வெளியிடப்பட்ட நேரம்: 03:21 (03/12/2018)

கடைசி தொடர்பு:08:26 (03/12/2018)

`அறையில் அடைத்துவைத்து இரும்புக் கம்பியால் தாக்கினர்’ - சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு நேர்ந்த கொடூரம்!

சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சோக்கிதானி கேளிக்கை கிராமத்தில், சுற்றிப்பார்ப்பதற்காக அழைத்துவரப்பட்ட தனியார் பள்ளிக் குழந்தைகளை அறைக்குள் அடைத்துவைத்து, இரும்புக் கம்பிகளால் ஊழியர்கள் தாக்கிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களை தாக்கியவர்கள் மீது புகார்

 

ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டுவருகிறது, சோக்கிதானி கேளிக்கை கிராமம். ராஜஸ்தான் கலாசார அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கேளிக்கை கிராமத்தில் பொழுதைக் கழிப்பதற்காக, தினந்தோறும் ஏராளமானோர் அங்கு குவிகின்றனர். அவ்வப்போது பள்ளிக் குழந்தைகளையும் பள்ளி நிர்வாகத்தினர் அழைத்துவந்து சுற்றிக்காட்டுகின்றனர். இந்த நிலையில், கடந்த 28-ம் தேதி, அங்கு அழைத்துவரப்பட்ட தனியார் பள்ளியைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகளை, இரும்புக்கம்பிகளால் ஊழியர்கள் சிலர் அடித்துத் துன்புறுத்தியதாக, பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

அவர்கள், அன்று நடந்ததை விவரித்தனர். “கடந்த 28-ம் தேதி காலை, 400-க்கும் மேற்பட்ட குழந்தைகளை சோக்கிதானி கிராமத்துக்கு அழைத்துச்சென்றுள்ளது பள்ளி நிர்வாகம். அவர்களை பத்திரமாகக் கவனித்துக்கொள்வதற்காக, 22 ஆசிரியர்களும் உடன் சென்றுள்ளனர். மதிய உணவு இடைவேளை வரை எல்லாம் சரியாகவே சென்றிருக்கிறது. ஆனால், உணவு இடைவேளையின்போது குழந்தைகளைத் தனியே விட்டுவிட்டு, அனைத்து ஆசிரியர்களும் வேறெங்கோ சென்றுவிட்டனர். அந்த நேரத்தில், அனைத்து குழந்தைகளையும் அங்கிருக்கும் சிறிய அறையொன்றில் அடைத்துவைத்துள்ளனர், கேளிக்கை கிராமத்தின் ஊழியர்கள் சிலர். குழந்தைகள், கூப்பாடுபோட்டு கதறியழுதுள்ளனர். ஆனாலும், ஊழியர்கள் கதவைத் திறக்கவில்லை. எல்லோரும் 3-ல் இருந்து 5-ம் வகுப்புவரை பயிலும் குழந்தைகள். ஏழெட்டு வயதே இருக்கும் குழந்தைகள். கொஞ்ச நேரம் கழித்து கதவைத்திறந்து உள்ளே வந்த சில ஊழியர்கள், அங்கிருந்த கம்புகளாலும் இரும்புக்கம்பிகளாலும் குழந்தைகளை அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். 

பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவனின் தந்தை கொதிப்புடன் பேசினார். “என் மகனுக்கு ஏழு வயதாகிறது. அவனை முழங்காலில் தாக்கியுள்ளனர். அவனால் இப்போது சரியாக நடக்க முடியவில்லை. நான்கு நாள்களாக பயந்துபோயிருக்கிறான். மனிதாபிமானமே இல்லாமல், மிருகங்களைப் போல நடந்துகொண்டுள்ளனர், சோக்கிதானி ஊழியர்கள். ஆசிரியர்கள் அந்த இடத்தில் இருந்திருந்தால் இப்படி நிகழ்ந்திருக்குமா? அவர்களை நம்பித்தானே குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புகிறோம். அவர்களே பொறுப்பற்று நடந்துகொண்டால் எப்படி?” என்றவர், சற்றுநேரம் அமைதியாகி மீண்டும் தொடர்ந்தார். ”வீட்டுக்கு வந்து வலியால் துடித்த பிள்ளைகளைக் கண்டு துடித்துப்போனோம். உடனே, பள்ளிக்குச் சென்று முறையிட்டோம். எங்களிடம் பேசிய நிர்வாகத்தினர், எங்களை சமாதானப்படுத்துவதில் குறியாக இருந்தார்களே தவிர, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள்மீது நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டனர்

’குழந்தைகளைப் பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்வார்கள்’ என்ற நம்பிக்கையில்தானே பள்ளிக்கு அனுப்பிவைக்கிறோம். ஆனால், குழந்தைகளை கவனிக்கவேண்டிய நிர்வாகமும் ஆசிரியர்களும் அக்கறையே இல்லாமல் நடந்துகொண்டுள்ளனர். லட்சக்கணக்கில் கட்டணம் வாங்குகிறார்கள். ஆனால், குழந்தைகளை பாதுகாப்பதில் கோட்டை விட்டுள்ளனர். பெற்றோர்கள் சார்பிலும், பள்ளி நிர்வாகத்தின் சார்பிலும் காவல் நிலையத்தில் புகார் அளித்து நான்கு நாள்களுக்கு மேலாகிறது. ஆனால், அந்தக் கொடூரத்தை செய்தவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் காவல் துறையினர் எடுக்கவில்லை. குழந்தைகள் என்றும் பாராமல், காட்டுமிராண்டித்தனமாக அடித்துத் துன்புறுத்திய ஊழியர்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும். மனிதத்தன்மையே இல்லாதவர்களைப் பணியில் அமர்த்தியிருக்கும் சோக்கிதானியின்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே சமயம், இதில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும். அப்போதுதான், இனிமேல் இதுபோன்ற கொடூரங்கள் நடக்காது” என்று முடித்தார்.

இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மற்றும் சோக்கிதானி நிறுவனம் விளக்கம் தந்தால், பதிவுசெய்யத் தயாராக இருக்கிறோம்.