வெளியிடப்பட்ட நேரம்: 14:15 (02/12/2018)

கடைசி தொடர்பு:14:15 (02/12/2018)

இந்திய கடற்படை தினம்! ராமேஸ்வரத்தில் கடற்படை சாகச நிகழ்ச்சி

இந்திய கடற்படை தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி பகுதியில் இரு நாட்களுக்குக் கடற்படையின் ''பருந்து'' விமான தள வீரர்கள் சாகச நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர்.

இந்திய கடற்படை தின கொண்டாட்டம்
  

இந்திய கடற்படை 1971-ம் ஆண்டில் பாகிஸ்தானுடன் நடந்த போரின் போது டிசம்பர் 4-ம் தேதி கராச்சி துறைமுகம் மீது ரகசிய தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் போர் கப்பல்களான ஹபீஸ், கைபார் ஆகிய இரு கப்பல்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி மூழ்கடித்தது. மேலும் ஷாஜகான் எனும் கப்பலும் பலத்த சேதத்திற்கு உள்ளானது. மேலும் துறைமுகத்தில் இருந்த எரிபொருள் கிடங்குகளையும் அழித்தது. இந்த தாக்குதல்களுக்கு 'திரிசூலம்' மற்றும் 'மலைப்பாம்பு' எனப் பெயரிடப்பட்டது. இந்த வெற்றியினை கொண்டாடும் விதமாக டிசம்பர் 4-ம் தேதி இந்திய கடற்படை தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
 
ராமநாதபுரத்தை அடுத்துள்ள உச்சிப்புளி அருகே இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். பருந்து விமானப் படை தளம் உள்ளது. ஆண்டு தோறும் இங்கு டிசம்பர் 4-ல் கடற்படை தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதன் முறையாக ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் தனுஷ்கோடி அரிச்சமுனை பகுதியிலும் விமான படையினர் சாகச நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர். டிசம்பர் 3 மற்றும் 4-ம் தேதி மாலை 4.15 மணி முதல் 4.45 வரை தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியிலும், இதே நாட்களில் மாலை 4.45 மணி முதல் 5.30 வரை அக்னி தீர்த்த கடற்கரையிலும் இந்த சாகச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த இரு நிகழ்வுகளிலும் பார்வையாளர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பங்கேற்று விமான படையினரின் சாகசங்களை நேரில் கண்டு ரசிக்கலாம். இதற்கான விரிவான ஏற்பாடுகளை இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ் பருந்து விமான தள அலுவலர்கள் செய்துள்ளனர்.