வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (02/12/2018)

கடைசி தொடர்பு:17:00 (02/12/2018)

`ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறது!’ - கனிமொழி

”ஸ்டெர்லைட் ஆலை தற்போது மூடப்பட்டுள்ள நிலையில் காற்று மாசு குறித்து ஆய்வு நடத்தினால் மாசு இருப்பது எப்படி தெரியும்?. உண்மை நிலை எப்படி தெரியும்?. ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறது” என தி.மு.க மாநிலங்களவை எம்.பி., கனிமொழி குற்றம்சாட்டியிருக்கிறார்.

கனிமொழி

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த கனிமொழி, செய்தியாளர்களிடம் பேசுகையில், ``கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் இதுவரை முறையாக வழங்கப்படவில்லை. குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. அப்பகுதி மக்கள் சாப்பாட்டிற்கு கூட கஷ்டப்படும் நிலையே காணப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய அரசால் அனுப்பி வைக்கப்பட்ட குழுவும், சரியாகப் பார்வையிடவில்லை. தென்னை, வாழை உள்ளிட்ட விளை பயிர்களின் சரிவால் விவசாயம் அடியோடு அழிந்துவிட்டது. அவர்கள் மீண்டு வருவதற்கே சில ஆண்டுகள் ஆகும் என்ற நிலையில், இதற்காக அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகை போதாது. எந்தப் பிரச்னையையும் தமிழக அரசு முறையாகக் கையாளவில்லை.

தன் ஆட்சியை நிலை நிறுத்திக்கொள்ள மத்திய அரசு எடுக்கும் எந்த முயற்சிக்கும், முடிவிற்கும் கட்டுப்பட்டு தமிழர்களையும் தமிழ்நாட்டையும் வஞ்சித்துக் கொண்டுதான் உள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் பசுமைத் தீர்ப்பாயத்தில் ஆலையினால் ஏற்படும் மாசு, பாதிப்பு குறித்து தமிழக அரசு தன் தரப்பு வாதத்தை முறையாக எடுத்து வைக்கவில்லை. ஸ்டெர்லைட் ஆலை தற்போது மூடப்பட்டுள்ள நிலையில் காற்று மாசு குறித்து ஆய்வு நடத்தினால் மாசு இருப்பது எப்படி தெரியும்?. உண்மை நிலை எப்படி தெரியும்?. ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறது” என்றார்.   

நீங்க எப்படி பீல் பண்றீங்க