கோவை காட்டு யானைகள் விவகாரம்... விவசாயிகள் நெருக்கடி! - என்ன செய்யப்போகிறது வனத்துறை? | Coimbatore wild elephant issue: meeting conducted in forest office

வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (02/12/2018)

கடைசி தொடர்பு:18:30 (02/12/2018)

கோவை காட்டு யானைகள் விவகாரம்... விவசாயிகள் நெருக்கடி! - என்ன செய்யப்போகிறது வனத்துறை?

கோவை காட்டுயானைகளை இடமாற்றம் செய்வது தொடர்பாக, மாவட்ட வன அலுவலகத்தில் பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது.

ஆலோசனை கூட்டம்

கோவை, மாங்கரை, தடாகம், ஆனைகட்டி பகுதிகள் வனப்பகுதியை ஒட்டி இருக்கின்றன. இதனால், அந்தப் பகுதிகளில் காட்டு யானைகள் வருவது வழக்கம். இதனிடையே, அதில் விநாயகன் மற்றும் சின்னத்தம்பி என்றழைக்கப்படும் யானைகள், விவசாய நிலங்களை சேதப்படுத்துவதால், அவற்றை இடமாற்றம் செய்யவேண்டும் என்று அந்தப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால், இதற்கு சில சுற்றுசூழல் ஆர்வலர்களும் பொது மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, காட்டு யானைகளை விரட்ட விஜய், பொம்மன், சேரன், ஜான் ஆகிய 4 கும்கி யானைகள் வரப்பாளையம் பகுதியில் நிறுத்தப்பட்டன. இதுநடந்து கொண்டிருக்கும்போதே அந்த இரண்டு காட்டு யானைகளையும் பிடிக்க வனத்துறை மேலிடம் அனுமதி வழங்கியது. ஆனால், யானைகள் பிடிக்கப்படாமல் இருப்பதால் ஆத்திரமடைந்த விவசாயிகள், கடந்த சில நாள்களுக்கு முன்பு நடந்த குறைதீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டனர். அப்போது, "இடமாற்றம் செய்யும்போது, யானை செத்தாலும் தவறு இல்லை. எங்க உசுரு போகுது" என்று விவசாயிகள் கூறியிருந்தனர். இந்நிலையில், இந்தப் பிரச்னை தொடர்பாக வனத்துறை, விவசாயிகள், என்.ஜி.ஓ-க்கள்  கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட வன அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

கூட்டம் முடிந்தப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கோவை மண்டல முதன்மை வனப்பாதுகாவலர் தீபக் ஸ்ரீவத்சவா, "காட்டு யானைகளை விரட்ட வந்த கும்கிகளில், ஜான் என்ற யானை மஸ்தில் உள்ளது. அடுத்ததாக வஷீம் என்ற கும்கி யானையை அழைத்து வரவுள்ளோம். விவசாயிகளின் வேதனைகளை நாங்கள் நன்கு அறிவோம். அவர்களிடன் 7 நாள்கள் அவகாசம் கேட்டுள்ளோம். கும்கிகளை வைத்து, காட்டு யானைகளை விரட்ட முயற்சி செய்வோம்.  அது சரிவராத பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவெடுப்போம். பெரிய முடிவு எடுப்பதற்கு முன்பு, அனைத்துவிதமான முயற்சிகளிலும் ஈடுபடுவோம்" என்றார்.

விவசாயிகள் பிரதிநிதி கந்தசாமி,"மூன்று நாள்களுக்குள் பிரச்னைக்குரிய யானைகளை பிடிப்பதாக வனத்துறை உத்தரவாதம் கொடுத்துள்ளனர். தற்போது தென்னை மரத்துக்கு ரூ.500 தான் இழப்பீடு வழங்கப்படுகிறது. அதை ரூ.32 ஆயிரமாக அதிகப்படுத்த மேலிடத்துக்கு கடிதம் அனுப்புவதாக வனப் பாதுகாவலர் கூறியிருக்கிறார். யானையை விரைவில் பிடிக்கவில்லை என்றால், அடுத்தகட்ட போராட்டம் குறித்து ஆலோசித்து முடிவு எடுப்போம்" என்றார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட என்.ஜி.ஓ.க்கள், "அந்த இரண்டு யானைகளை விட மற்ற யானைகளால்தான் தொந்தரவு ஜாஸ்தி. இந்த யானைகளை இடமாற்றம் செய்வதால் தீர்வு ஏற்படாது. மனித உயிர்கள் முக்கியம். அதேநேரத்தில், காடுகளின் நலனுக்காக யானைகளின் நலம் குறித்தும் யோசிக்க வேண்டும்" என்றனர்.