வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (02/12/2018)

கடைசி தொடர்பு:00:30 (02/12/2018)

`பொன்.மாணிக்கவேல் பணி சிறக்க வேண்டும்’- குளித்தலையில் சிறப்பு வழிபாடு!

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு சிறப்பு அதிகாரியாக ஐஜி  பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்ட நிலையில், அவரது பணி சிறக்க வேண்டும் என்று கோரி, குளித்தலையில் சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டுள்ளனர் ஆன்மிக அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

 பொன்.மாணிக்கவேல் பெயரில் பூஜை

பணி ஓய்வுபெற்ற நாளில், சிலைக்கடத்தல் பிரிவுக்கு இன்னும் ஒரு வருடத்திற்கு பணி நீட்டிப்பு வழங்கச் சொல்லி, உயர் நீதிமன்றம் உத்தரவிட, ஐஜி பொன்.மாணிக்கவேல் பணி சிறக்க வேண்டும் என்பதற்காக குளித்தலையில் காலபைரவருக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிப்பட்டிருக்கிறார்கள் ஆன்மிக அமைப்பைச் சேர்ந்தவர்கள். ரயில்வே துறை ஐஜி-யாக இருந்ததோடு,சிலை கடத்தல் பிரிவின் சிறப்பு அதிகாரியாகவும் இருந்து 250 கோடி மதிப்புள்ள கடத்தப்பட்ட தமிழக சிலைகளை அதிரடியாக மீட்டவர், பொன்.மாணிக்கவேல்.

பக்தர்களுக்கு இனிப்பு வழங்கப்படுகிறது...
 

இவர், ஓய்வுபெற இருந்த நிலையில், 'சிலை கடத்தல் பிரிவுக்கு இன்னும் ஒரு வருடத்திற்கு பணி நீட்டிப்பு செய்ய வேண்டும்' என்று உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. யானை ராஜேந்திரன் என்ற வழக்கறிஞர் தாக்கல்செய்த வழக்கில்தான் இப்படி அதிரடியாக தீர்ப்பு சொல்லியிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். இந்த உத்தரவால், தமிழக அரசு அதிர்ச்சியடைந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், ஐஜி பொன்.மாணிக்கவேலுக்கு சிலை கடத்தல் பிரிவில் ஒரு வருடத்திற்கு பணி நீட்டிப்பு வழங்கி இருப்பது சமூக வலைதளங்களில் பலத்த பாராட்டைப் பெற்றுவருகிறது. குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் பொன்.மாணிக்கவேலுக்கு வழங்கப்பட்டிருக்கும் பணி நீட்டிப்பு விவகாரம் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. பொன்.மாணிக்கவேல், 'எனது பணி நீட்டிப்பால் பல கடத்தப்பட்ட சிலைகளை மீட்பேன். அதோடு, இந்தப் பணிக்கு எனக்கு சம்பளம்கூட வேண்டியதில்லை' என்று சொல்லியிருக்கிறார். இந்நிலையில், தமிழ்நாடு இந்து திருக்கோயில் கூட்டமைப்பு சார்பாக குளித்தலை கடம்பனேஸ்வரர் கோயிலில் பொன்.மாணிக்கவேல் பெயரில் பூஜைகளும், அங்குள்ள காலபைரவருக்கு சிறப்பு பூஜைகளும் செய்து அசத்தியிருக்கிறார்கள். அதோடு, அங்கு வந்த நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு மறுபடியும் பொன்.மாணிக்கவேலை சிலை கடத்தல் பிரிவில் நியமித்திருக்கும் மகிழ்வை கொண்டாடும் விதமாக இனிப்புகள் வழங்கினர்.
 அருள்வேலன்இது தொடர்பாக நம்மிடம் பேசிய அந்த அமைப்பின் மாநிலச் செயலாளர் அருள்வேலன்,
 "தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜசோழன் சிலை உள்ளிட்ட பல பாரம்பர்ய சிலைகளை பொன்.மாணிக்கவேல் டீமோடு போய் அசால்டாக கைப்பற்றி வந்தார். அவர், இன்னும் பல சிலைகளை மீட்பதற்குள் பயந்த தமிழக அரசு, இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றியது. ஆனால், ரயில்வே துறை ஐஜி-யாக இருந்த அவர், கூடுதல் பொறுப்பாகத்தான் இந்த சிலை கடத்தல் விவகாரத்தைக் கையாண்டார். அப்போதே இவ்வளவு சிலைகளை மீட்டிருக்கிறார். சிலை கடத்தல் பிரிவிலேயே இருந்தால், எவ்வளவு சிலைகளை மீட்டிருப்பார்? அதனால், 'அவரை சிலைக்கடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்க வேண்டும்'னு பலமுறை எங்க அமைப்பு சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தோம். இந்நிலையில்தான், அவர் பணி ஓய்வுபெற்ற நாளில் அவரை ஒரு வருடத்திற்கு சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தச் செய்தி எங்களுக்கு பேரானந்தத்தைத் தந்தது. சிலை கடத்தல் பிரிவு காலத்தையே மாற்றியவர் பொன்.மாணிக்கவேல். அதனால்தான், அவர் பெயரில் குளித்தலை கடம்பனேஸ்வரர் கோயிலில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினோம். காசிக்கு இணையான கோயில் கடம்பனேஸ்வரர் கோயில். காசி கங்கையை நோக்கி வடக்குப் பக்கமாக இருப்பது போலவே வடக்கு நோக்கி காவிரியைப் பார்த்திருக்கும் கோயில் இது. அதனால், பொன்.மாணிக்கவேலுக்கு எல்லா சக்திகளையும் கொடுக்க வேண்டும்னு வேண்டிக்கிட்டோம். பக்தர்களுக்கு இனிப்பு வழங்கினோம். தமிழக அரசு, சிலை கடத்தல் பிரிவில் இவருக்கு முழு அதிகாரத்தைக் கொடுத்து, சுதந்திரமா செயல்பட விடணும். அதேபோல, சிலை கடத்தலில் பல பெரிய புள்ளிகளும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அதனால், பொன்.மாணிக்கவேலுக்குத் தேவையான பாதுகாப்பையும் வழங்க வேண்டும். அவரது பணியில் தமிழக அரசு இடையூறு ஏதும் செய்தால், எங்களைப்போன்ற உண்மையான ஆன்மிக அமைப்புகள் அவருக்கு அரணாக நிற்போம்" என்றார் முத்தாய்பாக.