கோஃப்தா கறி,சப்பாத்தி,அடை ஆரோக்கியம் தரும் வாழைப்பூ ரெசிப்பிகள். | Try these healthy plantain flower recipes this weekend

வெளியிடப்பட்ட நேரம்: 12:41 (02/12/2018)

கடைசி தொடர்பு:12:41 (02/12/2018)

கோஃப்தா கறி,சப்பாத்தி,அடை ஆரோக்கியம் தரும் வாழைப்பூ ரெசிப்பிகள்.

ஆரோக்கியம், நிறைந்த வாழைப்பூ ரெசிப்பிகள்.

கோஃப்தா கறி,சப்பாத்தி,அடை ஆரோக்கியம் தரும் வாழைப்பூ ரெசிப்பிகள்.

வாழைப்பூ துவர்ப்பு சுவை கொண்டிருந்தாலும் வயிறு,குடல் சம்பந்தமான நோய்களுக்கு உடனடி தீர்வு கொடுக்ககூடியது.வாழைப்பூ பொரியல் என்ற வழக்கமான ரெசிப்பியை தாண்டி,புதுவிதமானவாழைப்பூ ரெசிப்பிகளை இந்த விடுமுறை நாட்களில் முயற்சி செய்து பாருங்கள்.

வாழைப்பூ கோஃப்தா கறி
கோஃப்தா தயாரிக்கத் தேவையானவை:

 நறுக்கிய வாழைப்பூ - 2 கைப்பிடி
 பொடியாக நறுக்கிய பெரிய 
வெங்காயம் - ஒன்று
 பொடியாக நறுக்கிய 
கொத்தமல்லித்தழை - 2 டீஸ்பூன்
 நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்
 பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
 உப்பு - தேவையான அளவு
 கடலை மாவு - 4 டேபிள்ஸ்பூன்
 எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
அரைக்க:
 தக்காளி - 2
 பெரிய வெங்காயம் - 2
 கசகசா - ஒரு டீஸ்பூன் (ஊறவைத்து அரைக்கவும்)
 முந்திரி - 5
 சோம்பு - ஒரு டீஸ்பூன்
கிரேவி தயாரிக்கத் தேவையானவை:
 எண்ணெய் - 6 டீஸ்பூன்
 சோம்பு - ஒரு டீஸ்பூன்
 பொடியாக நறுக்கிய
  பெரிய வெங்காயம் - ஒன்று
 இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
 மல்லித்தூள் (தனியாத்தூள்) - 2 டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
 கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - சிறிதளவு
 உப்பு - தேவையான அளவு
 சர்க்கரை - ஒரு டீஸ்பூன்
 கொத்தமல்லித்தழை - 2 டீஸ்பூன்

வாழைப்பூ

செய்முறை :
வாழைப்பூவைக் கள்ளன் நீக்கி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி, தண்ணீரில் போட்டு வைக்கவும். கோஃப்தா செய்யத் தேவையான பொருள்களில் எண்ணெய் நீங்கலாக மற்றவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து போண்டா மாவு பதத்துக்கு கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும். பிறகு உருண்டைகளாக உருட்டி சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை மிக்ஸியில் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தும், சோம்பு சேர்த்துத் தாளித்து பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இத்துடன் இஞ்சி - பூண்டு விழுது, அரைத்த மசாலா கலவை சேர்த்து வதக்கவும். பிறகு மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சர்க்கரையும் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிடவும். கிரேவியில் கோஃப்தா உருண்டைகளைச் சேர்த்து இறக்கி கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

வாழைப்பூ சப்பாத்தி
தேவையானவை:

 கோதுமை மாவு - கால் கிலோ
 பாசிப்பருப்பு - 5 டீஸ்பூன்
  நறுக்கிய வாழைப்பூ -  ஒரு கைப்பிடியளவு
 சின்ன வெங்காயம் - 7
 பச்சை மிளகாய் - ஒன்று
 பூண்டு - 2 பல்
 சீரகம் - 2 சிட்டிகை
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு
 தயிர் - 2 டீஸ்பூன்

                                                                                             சப்பாத்தி
செய்முறை :
வாழைப்பூவைக் கள்ளன் நீக்கிப் பொடியாக நறுக்கிவைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை சிறிதளவு தண்ணீர்விட்டு வேகவைத்து தண்ணீரை வடித்துக்கொள்ளவும். இத்துடன் வாழைப்பூ, வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, சீரகம், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி இறக்கவும். சூடு ஆறியதும், மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட் பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும். இதை கோதுமை மாவுடன் சேர்த்து, தயிர், உப்பு கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். பிறகு சப்பாத்திகளாக சுட்டெடுத்துப் பரிமாறவும்.

வாழைப்பூ அடை
தேவையானவை:

 வெங்காயம் - 2 
 கொத்தமல்லித்தழை  - 5 டீஸ்பூன் 
 கறிவேப்பிலை - 5 டீஸ்பூன் 
 தேங்காய் - 7 டீஸ்பூன் (நறுக்கியது)
 எண்ணெய் - தேவையானஅளவு 
அரைக்க:
 வாழைப்பூ - ஒன்று (சிறியது)
 புழுங்கல் அரிசி - அரை கிலோ
 கடலைப்பருப்பு - 100 கிராம்
 துவரம்பருப்பு - 100 கிராம்
 காய்ந்த மிளகாய் - 5
 சோம்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

                                                                                          அடை
செய்முறை :
வெங்காயம், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை மற்றும் தேங்காயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். புழுங்கல் அரிசி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு மூன்றையும் மூன்று மணி நேரம் ஒன்றாக ஊறவைக்கவும். வாழைப்பூவை நரம்பு நீக்கி சுத்தம் செய்துகொள்ளவும். இனி ஊற வைத்த அரிசி, பருப்புக் கலவையை கிரைண்டரில் சேர்க்கவும். இத்துடன் அரைக்கக் கொடுத்துள்ளவற்றில் மீதம் இருப்பதையும் ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும். போதுமான அளவு தண்ணீர் விட்டு கொரகொரப்பாக அரைக்கவும். இத்துடன் பெரிய வெங்காயம், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, தேங்காய் சேர்த்துக் கலக்கவும். அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சூடானதும், மாவெடுத்து ஊற்றி இருபுறமும் வேகவைத்து எடுத்துப் பரிமாறவும்.

வாழைத்தண்டுப் பச்சடி
தேவையானவை:

 பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - ஒரு கப்
 தயிர் - 200 மில்லி
 எண்ணெய் - 2 டீஸ்பூன்
 கடுகு, உளுந்து - தலா ஒரு டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிதளவு
 உப்பு - தேவையான அளவு
அரைக்க:
 கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடியளவு
 சீரகம் - கால் டீஸ்பூன்
 பச்சை மிளகாய் - 2

                                                                                              பச்சடி
செய்முறை :
நறுக்கிய வாழைத்தண்டைத் தண்ணீரில் போட்டு வைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை மிக்ஸியில் மையாக அரைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வாழைத்தண்டு, ஒரு டீஸ்பூன் தயிர், உப்பு சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடம் வதக்கி இறக்கவும். இத்துடன் அரைத்த கலவை, மீதமுள்ள தயிர் சேர்த்துக் கலந்துகொள்ளவும். பிறகு, அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து பச்சடியில் ஊற்றிப் பரிமாறவும்.


டிரெண்டிங் @ விகடன்