ப்ளஸ் 1 மாணவர் சேர்க்கை 20 சதவிகிதம் குறைவு... பள்ளிக் கல்வித் துறை அதிர்ச்சி! | Plus one admission decreased... what impact will create in the future?

வெளியிடப்பட்ட நேரம்: 20:13 (02/12/2018)

கடைசி தொடர்பு:20:13 (02/12/2018)

ப்ளஸ் 1 மாணவர் சேர்க்கை 20 சதவிகிதம் குறைவு... பள்ளிக் கல்வித் துறை அதிர்ச்சி!

பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கையில் கணிதம் - உயிரியல் பாடப்பிரிவில் 20 சதவிகித அளவுக்கு மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளது.

ப்ளஸ் 1 மாணவர் சேர்க்கை 20 சதவிகிதம் குறைவு... பள்ளிக் கல்வித் துறை அதிர்ச்சி!

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் 20 சதவிகிதம் குறைந்திருப்பது, பள்ளிக்கல்வித் துறையில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இது எதிர்காலத்தில் பல பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கின்றனர் கல்வியாளர்கள்.

மாணவர் சேர்க்கை

ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர். ப்ளஸ் 1, ப்ளஸ் மாணவர்களுக்கு மடிக்கணினி, கல்வி உதவித்தொகை வழங்கி வரும் வேளையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ப்ளஸ் 1 வகுப்பில் மாணவர்கள் சேர்க்கை 61,000 குறைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கையில் கணிதம் - உயிரியல் பாடப்பிரிவில் மட்டுமே 20 சதவிகித அளவுக்கு மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளது. கடந்த 2017-18 கல்வியாண்டில் பதினொன்றாம் வகுப்பில் கணிதம் - உயிரியல் பாடப்பிரிவில் 2.60 லட்சம் மாணவர்கள் சேர, இந்தக் கல்வியாண்டில் (2018-19) 2.05 லட்சம் மாணவர்களே சேர்ந்துள்ளனர். இதைப்போலவே, கணிதம் - கணினி அறிவியல் பாடப்பிரிவில் மாணவர்கள் சேர்க்கை 12,000 குறைந்திருக்கிறது. கடந்தாண்டில் 1.50 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ள நிலையில் இந்த ஆண்டு 1.38 லட்சம் பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். ஆனால், வணிகவியல் பிரிவில் 12 சதவிகித அளவுக்கு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. கடந்தாண்டில் 1.33 லட்சம் பேர் மட்டுமே சேர்ந்திருந்தனர்.  இந்த ஆண்டு அது 1.49 லட்சம்  என அதிகரித்துள்ளது. 

ஒட்டுமொத்தமாக, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு 61,000 மாணவர்கள் சேர்க்கை குறைந்திருக்கிறது. அதாவது, 2017-18-ம் ஆண்டில் 8.61 லட்சம் மாணவர்கள், 2018-19 கல்வியாண்டில் 8 லட்சம் மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். 

மாணவர் சேர்க்கை

மேலும், அரசுப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பில் சேர்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது. இதுகுறித்து அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் விசாரித்தபோது, ``நீட் தேர்வு அறிமுகம், ப்ளஸ் 1 வகுப்புக்குப் பொதுத்தேர்வு அறிமுகம், புதிய பாடநூல்கள் அறிமுகத்தில் பாடப்புத்தகத்தின் பகுதிகள் கூடியிருப்பது என பல்வேறு காரணங்களால்தான் கணிதம் - உயிரியல் பாடப்பிரிவில் மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளது. அறிவியல் பாடப்பிரிவில் சேரும் மாணவர்களுக்கு வாய்ப்புகள் குறைவாக இருப்பதால் கணிதம்- உயிரியல், கணிதம்-கணினி அறிவியல் பிரிவில் சேர்வதில் போட்டி நிலவி வந்தது. ஆனால், இந்த ஆண்டு மாணவர்கள் போட்டி குறைந்ததால் குறைந்த மதிப்பெண் பெற்றுள்ள மாணவர்களுக்கும் கணிதம்-உயிரியல் பாடப்பிரிவிலேயே இடம் கிடைத்திருக்கிறது.

உதாரணத்துக்கு, கடந்த ஆண்டுகளில் அரசுப்பள்ளிகளிலேயே 400 மதிப்பெண்ணுக்குக் கூடுதலாக பெற்றவர்களுக்கு மட்டுமே கணிதம்-உயிரியல் பாடப்பிரிவில் இடம் கிடைத்தது. ஆனால், இந்த ஆண்டு 300 மதிப்பெண் பெற்றவர்களுக்கே இடம் கிடைத்திருக்கிறது. அரசுப் பள்ளிகளில் மட்டுமல்லாது, தனியார் பள்ளிகளிலும் இந்த நிலையே உள்ளது. 

சி.பி.எஸ்.இ பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பத்தாம் வகுப்புக்குப் பின்னர் மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கு மாறுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திலிருந்தே கேள்விகள் கேட்கப்படுகிறது என்ற நம்பிக்கையால் சி.பி.எஸ்.இ-யிலிருந்து ஸ்டேட் போர்டு பள்ளிக்கு மாறுவதும் குறைந்துவிட்டது. மேலும், தற்போது தமிழகத்தில் சி.பி.எஸ்.இ பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. இதனால் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் அதிகளவில் மாணவர்கள் சேர்க்கின்றனர். இதனால், மெட்ரிக் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையும் குறைந்து வருகிறது. 

மாணவர் சேர்க்கை

நீட் தேர்வே வேண்டாம் என்று போராடிய தமிழக அரசு, நுழைவுத்தேர்வுக்குப் பயிற்சி வகுப்புகளை நடத்தும் நிலைக்கு வந்துவிட்டது.  பிளஸ் டூ வகுப்பில் நிறைய மதிப்பெண் பெற்றால் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும் என்பது மாறி, நுழைவுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால் மட்டுமே வாய்ப்பு உண்டு. இதனால் கூடுதல் சுமையைத் தவிர்ப்பதற்காக மாணவர்கள் இதர பிரிவுகளை நாடிச் செல்கின்றனர்.

கணிதப் பிரிவில் படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றால் அரசு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்கும். ஆனால், பொறியியல் படித்தாலும் வேலை வாய்ப்பு கிடைக்காத நிலை உள்ளது. இதனால் பொறியியல் பாடத்துக்கான செல்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. வணிகப் பிரிவில் தேர்வு செய்பவர்களுக்கு ஏதேனும் ஒரு கலைக்கல்லூரியில் இடம் கிடைத்து விடுகிறது" என்ற காரணத்தை அடுக்கினர். 

``தனியார் கல்லூரிகளில் மருத்துவம் படிப்பதற்கான கட்டணத்தைக் குறைக்க வேண்டும், வேலை வாய்ப்பிலும் அரசு கவனம் செலுத்திட வேண்டும். இல்லையென்றால் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நிலவியது போன்ற வேலையில்லா திண்டாட்டம் மீண்டும் ஏற்படவும் வாய்ப்புள்ளது" என்று எச்சரிக்கை செய்கிறார்கள் கல்வியாளர்கள்.


டிரெண்டிங் @ விகடன்