வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (01/12/2018)

கடைசி தொடர்பு:20:39 (01/12/2018)

`மலம் அள்ளும் இயந்திரம் ஏன் இன்னும் கண்டுபிடிக்கவில்லை’ - பா.இரஞ்சித் ஆதங்கம்!

`டிஜிட்டல் உலகில் இருக்கிறோம். பயங்கரமான முன்னேற்றம் கண்டுள்ளோம். இப்படியிருக்க மலம் அள்ளும் தொழிலாளர்களுக்கு இங்கு கருவி இல்லை. இதுபற்றி நாம் எப்போது யோசிக்கப்போகிறோம்’ என்று இயக்குநர் பா.இரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.

ரஞ்சித்

 

சென்னையில் அமெரிக்க தூரதரகம் மற்றும் நாளந்தா அறக்கட்டளை சார்பில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இயக்குநர் பா.இரஞ்சித் கலந்துகொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ``கஜா புயல் நிவாரணத்தில்கூட சாதி பார்க்கப்படுகிறது. டிஜிட்டல் உலகம் இது. பயங்கரமான முன்னேற்றம் அடைந்துள்ளோம். வி.எஃப்.எக்ஸ்-லில் எந்திரன் 2 வந்திருக்கு, உலகம் முழுவதும் அதைப்பற்றி பேசுகின்றனர். ஆனால், மலம் அள்ளும் தொழிலாளர்களுக்கு கருவி இல்லை. இதைபற்றி நாம் எப்போது யோசிக்கப்போகிறோம். எவ்வளவு இன்ஜினீயர்ஸ் இருக்கிறார்கள். சிறந்த ஆளுமைகள் இந்தியாவிலிருந்துதான் உலகம் முழுவதும் பரவிக்கிடக்கின்றனர். சக சகோதரன் மலக்குழியில் இறங்கி உயிரிழந்துகொண்டிருக்கிறான்.போன மாதம் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

உங்களுடைய தேவை அதுவாகவே இல்லை. அதைப்பற்றி யோசிக்கக்கூட நமக்குத் தோன்றுவதில்லை. அதேபோல இந்த ஆண்டு மட்டும் 109 ஆணவப் படுகொலைகள் தமிழகத்தில் நடைபெற்றுள்ளன. நாம் அனைவரும் சமமாக இருக்கிறோமா என்றால் நிச்சயம் இல்லை. இந்தச் சமூகம் நம்மை எல்லா விதத்திலும் பிரித்து வைத்துள்ளது. பாலினம் மீதான சமத்துவம் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவேயில்லை. கஜா புயலால் மக்கள் மோசமான அளவில் பாதிப்படைந்துள்ளனர். அவர்களுக்குத் தேவையான நடவடிக்கைகள் போதுமான அளவில் இல்லை. தமிழக அரசு துணை ராணுவத்தை அழைத்து போர்க்கால அடிப்படையில் செயல்பட்டிருக்க வேண்டும். அதை செய்யாதது வருத்தமளிக்கிறது’’ என்றார்