வெளியிடப்பட்ட நேரம்: 09:55 (02/12/2018)

கடைசி தொடர்பு:09:55 (02/12/2018)

‘கிணற்றுக்குள் விழுந்த கார்!’ - மனைவி, குழந்தையுடன் துணை நடிகர் படுகாயம்

ஆம்பூர் அருகே சாலையோர கிணற்றில் கார் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் சினிமா துணை நடிகர், மனைவி மற்றும் குழந்தையுடன் பலத்த காயமடைந்தார்.

கிணற்றுக்குள் விழுந்த கார்

சென்னை ஆவடி இந்து கல்லூரி பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. சினிமா துணை நடிகரான இவர், ஒரு சில இந்தி படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் திரைக்கு வந்த ரஜினியின் ‘2.o’  படத்தில் கிராபிஃக்ஸ் எடிட்டராக பணியாற்றியதாக கூறப்படுகிறது. சுந்தரமூர்த்தி இன்று அதிகாலை தனது மனைவி மாயா மற்றும் 4 வயது ஆண் குழந்தை கீர்த்திஸ் ஆகியோருடன் காரில் சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு சென்று கொண்டிருந்தார். வேலூர் மாவட்டம் ஆம்பூரை கடந்து மின்னூர் பகுதியில் சென்றபோது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. தாறுமாறாக ஓடிய கார் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள சுமார் 60 அடி ஆழமுள்ள தரைமட்ட கிணற்றில் விழுந்தது. புதர்மண்டி பாழடைந்த அந்த கிணற்றில் தண்ணீர் இல்லாததால் கார் நொறுங்கியது. துணை நடிகர் சுந்தரமூர்த்தி, அவரின் மனைவி, குழந்தை ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனர்.

உயிருக்குப் போராடிய நிலையிலும், தன்னுடைய செல்போனை எடுத்து 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தார் சுந்தரமூர்த்தி. ஆனால், ‘இவர் வெளியூர்காரர் என்பதால் ஆம்பூரில் எந்த பகுதியில் விபத்து ஏற்பட்டது’ என்பதை சொல்லத் தெரியவில்லை. உடனடியாக ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆம்பூர் தாலுகா போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். சுந்தரமூர்த்தியின் செல்போன் நம்பரை போலீஸார் ‘டிராக்’ செய்தனர். சுமார் ஒன்றரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு மின்னூரில் உள்ள கிணற்றில் கார் கிடப்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் மற்றும் அவரின் கார் டிரைவர் சரவணன் ஆகியோர் பொதுமக்கள் உதவியுடன் கிணற்றுக்குள் கிடந்தவர்களை மீட்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டரின் டிரைவர் சரவணன் இடுப்பில் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறக்கப்பட்டார்.

படுகாயமடைந்த மூவரையும் மீட்டு மேலே கொண்டு வந்தனர். குழந்தையை மீட்டபோது கொடிய விஷம் கொண்ட நாகப்பாம்பு இடை மறித்தது. பாம்பிடம் சிக்காமல் குழந்தையை கார் டிரைவர் பத்திரமாக மீட்டு மேலே கொண்டு வந்தார். துணை நடிகர் உள்பட மூவருக்கும் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தங்களின் உயிர்களையும் பொருட்படுத்தாமல் மூன்று உயிர்களைப் போராடி காப்பாற்றிய இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் மற்றும் அவரின் கார் டிரைவர் சரவணனை பொதுமக்கள் பாராட்டினர். தாமதமாக வந்த தீயணைப்புத்துறையினர் கிணற்றுக்குள் விழுந்த காரை மீட்பதில் சிக்கல் இருப்பதாகத் தெரிவித்தனர். தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள பாழடைந்த அந்த கிணற்றை உடனடியாக மூட வேண்டுமெனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.