தமிழகத்தைத் தொடர்ந்து புறக்கணிக்கும் மோடி அரசு - ஜி.கே வாசன் ஆவேசம்! | GK Vasan slams Modi government

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (02/12/2018)

கடைசி தொடர்பு:16:00 (02/12/2018)

தமிழகத்தைத் தொடர்ந்து புறக்கணிக்கும் மோடி அரசு - ஜி.கே வாசன் ஆவேசம்!

ஒத்த கருத்துடைய எந்தக் கட்சியாக இருந்தாலும் அக்கூட்டணியில் த.மா.க இணையும் என 5ம் ஆண்டு  துவக்க விழாவில் ஜி.கே. வாசன் அறிவித்துள்ளார்.

ஜி கே வாசன்

அரியலூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 5-ம் ஆண்டு துவக்க விழா மற்றும் பொதுக்கூட்டம் அரியலூர் பைபாஸ்ச் சாலையில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் ஞானதேசிகன், சித்தன், மற்றும் முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் அனைத்து அணி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பேசத் தொடங்கினார். ``த.மா.கா ஆரம்பிக்கப்பட்ட போது இருந்த ஆர்வம் இன்றும் மக்களிடம் உள்ளதைக் காணமுடிகிறது. லட்சியத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி த.மா.கா. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு இதுவரை நிவாரணம் வழங்காமலிருப்பது வேதனை அளிக்கிறது. ஏற்கனவே 2, 3 புயல் தாக்கிய போதும் மத்திய அரசு முறையாக நிவாரணம் வழங்கவில்லை. 1000 கோடி நிவாரணம்  என்பது போதுமானதல்ல. கூடுதலாக நிதியை அரசு வழங்க வேண்டும். வீடுகளை இழந்தவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டிதர வேண்டும்'' என்றார். 

 

``மத்தியில் உள்ள பா.ஜ.க மதவாத கட்சியாக உள்ளது. நாடாளுமன்ற தேர்தலின் போது அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக உள்ளது. மத்திய பா.ஜ.க மற்றும் மாநில அ.தி.மு.க அரசுகளின் மீது மக்களுக்குள்ள நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது. மாநில அரசைப் பொறுத்தமட்டில் விவசாயிகள், அரசு ஊழியர்கள் மற்றும் நெசவாளர்களின் பிரச்னைகளை காது கொடுத்து கேட்கும் அரசாக இல்லை. மக்கள் விரும்பாத எதிர்க்கின்ற திட்டங்களைச் செயலாக்கும் அரசாக மத்திய மாநில அரசுகள் உள்ளது. மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு மறைமுகமாக ஆதரவு தருகிறது. அதனைக் கண்டித்து வரும் 8ம் தேதி கிருஷ்ணகிரியில் த.மா.கா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். 

பெட்ரோல், டீசல், ஜிஎஸ்.டி உள்ளிட்ட பிரச்னைகளில் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். ஆட்சிக்கு வந்தவுடன் 1 கோடி இளைஞர்களுக்கு வேலைத் தருவதாக கூறிய மோடி இதுவரை எத்தனை இளைஞர்களுக்கு வேலைக் கொடுத்துள்ளார். மேலும், கருப்புப் பணத்தை இதுவரை மீட்க வில்லை. பா.ஜ.க, அ.தி.மு.கவுக்கு மக்களின் மீது அக்கரையில்லை. கஜா புயலால் ஏற்பட்டுள்ள பெரிய பாதிப்பைப் பிரதமர் பார்க்காதது கண்டனத்திற்குரியது. த.மா.கா எந்த பலமும் இல்லாமல் மக்கள் பலத்தை மட்டுமே நம்பி இயங்கும் கட்சி. தேர்தல் நேரத்தில் ஒருமித்த கருத்துடைய கட்சியுடன் கூட்டணி அமைக்கும். அக்கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் தயாராக இருக்க வேண்டும் என முடித்தார்.