வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (02/12/2018)

கடைசி தொடர்பு:10:20 (03/12/2018)

பொன்.மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிராக மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு!

சிலை கடத்தில் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஐஜி பொன்.மாணிக்கவேலின் நியமனத்துக்கு எதிராக மேல்முறையீடு செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

பொன்.மாணிக்கவேல்

தமிழகத்தில், இந்துஅறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோயில்களில், கோடிக்கணக்கான மதிப்புள்ள சிலைகள் காணாமல்போயின. இது, பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. சிலைகள் வெளிநாட்டுக்கு கடத்தபட்டிருப்பதாகத் தகவல் வெளியாகின. இதையடுத்து, சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரித்துவந்தது. தமிழகத்தில், கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 250 கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகளை இவர் தலைமையிலான குழு மீட்டிருக்கிறது. சிலைகள் விஷயத்தில் தமிழக அரசு அழுத்தம் தருவதாகவும், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்றும் பொன்.மாணிக்கவேல் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியிருந்தார்.

உச்சநீதிமன்றம்

 

சிலை கடத்தல் வழக்குகளை ஐஜி பொன்.மாணிக்கவேல் விசாரிப்பதில் தமிழக அரசுக்குத் திருப்தி இல்லை' என்று சிலை கடத்தல் வழக்குகளைத் தானாக முன்வந்து சிபிஐ-க்கு தமிழக அரசு மாற்றியது. சிலைக்கடத்தல் வழக்குகள் விசாரிக்கப்பட்டுவந்த நிலையில், ஐஜி பொன்.மாணிக்கவேல் கடந்த 30-ம் தேதியுடன் பணி ஓய்வுபெறுவதாக இருந்தார். ரயில்வே காவல்துறை சார்பில் அவருக்கு நடத்தப்பட்ட பிரிவு உபசார விழாவில், `இளைஞர்களை நம்பி இந்தப் பொறுப்பை விட்டுச்செல்கிறேன்’ என்று உருக்கமாக அவர் பேசியிருந்தார். இதனிடையே, தமிழக அரசின் அரசாணைக்கு எதிராக வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஐஜி பொன்.மாணிக்கவேலின் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ-க்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்துசெய்து உத்தரவிட்டது. மேலும், இன்றுடன் பதவி ஓய்வுபெற இருந்த ஐஜி பொன்.மாணிக்கவேல், சிலை கடத்தல் தடுப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக, அடுத்த ஒரு வருடத்துக்கு பதவியில் இருப்பார் என்றும் உத்தரவிட்டது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு தமிழக அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பொன்.மாணிக்கவேல் உத்தரவை ரத்துசெய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது தமிழக அரசு. அந்த வகையில், இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், ஐஜி பொன். மாணிக்கவேல் பணி நீட்டிப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நாளை அல்லது மறுநாள் மேல்முறையீடு செய்யப்பட்ட உள்ளது. மேலும், இதில் அறநிலையத்துறை மற்றும் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.