வெளியிடப்பட்ட நேரம்: 02:30 (02/12/2018)

கடைசி தொடர்பு:03:42 (02/12/2018)

சாலை பாதுகாப்பு குறித்து மதுரை போலீஸ் கமிஷனரின் வேண்டுகோள்!

`விபத்தில் மரணமில்லா டிசம்பர்' என்ற தலைப்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புஉணர்வு இணையதளத்தை மதுரை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மதுரை மாநகர காவல்துறை ஆணையாளர் டேவிட்சன் தேவாசீர்வாதம் துவக்கி வைத்தார்.

மதுரை

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் அதிக விபத்துக்கள் நடைபெறுகின்றன. சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் தான் சாலை விபத்து அதிகம். ஆண்டின் கடைசி மாதம் என்பதாலும், விழாக்கள் அதிகமாக கொண்டாடப்படுவதாலும் விபத்துக்கள் அதிக அளவு அரங்கேறுகின்றன. வாகனங்களை அதிவேகமாக ஓட்டுவதாலும், ஓவர் டேக் செய்வதாலும் விபத்துகள் சாதாரணாமாக நடைபெறுகின்றன. இரு சக்கர வாகன ஓட்டிகள் 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லவேண்டாம். மது அருந்தி , ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டுவதை முற்றிலுமாக தவிற்கவேண்டும்.

மதுரையில் ஆண்டு தோறும் சுமார் 900 விபத்துகள் நடைபெறுகிறது. அதில் 200 -க்கு மேற்பட்ட மரணங்களில் முடிகிறது. 18 வயதுக்கு குறைவான இளைஞர்கள் வாகனங்களை இயக்கி உயிர் இழக்கும் சம்பவங்களும் நடைபெறுகிறது. எனவே வாகன ஓட்டிகள் கவனமாக செயல்பட்டு விபத்துகளை தவிர்கவேண்டும். குறிப்பாக டிசம்பர் மாதத்தில் சாலைவிபத்துகளை முற்றிலுமாக குறைக்கவேண்டும். விபத்துகளை தடுக்க மதுரையின் முக்கிய வீதிகளில் பள்ளி, கல்லூரிகளில் உள்ள என்.எஸ்.எஸ். மாணவர்கள் மூலமாக சாலை விழிப்புஉணர்வு பிரச்சார துண்டு பிரசுரங்கள் காவல்துறை சார்பாக வழங்கப்பட உள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்கள், கேபிள் டி.வி.க்கள், சினிமா தியேட்டர்களில் வீடியோ, ஆடியோ மூலமாக சாலை விழிப்புஉணர்வு பொது மக்களுக்கு ஏற்படுத்த உள்ளோம்.

மேலும் செல்போன் குறுஞ்செய்திகள் மூலமாக மாணவ - மாணவிகள்,பொது மக்களுக்கும் தெரிவுக்க உள்ளோம். விபத்தில் மரணமில்லா டிசம்பர் விழிப்புஉணர்வை அறிந்துகொள்ள safemadurai.org என்ற இணைய சேவையை பயன்படுத்தலாம்” என்றார்.