குடும்பத்தினருடன் மாட்டுவண்டியில் விசிட் அடித்த கலெக்டர்! - வியப்பில் ஆழ்ந்த ஊழியர்கள் | Kanyakumari collector visit Orchard travelling with Bullock cart

வெளியிடப்பட்ட நேரம்: 12:05 (02/12/2018)

கடைசி தொடர்பு:12:05 (02/12/2018)

குடும்பத்தினருடன் மாட்டுவண்டியில் விசிட் அடித்த கலெக்டர்! - வியப்பில் ஆழ்ந்த ஊழியர்கள்

கன்னியாகுமரி கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தனது குடும்பத்துடன் மாட்டு வண்டியில் வலம்வந்த சம்பவம் ஊழியர்கள் மத்தியில் ஆச்சிரயத்தை ஏற்படுத்தியது.

பிரசாந்த் மு.வடநேரே

கன்னியாகுமரி அரசு பழத்தோட்டம், கடந்த 1922-மாண்டு அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தான மகாராஜாவால் தொடங்கப்பட்டது. சுமார் 31.76 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அரசு பழத்தோட்டத்தில் பலவகை பழங்கள் உள்ளிட்ட தோட்டச் செடிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அரசு பழத்தோட்டத்தை சுற்றுலா மையம் ஆக்குவதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் வீட்டுத்தோட்டம் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஆர்வம் ஏற்படும் என மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த பழத்தோட்டத்தில் சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்கா தொடங்கப்பட்டது. மீதம் உள்ள 16 ஏக்கர் நிலப்பரப்பில் பண்ணைசுற்றுலா திட்டம் கடந்த மாதம் செயல்படுத்தப்பட்டது. இந்த பண்ணை சுற்றுலாவில் விவசாயிகள் பசுமை பயிற்சி கூடம், இயற்கை வேளாண்மை தேவைக்கு இயற்கை உரம் தயாரிப்பு முறை, மூலிகை தோட்டம், பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு தோட்டம் அமைப்பது, நியூட்டிரிஷன் கார்டன், மீன்பிடி தொட்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பொது மக்களின் கண்ணை கவரும் வகையில் அமைந்து உள்ளது.  பண்ணைச் சுற்றுலா விரிவாக்கத் திட்டத்தை குமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே குடும்பத்தினருடன் சென்று பார்வையிட்டார்.

கலெக்டர் குடும்பம்

பொதுமக்களிடம் திட்டம் குறித்து எடுத்துரைக்கத் தனது குடும்பத்தினருடன் மாட்டு வண்டியில் ஏறிய ஆட்சியர் பண்ணை பகுதி முழுவதிலும்  மாட்டுவண்டியில் வலம் வந்து பார்வையிட்டார். மாட்டுவண்டியை ஓட்டிய கலெக்டரை பார்த்து பழத்தோட்ட ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.