வெளியிடப்பட்ட நேரம்: 01:30 (02/12/2018)

கடைசி தொடர்பு:02:32 (02/12/2018)

சென்னை வேளச்சேரியில் தீ விபத்து -துரிதமாகச் செயல்பட்டு கட்டுப்படுத்திய தீயணைப்புத்துறை

சென்னை வேளச்சேரி பகுதியில் தரமணி செல்லும் காந்தி சாலையில் இயங்கிவரும்  சூப்பர் மார்கெட் ‘ஸ்ரீ பெரியாண்டவர் சூப்பர் பஜார்’. வேளச்சேரியின் முக்கியப் பகுதியில் இயங்கிவரும் இந்த சூப்பர் மார்கெட்டில் இன்று மாலை 7 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் சூப்பர் மார்கெட்டின் பின்பகுதியில் அமைந்துள்ள குடோன் முழுவதும் தீக்கிரையாகியது. இந்தத் தீயில் அதில் வைத்திருந்த அனைத்துப் பொருள்களும் சேதமடைந்துவிட்டன. சேதமதிப்பு குறித்து இதுவரை  எந்தத் தகவல்களும் வெளியிடப்படவில்லை.

தீ விபத்து

 

இந்தச் சூப்பர் பஜாரின் பின்பகுதியில் அமைந்திருந்த குடிசைப் பகுதியைச் சீரமைக்கும்  பணி நடைபெற்று வந்துள்ளது. அப்போது குடிசையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அந்தத் தீ வேகமாக அருகில் இருந்த சூப்பர் பஜாருக்கும் பரவியிருக்கிறது. விடுமுறை நாளான இன்று கூட்டம் அதிகமாக இருக்கும். அதுவும் மாலை நேரத்தில் மற்ற நாள்களைவிடக் கூட்டம் சற்று அதிகமாக இருக்கும் இந்த சூப்பர் மார்கெட்டில்  எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்தத் தீ விபத்தில் காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை.

தீ விபத்து பற்றிக் கேள்விப்பட்ட தீயணைப்புப் படையினர் உடனடியாக விபத்து நடந்த இடத்திற்குச் சென்று தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

வேளச்சேரி காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விபத்து குறித்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.