வெளியிடப்பட்ட நேரம்: 05:07 (03/12/2018)

கடைசி தொடர்பு:07:58 (03/12/2018)

”படேலுக்கு 3000 கோடி... புயல் பாதிப்புக்கு 350 கோடியா?” - கனிமொழி காட்டம்!

”உயிரற்ற படேல் சிலைக்கு 3000 கோடி. ஆனால், உயிர் வாழத் துடிக்கும் புயலால் பாதித்த தமிழர்களுக்குக் 350 கோடியா” என்று, தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, மத்திய அரசை காட்டமாக விமர்சித்திருக்கிறார். 

கனிமொழி

நவம்பர் 16-ம் தேதி தமிழகத்தைத் தாக்கிய கஜா புயல், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களை புரட்டிப்போட்டது. ஊருக்கே உணவளித்துவந்த டெல்டா மக்களை, உணவுப் பொட்டலங்களுக்கு கரம் நீட்டும் நிலையை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில், நவம்பர் 22-ம் தேதி டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, 14,910 கோடி ரூபாய் நிவாரண நிதி கோரினார். அதற்கு, “ஆய்வுக்குழுவை அனுப்புகிறேன்” என்று, பிரதமர் மோடி பதில் தெரிவித்தார். அதன்படி, நவம்பர் 24-ம் தேதி தமிழகம் வந்த மத்தியக்குழுவினர், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மூன்று நாள்கள் ஆய்வு நடத்தினர்.

படேல்

பாதிக்கப்பட்ட மக்கள், அவர்களின் காலில் விழுந்து உதவி கோரிய காட்சிகள் கண்கலங்க வைத்தன. கஜா புயல் பாதிப்புகளைச் சரிசெய்வதற்காக, 350 கோடி ரூபாய் இடைக்கால நிவாரண நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. ”டெல்டா மாவட்டங்கள் வரலாறு காணாத பாதிப்புகளைச் சந்தித்துள்ள நிலையில், 350 கோடி ரூபாயை வைத்து எவ்வளவு பகுதிகளை மீட்க முடியும்?” என்று பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் அதிருப்தி தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில், தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, ”உயிரற்ற படேல் சிலைக்கு 3000 கோடியாம், உயிர்வாழத் துடிக்கும் புயலால் பாதித்த தமிழர்களுக்கு 350 கோடியாம்” என்று  ட்விட்டர் சமூக வலைதளத்தில், மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.