, பலா மரங்களைப் பார்க்குமளவுக்கு மன தைரியம் இல்லை என்கிறார்கள். அடர் இருட்டில் மரங்கள் ஒடிந்துவிழுந்த சத்தம் இரவு நேரங்களில் கேட்பதைப்போல இருப்பதாகவும் சொல்கிறார்கள். இயற்கைப் பேரிடருக்குப் பிந்தைய காலத்தில் இப்படி மனப்பதற்றமும் மனச்சோர்வும் அடைவது இயல்புதான். இப்போதைக்கு ஆரம்பகட்ட சிகிச்சை அளிக்கிறோம். நிரந்தர சிகிச்சை வழிமுறையையும் அளிப்போம்” என்று கூறினார், புதுக்கோட்டை மாவட்ட மனநலத் திட்ட அதிகாரியான மரு.கார்த்திக் தெய்வநாயகம்.

உடனடியான மனச்சிக்கல்களுக்கான சிகிச்சை மட்டுமன்றி வருங்காலத்தில் இப்படியான இயற்கைப் பேரிடர்கள் நிகழ்ந்தால் அவற்றை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான முன்மாதிரித் திட்டத்தையும் இந்த ஆய்வின்மூலம் உருவாக்க இருக்கிறோம் என்று அரசு மனநல நிறுவனத்தின் நிபுணர் மரு.அரவிந்தன் சிவக்குமார் தெரிவித்தார். 

கஜா புயலால் மரங்கள், படகுகள் போன்ற வாழ்வாதாரத்தையும் குடிசைகளையும் இழந்துநிற்கும் காவிரி டெல்டா மக்களுக்கு, உடல்நலமும் மனநலமும் சீராவதற்கு, இப்படியான நடவடிக்கைகளை அரசு தொடர்ச்சியாகச் செய்தால் முழுப் பயனுள்ளதாக இருக்கும். 


டிரெண்டிங் @ விகடன்