வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (02/12/2018)

கடைசி தொடர்பு:22:00 (02/12/2018)

புறநோயாளிகள் சிகிச்சை டிசம்பர் 4ம் தேதி ஒருநாள் புறக்கணிப்பு! - அரசு மருத்துவர்கள் அறிவிப்பு

அரசு மருத்துவர்கள் சம்பள உயர்வு கேட்டு தமிழக அரசு மருத்துவமனைகளில் வரும் செவ்வாய்க் கிழமை புறநோயாளிகள் சிகிச்சை ஒருநாள் புறக்கணிப்பு போராட்டம் நடத்துகின்றனர்.

மருத்துவ சிகிச்சை

மத்திய அரசு மருத்துவர்கள் மற்றும் பிற மாநில அரசு மருத்துவர்களை ஒப்பிடும்போது தமிழக அரசு மருத்துவர்களுக்கு சம்பளம் குறைவு எனவும், அரசு மருத்துவர்களுக்கு தகுதிக்கேற்ற சம்பளம் வழங்க வேண்டும் எனக் கேட்டும் வரும் 4-ம் தேதி செவ்வாய்க்கிழமை அரசு மருத்துவமனைகளில் "புறநோயாளிகள் சிகிச்சை ஒருநாள் புறக்கணிப்பு" போராட்டம்  நடத்த அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து அரசு மருத்துவ சங்க கூட்டமைப்பு கன்னியாகுமரி மாவட்ட தலைவர் டாக்டர் பிரின்ஸ் பயாஸ் கூறுகையில், ``அரசு மருத்துவர்களுக்கு, கல்லூரி பேராசிரியரின் சம்பளம் கூட வழங்குவதில்லை. முதலில் பரிசிலீப்பதாக கூறி ஒரு குழு அமைத்தார்கள். அந்த குழுவுடன் ஒருமுறை நடந்த பேச்சுவார்த்தையில் சம்பள உயர்வு வழங்க மறுத்துவிட்டார்கள். இதனால் வரும் 4-ம் தேதி தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் தொடங்கி சிறிய அரசு மருத்துவமனைகள் வரை அனைத்திலும் புறநோயாளிகள் சிகிச்சை ஒருநாள் புறக்கணிப்பு போராட்டம் நடத்துகிறோம். தமிழகம் முழுவதும் உள்ள 17 ஆயிரம் மருத்துவர் புற நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்காமல் புறக்கணிப்பார்கள். ஆனால் உள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும்’’ என்றார். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றிக்காய்ச்சல் தீவிரமாக இருப்பதால் அரசு மருத்துவர்களின் போராட்டம் பாதிப்பை ஏற்படுத்தும்.