”ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழகத்துக்குச் சாபக்கேடு!” - வைகோ சர்ச்சைப் பேச்சு | "Governor Panwarlial Purohit is a curse for Tamilnadu!" says vaiko

வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (02/12/2018)

கடைசி தொடர்பு:15:25 (02/12/2018)

”ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழகத்துக்குச் சாபக்கேடு!” - வைகோ சர்ச்சைப் பேச்சு

”ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 அப்பாவிகளை விடுதலை செய்ய ஆளுநர் மறுப்பது ஏன்? பிரதமர் மோடி நாட்டிற்குச் சாபக்கேடு என்றால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழகத்திற்கு சாபக்கேடு.” என ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலிதாவிற்கு ஓராண்டு சிறைத் தண்டனை அளித்ததற்காக 3 கல்லூரி மாணவிகளை அ.தி.மு.க தலைமையின் உத்தரவின் பேரில் பேருந்திற்குள் வைத்து பெட்ரோல் தீ வைத்துக் கொளுத்திய பாவிகள்  3 பேரை  விடுதலை செய்த ஆளுநர், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை பெற்றுவரும் 7 நிரபராதிகளை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கலாம் எனத் தலைமை நீதிபதி கூறிய பிறகும், அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத குற்றத்திற்காக ஆளுநர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும். 

தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும் போது, ஆளுநர் ஆய்வு என்ற பெயரில் அத்துமீறிச் செயல்பட்டு வருகிறார். மாவட்டந்தோறும் ஆட்சியாளர்களை அழைத்துப் பேசி வருகிறார். ஆளுநர் ஆட்சி நடந்தால் மாவட்டம் வாரியாக ஆய்வுக்குச் செல்லலாம். இப்படிப்பட்ட ஒரு ஆளுநர் தமிழ்நாட்டில் இருக்கக்கூடாது. நாட்டிற்குப் பிரதமர் மோடி எப்படி சாபக் கேடோ, அதே போல, தமிழகத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒரு சாபக்கேடு.

எந்த தவறும் செய்யாத 7 அப்பாவிகளை விடுதலை செய்ய பரிந்துரைக்க மறுப்பது ஏன்? இதனைக் கண்டித்து தி.மு.க., வி.சி.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள், அமைப்புகள் என 70 அமைப்புகள் கலந்து கொள்ளும் மாபெரும் போராட்டத்தை நடத்த இருக்கிறோம். இதில், நாங்கள் கேட்ட இடம் வரை செல்ல காவல்துறை அனுமதி மறுத்தால், மெரினாவில் திரண்ட ஜல்லிக்கட்டுப் போராட்டம் போல மிகப் பெரிய போராட்டமாக மாறும்.” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க