வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (03/12/2018)

கடைசி தொடர்பு:08:42 (03/12/2018)

'எம்.பி வந்திருக்கேன் கேட்டைத் திறக்கமாட்டியா?' - ரயில்வே கேட் கீப்பருடன் மோதிய திண்டுக்கல் எம்.பி

திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் உதயகுமார். இவர், தனது சொந்த ஊரான நிலக்கோட்டையிலிருந்து திண்டுக்கல்லுக்கு நேற்று மாலை சென்றிருக்கிறார். அப்போது, அழகம்பட்டி என்ற இடத்தில் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. 'எம்.பி அவசரமா போகணும். கேட்டை திற' என எம்.பி-யுடன் வந்த நபர்கள் கேட் கீப்பரிடம் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் ரயில் வரும் நேரம் என்பதால், 'கேட்டை திறக்க முடியாது' என கேட் கீப்பர் சொல்லியதாகவும், அதனால் ஆத்திரமான எம்.பி, கேட் கீப்பர் மணிமாறனைத் தாக்கியதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, ரயில்வே ஊழியர்கள் போராட்டம் நடத்தியதால் மதுரை-திண்டுக்கல் மார்க்கமாகச் செல்லும் ரயில்கள் சற்று தாமதமானது.

கேட் கீப்பர் மணிமாறன்

இதுதொடர்பாகப் பேசிய மணிமாறன்,'' சாயந்திரம் ரயில் வர்ற தகவல் எனக்கு கிடைச்சதும் நான் கேட்டை மூடினேன். கொஞ்ச நேரத்துல எம்.பி-யின் கார் வந்துச்சு. கார்லயிருந்து இறங்குனவங்க, 'கேட்டை திற கார்ல  எம்.பி இருக்காரு'ன்னு சொன்னாங்க. ரயில் வர்ற நேரத்துல யார் வந்தாலும் கேட்டை திறக்கக் கூடாது. மீறித் திறந்தா எனக்கு வேலை போயிடும்னு சொன்னேன். அப்ப, கார்லயிருந்து இறங்கி வந்த எம்.பி, ஒருமணி நேரம் கேட்டை மூடி வைப்பியா?ன்னு கேட்டாரு. நான், ஒரு மணி நேரம் இல்லை சார், இப்பத்தான் மூடினேன்னு சொன்னேன். எம்.பி-யவே எதிர்த்துப் பேசுறியா?ன்னு நெஞ்சுல கை வெச்சுத் தள்ளிவிட்டுட்டாரு. நான் மரத்துல மோதிட்டேன். எம்.பிகூட இருந்தவங்களும் என்னைத் தாக்குனாங்க'' என்றார்.

கேட் கீப்பர் புகாரை தொடர்ந்து, அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் எம்.பி உதயகுமார் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், கேட் கீப்பர் செல்போன் பயன்படுத்திக்கொண்டு கேட்டை மூடியதாகவும், இப்படி அலட்சியமாக இருக்கிறீர்களே என்று கேட்டதற்கு, தன்னை கேட் கீப்பர் மணிமாறன் தாக்கியதில் நெஞ்சில் காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

எம்.பி உதயகுமார் 

இந்நிலையில், கேட் கீப்பர் தாக்கியதால் நெஞ்சில் காயம் ஏற்பட்டதாகக் கூறி, மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளார் எம்.பி. இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க