வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (02/12/2018)

கடைசி தொடர்பு:10:32 (03/12/2018)

`20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தவேண்டிய அவசியமே இல்லை!’ - சரத்குமார்

”தமிழகத்தில், காலியாக உள்ள 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தவேண்டிய அவசியமே இல்லை. சட்டமன்றத்தின் ஆயுட்காலம் இன்னும் இரண்டரை வருடங்கள் உள்ளன. ஒரு எம்.எல்.ஏ-வுக்கு, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற 5 ஆண்டு காலமே போதாது. இந்த நிலையில், இடைத்தேர்தல் நடத்தி ஏன் மக்களின் வரிப்பணத்தை வீணாக்க வேண்டும்?” என சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சரத்குமார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நடைபெற்ற உறவினரின் இல்லத் திருமண விழா மற்றும் மாவட்ட மகளிரணி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆலை மூடப்பட்ட பிறகும், மீண்டும் ஆலையை இயங்க அனுமதிக்கலாம் என்ற நோக்கில், தருண் அகர்வால் குழு பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல்செய்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த அறிக்கை மனவேதனையை அளிக்கிறது.

மேக்கே தாட்டூவில் அணை கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதே தமிழகத்திற்குப் பின்னடைவுதான். இரு மாநிலங்களுக்கிடையே ஓடுகின்ற நதி, ஒரு மாநிலத்திற்கு மட்டும் சொந்தமானதல்ல. இப்பிரச்னையில், மாநில அரசையும் அணுகி பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும். இதில், மத்திய அரசு பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாளுவதாகத் தெரிகிறது. இப்பிரச்னையில், தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு  தெரிவித்துவருகிறது. என்ன நடக்கிறது எனப் பார்ப்போம். 

1924-ம் ஆண்டிலிருந்து 50 ஆண்டுகள் ஒப்பந்தம் போடப்பட்டு, 1974-ம் ஆண்டு 489 டி.எம்.சி தண்ணீர் தர வேண்டும் என கூறப்பட்ட நிலையில், தற்போது அது 177 டி.எம்.சி-யாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். எனவே, கர்நாடகா அரசு அணை கட்ட பல காரணங்களைக் கூறினாலும், அணை கட்டக்கூடாது என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.

கஜா புயல் பாதித்த பகுதியில், பட்டா இல்லாத விவசாயிகளுக்கு நிவாரணம் கிடையாது என கூறப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகிறார்கள். பட்டா இல்லாத விவசாயிகளுக்கும் தவணை முறையில் அல்லாமல் விரைவாக நிவாரணம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் மோடி பார்வையிட தமிழகம் வராதது, தமிழகத்தை வஞ்சிப்பதாகவே உள்ளது..

தமிழகத்தில், காலியாக உள்ள 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தவேண்டிய அவசியமே இல்லை. சட்டமன்றத்தின் ஆயுட்காலம் இன்னும் இரண்டரை வருடங்களே உள்ளன. ஒரு எம்.எல்.ஏ-வுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற 5 ஆண்டுக்காலமே போதாது. இந்த நிலையில், இடைத்தேர்தல் நடத்தி ஏன் மக்களின் வரிப்பணத்தை வீணாக்க வேண்டும்?.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில், ஒரு தொகுதியில் காலியிடம் ஏற்பட்டால் அந்தத் தொகுதியில் ஏற்கெனவே நடந்த பொதுத்தேர்தலில் இரண்டாவது இடம் பிடித்தவரை அந்தத் தொகுதியின் பிரதிநிதியாக அறிவிக்க சட்டம் உள்ளது. அதுபோல, அரசியல் சட்டத்தைத் திருத்தி, சட்டமன்ற பொதுத் தேர்தலில் இரண்டாவது இடம் பிடித்தவரை அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக அறிவிக்க வேண்டும். இதனால், மக்களின் வரிப்பணம் வீணாகாது. வரும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் சமத்துவ மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடும். கட்சி  தொடங்கிய இந்த 10 ஆண்டுகளில், தனித்துப் போட்டியிடாதது மிகப்பெரிய தவறு என்பதை உணர்கிறேன்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க