வெளியிடப்பட்ட நேரம்: 11:23 (03/12/2018)

கடைசி தொடர்பு:11:23 (03/12/2018)

கஜா புயல் கற்றுத் தந்த பாடம் என்ன? நிவாரண ஸ்டிக்கர் மீது வைத்த பரிவுகூட மக்கள் மீது இல்லை!

ஒரு பேரிடர் நடக்கும்போது, கோரத்தாண்டவம் அரங்கேறும்போது, பேரழிவுக்கு உள்ளான மக்களை, ஆட்சி செய்கிற தலைவன் சந்தித்து, ஆறுதல் சொல்வதுதானே உலகம் முழுவதும் உள்ள தியரி. இயல்பு நிலை பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இழந்ததைத் திருப்பித் தர முடியாவிட்டாலும், அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தருவது என்பது அடிப்படை மனிதாபிமானம்.

கஜா புயல் கற்றுத் தந்த பாடம் என்ன? நிவாரண ஸ்டிக்கர் மீது வைத்த பரிவுகூட மக்கள் மீது இல்லை!

 

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் மாதத் தொடக்கத்தில், கொட்டித்தீர்த்த பெருமழையால் சென்னை மூழ்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிட்ட பாவத்தைச் செய்தார்கள் அன்றைய ஆட்சியாளர்கள். கஜா புயலால் இந்த ஆண்டு நவம்பரில் இன்னொரு சோகம். 

சென்னை பெருமழைக்கு முன்பு கோட்டைவிட்ட ஜெயலலிதா, வெள்ளம் சூழ்ந்த பிறகு சுதாரித்துக் கொண்டு, நடவடிக்கையை மேற்கொண்டார். `அம்மா வழியில் நடக்கும் அரசு' அப்படியே ரிவர்ஸில் பயணிக்கிறது. அன்றைக்கு ஜெயலலிதா எடுக்கத் தவறிய முன் நடவடிக்கைகளை `கஜா' புயலுக்காக முந்திக் கொண்டு செய்தது எடப்பாடி பழனிசாமி அரசு. `சபாஷ்' எனப் பாராட்டைப் பெற்ற ஆட்சியாளர்களை அடுத்த 24 மணி நேரத்தில் தூற்ற ஆரம்பித்தனர் மக்களும், எதிர்க்கட்சியினரும். 

சென்னை வெள்ளமும், கஜா பாதிப்பும்

காவிரி டெல்டாவில் 12 மாவட்டங்கள் பாதிப்பு, 63 பேர் பலி, 3.42 லட்சம் வீடுகள் சேதம், பல்லாயிரக்கணக்கில் மரங்கள் சாய்ந்தன, ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழப்பு என `கஜா' புரட்டிப்போட்ட வடுக்கள் ஆற, அந்தப் பாதிப்புகளிலிருந்து மீள... இன்னும் எத்தனை நாள்கள் ஆகுமோ தெரியவில்லை. புயலுக்குப் பின்னால் அமைதி ஏற்படுவதற்குப் பதிலாக கொந்தளிப்புகளும் அழுகுரல்களும் எழுகின்றன. பல ஆயிரம் பேருக்கு வாழ்வாதாரமே உடைந்து போயிருக்கிறது. நேற்று வரையில் சோறு போட்ட பூமி இன்று உருக்குலைந்திருக்கிறது. வறட்சியால் விவசாயிகள் தற்கொலை நடந்த பூமியில், இப்போது புயலின் கோரத் தாண்டவத்தால் விவசாயிகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலை.

ஒரு பேரிடர் நடக்கும்போது, கோரத்தாண்டவம் அரங்கேறும்போது, பேரழிவுக்கு உள்ளான மக்களை, ஆட்சி செய்கிற தலைவன் சந்தித்து, ஆறுதல் சொல்வதுதானே உலகம் முழுவதும் உள்ள தியரி. இயல்பு நிலை பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இழந்ததைத் திருப்பித் தர முடியாவிட்டாலும், அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தருவது என்பது அடிப்படை மனிதாபிமானம். அரசின் அந்த தார்மிகக் கடமையும் தவறிப் போய்விட்டது. தாமதமாக வந்து, `தேவதூதன்' வேஷம் கட்ட ஆரம்பித்தார்கள் ஆட்சியாளர்கள். 

கஜா புயல் கோரத் தாண்டவம்

முதல் ஆளாகச் சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட வேண்டிய முதலமைச்சர், ஐந்து நாள்கள் கழித்துதான் பாதிப்புக்குள்ளான ஏரியாவை எட்டிப் பார்க்கிறார். ``முதல்வர் ஏன் செல்லவில்லை'' என விமர்சனங்கள் எழுந்த பிறகே அங்கு போகிறார். புதுக்கோட்டை மாப்பிள்ளையார்குப்பம், தஞ்சை சூரப்பள்ளம் இடங்களுக்குச் சென்று ஆளும் கட்சிக்காரர்கள், போலீஸார் புடைசூழ, கடுமையான பாதுகாப்பு வளையத்துக்குள் இருந்தபடியே சிலருக்கு மட்டும் நிவாரண உதவிகளை வழங்கிவிட்டுத் திரும்பினார். புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்குச் செல்லாமல் பாதியில் திரும்பினார் எடப்பாடி. திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களின் மண்ணில் கால்கள்கூட பதியாமல் ஹெலிகாப்டரில் எட்ட நின்று பார்த்ததோடு கடமை முடிந்தது என நிறுத்திக் கொண்டார். ஹெலிகாப்டர் பயணத்தில் தன் மீது விழுந்த சேற்றைத் துடைக்க ரயிலில் போய் இறங்கினார். நிவாரணப் பொருள்கள் விநியோகம் எனச் சம்பிரதாயங்களை முடித்துவிட்டு டீ கடையில் டீ குடித்து போஸ் கொடுத்துவிட்டு வந்துவிட்டார். 

குட்டிகள் பாதிக்கப்படும்போது தாய்ப் பிராணிகள் பரிவோடு பக்கத்தில் நிற்பதுதான் விலங்கியல். அந்த இயல்பைக்கூட விளங்காமல் இருக்கிறது விளம்பரத்தில் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் அரசு. தன் ஆட்சியில், முல்லைகூட முடங்கிவிடக் கூடாது எனத் தேரை முட்டுக் கொடுத்துவிட்டுப் போனான் பாரி. எடப்பாடி பழனிசாமியோ மாமனார் வீட்டின் விழாவிலும் மாலை சூடும் விருதிலும் விருந்தோம்பல் செய்கிறார். கொண்டாட்டத்துக்கும் கேளிக்கைக்கும் இதுவா நேரம்?

எடப்பாடி பழனிசாமி - கஜா புயல் நிவாரணம்

`கஜா புயல் கரையைக் கடக்கும்' எனத் தேதி குறிக்கப்பட்ட தினத்தில், சேலத்தில் எடப்பாடிக்குப் பரிவட்டம் கட்டிக் கொண்டிருந்தார்கள். சேமூர் அம்மாபாளையத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் மாமனார் வீட்டு விசேஷசத்திலும் அவருடைய பங்காளிகளுக்குச் சொந்தமான குலதெய்வக் கோயில் கும்பாபிஷேகத்திலும் பொழுதைக் கழித்தார். சேமூர் செல்லும் சாலை முழுக்க ஃபிளெக்ஸ் பேனர்கள். `வா மருமகனே', 'எங்கள் ஊரு மருமகனே' என வரவேற்பு பதாகைகள் சூழ, மாமனார் ஊரில் மாலை மரியாதைகளைச் சுமந்து கொண்டிருந்தார் எடப்பாடி. கஜா புயல் நிவாரணம் தொடர்பாக பிரதமர் மோடியைச் சந்திக்கச் சென்ற முதல்வர், அப்படியே `இந்தியா டுடே’ இதழ் சார்பில் டெல்லியில் நடந்த விருது நிகழ்ச்சியில் பங்கேற்றார். விருதுக்குக் குறித்த தேதியில் அப்படியே கஜாவுக்கு ஒதுக்கிய பெருந்தகையாளர் எடப்பாடியைத் தவிர வேறு யார் இருக்க முடியும்?

புயல் நிவாரண நிதியாக 15,000 கோடி ரூபாயைக் கேட்பதற்குத்தான் எடப்பாடி இவ்வளவு அவசரமாக டெல்லி போய் மோடியைச் சந்தித்தார் என நினைத்தால், இந்தியா டுடேயின் விருதை வாங்குவதற்காகத்தான் போய் இருக்கிறார். ரோமாபுரி பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்தானோ இல்லையோ நமக்குத் தெரியாது. கஜா புயலுக்குப் பிறகு டெல்டாவில் துன்பங்களும் தற்கொலைகளும், முகாமில் மரணங்களும் நேர்ந்து கொண்டிருந்தபோது, எடப்பாடி விருது வாங்கிக் கொண்டிருந்தார். அந்த விழாவைச் சிறப்பித்துக் கொண்டிருந்தார். ‬

`கொடுங்கோன்மை' அதிகாரத்தில், `நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாள்தொறும் நாடு கெடும்' எனச் சாடுகிறான் வள்ளுவன். ஆட்சி நடத்துவதிலும், அதை முறை செய்வதிலும் குறைபாடுகள் இருக்கிறதா என ஒவ்வொரு நாளும் ஆராய்ந்தறியாத ஆட்சியாளரின் நாடு, கொஞ்சம் கொஞ்சமாகக் கெட்டுப்போகும். கொடுங்கோல் மன்னவனுடைய நாடு நாளுக்கு நாள் சீர்கெட்டுப் போவதோடு மன்னவனும் நாட்டை இழப்பான் என்கிறது திருக்குறள்.   

சென்னை வெள்ளத்தில், சென்னைக்குள் இருந்துகொண்டே சென்னையை ஹெலிகாப்டரில் பார்வையிட்டார் அன்றைய முதல்வர் ஜெயலலிதா. ஜெயலலிதாவாகவே தங்களை நினைத்துக் கொண்டு அவரைப் போலவே மாறிக்கொண்டிருக்கும் எடப்பாடியும் `கஜா' புயல் பாதிப்பை ஹெலிகாப்டரில் பார்வையிட்டிருக்கிறார். ``பேரிடர் காலங்களில் பிரதமரும் முதல்வரும் ஆகாய மார்க்கமாகச் சேதங்களைப் பார்வையிடுவது காலம் காலமாக நடந்து வரும் வழக்கம்'' என்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். பேரிடர் ஏற்பட்ட உடனே அங்கே செல்ல முடியாத சூழலில் ஹெலிகாப்டர் பயணம் மேற்கொள்வார்கள். புயல் வீசி 100 மணி நேரம் கழித்தும் ஹெலிகாப்டரில் போனால் அதற்குப் பெயர் பயம்தானே! மக்கள் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை தங்களுக்கு மக்களால் இடர் ஏற்பட்டுவிடக் கூடாது. பாதிக்கப்பட்டவர்கள் ஆள்வோரை அசிங்கப்படுத்திவிடக் கூடாது. கேள்வி எழுப்பிவிடக் கூடாது என்பதில் அதிக அக்கறை காட்டியிருக்கிறார்கள். இத்தனைக்கும் சாட்சியாக நிற்கிறது முதல்வரின் ஹெலிகாப்டர் பயணம்.

மீட்பும் நிவாரணப் பணிகளும் நடக்கவில்லை என்பதால்தானே ஆங்காங்கே சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குள் படை பரிவாரங்களோடு போன அமைச்சர்களையும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்களையும் அரசு அதிகாரிகளையும் மக்கள் விரட்டியடித்தனர். அரசு வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. மக்கள் விரட்டியதால் ஓ.எஸ்.மணியன் சுவர் ஏறிக் குதித்து தப்பித்து ஓடுகிறார். இப்படித் தங்களுக்கும் நேரும் என்பதால்தானே மக்களைச் சந்திக்க பயந்து ஹெலிகாப்டருக்குள் முடங்கிப் போனார்கள் எடப்பாடியும், அவருக்குத் துணையாக இருக்கும் துணை முதல்வர் பன்னீரும். 

கஜா புயல் - பன்வாரிலால் புரோஹித் ஆய்வு

`கஜா' புயல் பாதித்த பகுதிகளில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேரில் ஆய்வு செய்கிறார். ஆளுநருக்கு இருக்கும் துணிச்சல்கூட ஆள்வோருக்கு இல்லை. ஆளுநரிடம் ஆட்சியைக் கொடுத்துவிட்டு வேடிக்கை பார்க்கிறவர்களுக்கு வெட்கம் பற்றியெல்லாம் கவலை இல்லை. நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு பற்றி சி.பி.ஐ விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதும் அதற்குத் தடை வாங்க சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி அரசின் இயந்திரம் காட்டிய பாய்ச்சலில் பாதியை டெல்டாவில் காட்டியிருக்கலாம்.

`கஜா' புயல் நிவாரண நிதி கேட்பதற்காக டெல்லி போன எடப்பாடி, பத்திரிகையாளர் சந்திப்பில், ``நான் 9 முறை ஒரே தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன்'' என்றார். எம்.பி-க்கும், எம்.எல்.ஏ-வுக்கும் சேர்த்து எடப்பாடி போட்டியிட்டதே 9 முறைதான். இதில் 4 தேர்தலில் தோல்வி வேறு. இப்படித் தன் கணக்கே தெரியாமல் இருக்கிறவருக்கு `கஜா' புயல் சேதக் கணக்கு தெரிந்திருக்குமா?   

வெளிநாட்டைச் சேர்ந்த ட்ரக்கிங் ஆர்வலரான பீட்டர் வான் கீட், புயல் பாதித்த பகுதியில் மரத்தை அப்புறப்படுத்தும் பணியை தன் குழுவினரோடு செய்கிறார். `நான் துணை நிற்பேன் தமிழகமே' என ட்விட் தட்டுகிறார் ஹர்பஜன் சிங். பள்ளிக் குழந்தை முதல் முதியவர்கள் வரை பதைபதைத்து உதவிக் கரம் நீட்டுகிறார்கள். இளைஞர்களும் தன்னார்வலர்களும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்கிறார்கள். `கஜா' புயல் நிவாரண உதவிக் கரங்கள் நீளுகின்றன. சமூக வலைதளங்கள் சமூகப் பணியாற்றுவதில் பங்கெடுக்கின்றன. சென்னை வெள்ளத்தில் கற்ற `உதவி செய்தல்' பாடத்தை டெல்டாவில் அடுத்த படிநிலைக்குக் கொண்டு செல்கிறார்கள் மக்கள். ஆனால், கடமையாற்ற வேண்டிய அரசு இயந்திரமோ எந்தப் படிப்பினையும் கற்றுக் கொள்ளவில்லை. 

ஓட்டுகளை வாங்கிச் சென்றவர்கள், கூரை இழந்த ஓட்டு வீடுகளின் நிலையைக்கூட எட்டிப் பார்க்கவில்லை. ஆயிரக்கணக்கில் கூரை வீடுகள் புயல் காற்றால் பறந்துவிட்டன. கூரைகள் பாதிக்கப்பட்ட வீடுகளுக்குத் தற்காலிகமாக தார்ப்பாய் ஷீட்டுகள்கூட போய்ச்சேரவில்லை. ``தார்ப்பாய் அளித்தால் உதவியாக இருக்கும் என்று மக்கள் கோரிக்கையாகச் சொன்னார்கள். அவர்களின் கோரிக்கையை ஏற்றே தார்ப்பாய்கள் வழங்க நடவடிக்கை எடுத்தோம்'' என அறிக்கை விடுகிறார் முதல்வர். புயலின் கோரத்தைக்கூட தெரிந்து கொள்ளாமல், மக்கள் கோரிக்கை வைத்ததால் தார்ப்பாய் வழங்கினோம் எனச் சொல்வதற்கு அரசு எதற்கு? 

பிரதமர் மோடியிடம் எடப்பாடி கோரிக்கைபுரட்டிப் போட்ட புயலால் மாவட்டங்களே நொறுங்கிப் போயிருக்கும் சூழலில், நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்ட பைகளில் `புயல் நிவாரண உதவி' என எழுதி எடப்பாடியின் படத்தைப் போட காலமும் காசும் இருக்கிறது. ஃபிளக்ஸ் அடிக்கும் கடைகளைத் தேடிப் பிடித்து நிவாரணப் பைகளில் படத்தை பிரின்ட் செய்யும் கம்பெனிகளைக் கண்டறிந்து கச்சிதமாகக் களமாடும் அரசுக்குக் களத்தில் இறங்கிப் பணியாற்ற நேரம் வரவில்லை. தார்ப்பாய் ஷீட் வாங்கி வைக்கக்கூடக் காலம் இல்லை. நிவாரண ஸ்டிக்கர் மீது வைத்த பரிவைக்கூட பாதிக்கப்பட்ட தன் குடிமக்கள்மீது வைக்கவில்லை இந்த அரசு. சென்னை வெள்ளத்தில் ஸ்டிக்கர் ஒட்டித் திட்டு வாங்கியவர்களுக்கு கஜாவிலும் புத்தி வரவில்லை. மக்கள் மீள்வதற்குப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்காமல் போர்க்கால அடிப்படையில் ஸ்டிக்கர்கள் ரெடி செய்யும் ஆட்சியாளர்களால் மக்கள் ஆளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

``சாமி... அர்ச்சனை என் பெயருக்கு இல்லை. சாமி பெயருக்கு. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஐயா பெயருக்கு" என மாற்றுத்திறனாளிகளின் சாமியாக எடப்பாடியைச் சித்திரித்து விளம்பரம் வெளியிட்டார்கள். கடவுளோடு தன்னைப் பொருத்திப் பார்க்கும் எடப்பாடி, கஜா புயலில் கடவுள் போல அல்லவா வந்து உதவியிருக்க வேண்டும். 

எடப்பாடி ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியபோது, ``ஏங்கி நிற்கும் மக்களைத் தாங்கி நிற்கிறோம்'' என்றார். மக்களைத் தாங்கி நிற்கும் லட்சணம் `கஜா'வில் தெரிந்துவிட்டது. மோடியைத் தவிர வேறு யாரையும் எடப்பாடி தாங்கி நிற்க மாட்டார். 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலர் மாண்டபோது, ``144 தடை உத்தரவு இருப்பதால் அங்கே செல்லவில்லை'' என்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. கன்னியாகுமரியில் `ஒகி' புயல் தாக்கியபோது காலம் கடந்து அங்கே போனார் முதல்வர். கம்பித் தடுப்புகளுக்குள் சிறை வைக்கப்பட்ட மக்களை 100 மீட்டர் தொலைவு தள்ளி நின்று ஆறுதல் சொல்லிவிட்டு வந்தார். இதோ `கஜா'விலும் அதே நிலை. அடுத்து புயலோ பேரிடரோ நிச்சயம் நிகழும். எடப்பாடிகளும் பன்னீர்செல்வங்களும் ஆட்சியில் இருப்பார்களோ இல்லையோ தெரியாது. ஆனால், அவர்கள் நம்மைக் காப்பாற்ற வர மாட்டார்கள் என்பதைப் பாடம் நடத்திவிட்டுப் போயிருக்கிறது `கஜா'.


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்