வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (03/12/2018)

கடைசி தொடர்பு:11:40 (03/12/2018)

`ராஜீவ் காந்தியை நாங்கள் கொலைசெய்யவில்லை!' - விடுதலைப் புலிகள் மீண்டும் விளக்கம்

``முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியை நாங்கள் கொலைசெய்யவில்லை'' என விடுதலைப் புலிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. 

ராஜீவ் காந்தி

இதுகுறித்து அந்த அமைப்பின் சட்டத்துறைப் பிரதிநிதி லதன் சுந்தரலிங்கம் விடுத்துள்ள அறிக்கையில், ``தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், தமிழீழ மக்களுக்காக, அவர்களின் பாதுகாப்புக்காகத் தோன்றிய இயக்கம். எங்கள் ஆயுத மௌனிப்பிற்குப் பிறகும் நாங்கள் கட்டுப்பாடுகளைக் காத்துவந்துள்ளோம். ஆனாலும், எங்களுடைய மக்களுக்கு இதுவரை எந்த விடிவும் ஏற்படவில்லை. இன்றளவும் மக்கள் திட்டமிட்ட இனவழிப்புக்கே உட்படுத்தப்படுகிறார்கள்.

நாங்கள் பலமுறை தன்னிலை விளக்கம் அளித்தும், ஆதாரங்கள் பலவற்றை எடுத்துரைத்தும், மீண்டும் மீண்டும் புலிகள்தான் ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்ற ஆதாரமில்லாத தவறான கருத்து தொடர்ந்து திணிக்கப்பட்டுவருகிறது. தொடர்கின்ற இதுபோன்ற தவறான பிரசாரத்தால், எங்கள் மக்கள் கையறுநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். சிலர், ஒருபடி மேலே சென்று முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒன்றைரை லட்சம் தமிழீழ மக்களின் உயிர், ராஜீவ் காந்தியின் உயிருக்கு ஈடாகாது என்று கூறுவது எவ்வளவு வேதனை தரும் விஷயம் என்பதை சிந்தித்துப்பார்க்க வேண்டும். 

இந்தியத் தலைமையைச் சீர்குலைக்கும் திட்டமோ, இந்தியாவைத் தாக்கும் திட்டமோ ஒருபோதும் புலிகளிடம் இருந்ததில்லை. இலங்கையைச் சாராத எந்தவொரு நபருக்கோ, தலைவருக்கோ, எதிராக நாங்கள் ஒருபோதும் ஆயுதம் ஏந்தவில்லை. குறிப்பாக எந்தவொரு இந்திய தேசியத் தலைவருக்கும் எதிராகச் செயல்பட நாங்கள் எப்பொழுதும் நினைத்ததில்லை. தொடர்ந்து அழிந்து கொண்டிருக்கும் எம் மக்கள்மீது, இதுபோன்ற அபாண்டமான குற்றச்சாட்டுகளை இனியும் பதிய வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

'ராஜீவ் காந்தி படுகொலைக்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை' என முன்பே பலமுறை விடுதலைப் புலிகள் இயக்கம் கூறி இருக்கிறது. அதேபோல, ‘ராஜீவ் காந்தி படுகொலையில் எமது இயக்கத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லை எனத் தெளிவாகக் கூறினார் பிரபாகரன். விடுதலைப் புலிகள் ஏற்பாடுசெய்திருந்த உலக இதழியலாளர் சந்திப்பின்போதுகூட, ‘ராஜீவ் காந்தி படுகொலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்' எனக் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, ‘அது ஒரு துன்பியல்' என்று பிரபாகரன் பதிலளித்திருந்தார். 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, விடுதலைப் புலிகளோடு ரகசிய உறவைப் பேணிவந்துள்ளார். இந்திய அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே உள்ள உறவைத் தகர்த்தெறியும் உள்நோக்கோடு ஸ்ரீலங்கா அரசும், அந்நிய சக்திகளும் இணைந்து மேற்கொண்ட சூழ்ச்சியின் விளைவே, ராஜீவ் காந்தியின் படுகொலையென உறுதியாகக் கருதுகிறோம். குறிப்பாக, விடுதலைப்புலிகள் மீதான களங்கம் நீங்கினால், உலக நாடுகள் புலிகள்மீது விதித்துள்ள தடைகள் நீங்கும், மக்கள், சுதந்திரக்காற்றைச் சுவாசிக்கும் காலம் வரும்" என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க