வெளியிடப்பட்ட நேரம்: 03:30 (02/12/2018)

கடைசி தொடர்பு:03:30 (02/12/2018)

தாம்பரத்தில் ரவுடி வெட்டிக் கொலை -இருவரைக் கைது செய்து போலீஸ் தீவிர விசாரணை

குடிக்கும் போது இரண்டு ரவுடிகளுக்கிடையே ஏற்பட்ட தகறாறில் ரவுடி ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தாம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தாம்பரம் ரவுடி அமுல்ராஜ் கொலை

மேற்கு தாம்பரம், மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அமுல்ராஜ். கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட 15 -க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர் மீது இருக்கின்றன. அதேபகுதியில் உள்ள ரங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வேலு. சமீபத்தில் ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த ஒருவரை வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார் வேலு. அவரிடம் பேசுவதற்கு அமுல்ராஜ் அழைத்திருந்தார். ஆனால் வேலு அமுல்ராஜை சந்திக்கச் செல்லவில்லை. இந்நிலையில் நேற்று மாலை தாம்பரம் ரங்கநாதபுரம் பகுதியில் உள்ள ஏரிக்கரையில் வேலு நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார்சைக்கிளில் வந்த அமுல்ராஜ் வேலுவுடன் சேர்ந்து மது அருந்தினார்.

அப்போது ‘போன் செய்தால் எடுக்க மாட்டியா?’ எனக் கேட்டு அமுல்ராஜ் தகராற்றில் ஈடுபட்டு வேலுவை எட்டி உதைத்துள்ளார். உடனே வேலுவும் அவரது நண்பர் ரமேஷ் என்பவரும் சேர்ந்து அமுல்ராஜை கட்டையால் அடித்து, அரிவாளால் வெட்டி இருக்கிறார்கள். இதில் சம்பவ இடத்திலேயே இறந்த அமுல்ராஜை ஏரிக்கரையில் தள்ளி விட்டு வேலுவும் அவரது கூட்டாளிகளும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாகத் தகவல் கிடைத்து காவல்துறையினர் வேலு அவரது கூட்டாளி இருவரையும் கைது விசாரணை நடத்தி வருகிறார்கள். அமுல்ராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காகக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க