வெளியிடப்பட்ட நேரம்: 10:57 (03/12/2018)

கடைசி தொடர்பு:10:57 (03/12/2018)

நடுரோட்டில் வைகோ உருவபொம்மை எரிப்பு! விரைந்த போலீஸ்; ஓட்டம்பிடித்த காங்கிரஸ் நிர்வாகி

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்தும், அவரது மரணம்குறித்தும் தொடர்ந்து இழிவாகப் பேசிவரும் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ-வை கண்டித்து, அவரது உருவ பொம்மையை காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ஒருவர் எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வைகோ உருவபொம்மையை எரிக்கும் காங்கிரஸ் நிர்வாகி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நேற்று, திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட வைகோ, “மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஓராண்டுக் காலம் சிறை தண்டனை வழங்கியதற்காகப் பேருந்தில் 3 மாணவிகளை பெட்ரோல் ஊற்றி உயிருடன் கொளுத்தித் படுகொலைசெய்த அ.தி.மு.க-வினர் 3 பேரை விடுதலை செய்ய தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். ஆனால், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 அப்பாவித் தமிழர்கள் பல ஆண்டுக்காலம் சிறையில் தண்டனை பெற்று வருகின்றனர்.

அவர்களை விடுதலைசெய்ய மாநில அரசு முடிவு எடுத்துக்கொள்ளலாம் என தலைமை நீதிபதி உத்தரவிட்ட பிறகும், அதுகுறித்து நடவடிக்கை எடுக்காத ஆளுநர்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் எனவும், ஆளுநரைக் கண்டித்து பல கட்சிகள், அமைப்புகளுடன் இணைந்து இன்று சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளோம்” எனவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் செயலாளர் அய்யலுசாமி

இந்நிலையில், கோவில்பட்டி பேருந்து நிலையம் முன்பு இன்று காலை, காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் செயலாளர் அய்யலுசாமி என்பவர், வைகோவின் உருவ பொம்மையை எரித்து, செருப்பால் அடித்து, வைகோ-வுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பியவாறு போரட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அய்யலுசாமி, “ ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியைப் பற்றியும், அவரது மரணத்தைப் பற்றியும் தொடர்ந்து இழிவாகப் பேசிவருகிறார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை பெற்றுவரும் 7 பேரின் விடுதலையைப் பற்றி பேசிவரும் இவர், ராஜீவ் காந்தியுடன் உயிரிழந்த 14 தமிழர்களைப் பற்றிப் பேச மறுப்பது ஏன். வைகோ காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் சரி, அவர் எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் சரி, அந்தத் தொகுதியில் அவரைத் தோற்கடிக்க, அவருக்கு எதிராகப் பிரசாரம் செய்வேன்” என்றார். தகவல் அறிந்து போலீஸார்  பேருந்து நிலையம் வருவதற்குள் அய்யலுசாமி அங்கிருந்து ஓட்டம் பிடித்துவிட்டார். இச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 இதற்கு முன் இவர், தமிழக அரசு சிறப்புச்சட்டம் இயற்றி 7 பேரை தூக்கிட வேண்டும் என வலியுறுத்தி கண்களில் கறுப்புத்துணி கட்டி போராட்டம் நடத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க