20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் சந்தேகமே! - தமிழிசை  | The by-election for 20 constituencies is doubtful says tamilisai

வெளியிடப்பட்ட நேரம்: 07:56 (03/12/2018)

கடைசி தொடர்பு:08:06 (03/12/2018)

20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் சந்தேகமே! - தமிழிசை 

'புயல் பாதிப்பால் 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுவது சந்தேகம்தான்' என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். 

தமிழிசை

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர், ``பருவமழைக் காலம் என்பதால் திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை தற்போதைக்கு நடத்த வேண்டாம் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டோம். எனவே திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பை தற்போது வெளியிடவில்லை. மேலும், தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதாலும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை நடத்துவதில் சிக்கல் உள்ளது" என்று கூறினார். தொடர்ந்து கஜா புயல் பாதித்த பகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவதுகுறித்து மக்களிடம் கருத்து கேட்டே முடிவுசெய்யப்படும் என அவர் கூறினார். 

இந்நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் நடைபெற்ற பா.ஜ.க செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ``மத்திய அரசின் நிவாரணப் பணிகளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. நடைபெற உள்ள ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், பா.ஜ.க கண்டிப்பாக வெற்றியடையும். கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகள் துரிதமாக நடைபெறுகிறது. புயல் பாதிப்பால் தமிழகத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் நடைபெறுவது சந்தேகம்தான்" என்று கூறியுள்ளார். 

முன்னதாக ட்விட்டரில் கருத்துப் பதிவிட்ட அவர், ``நிதானமிழந்து தரம் தாழ்ந்து, அரசியல் நாகரிகம் இல்லாமல், நாக்கில் நரம்பில்லாமல், பிரதமர் மோடியை ஒருமையில் விமர்சிக்கும் வைகோவை தமிழக பா.ஜ.க கண்டிக்கிறது. தீக்குளித்த ம.தி.மு.க தொண்டர்களின் ஆன்மா உங்களை மன்னிக்காது" என்று கூறியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க