`ரூ.20,000 கள்ள நோட்டுகள் தருவார்; ரூ.4,000 கமிஷன் கிடைக்கும்!' - வாலிபரால் சிக்கிய அ.ம.மு.க நிர்வாகி | AMMK Secretary caught by police

வெளியிடப்பட்ட நேரம்: 11:47 (03/12/2018)

கடைசி தொடர்பு:11:47 (03/12/2018)

`ரூ.20,000 கள்ள நோட்டுகள் தருவார்; ரூ.4,000 கமிஷன் கிடைக்கும்!' - வாலிபரால் சிக்கிய அ.ம.மு.க நிர்வாகி

வேலூர் மாவட்டத்தில் கள்ளநோட்டுகளைப் புழங்கவிட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நகர துணைச் செயலாளரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நகர துணைச் செயலாளர் அலெக்ஸாண்டர் - சதாம் உசேன் கைது

வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த ஆலாங்குப்பம் தோப்பூரைச் சேர்ந்தவர், ஆசைதம்பி. இவரின் மனைவி பச்சையம்மாள் (50). அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். நேற்றிரவு, இந்தக் கடைக்கு வாலிபர் ஒருவர் வந்தார். பச்சையம்மாளிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டைக் கொடுத்து பொருள்கள் வாங்கினார். வாலிபர் கொடுத்த 2 ஆயிரம் ரூபாய், ‘கள்ளநோட்டு’ என்பதை பச்சையம்மாள் கண்டுபிடித்துவிட்டார். இதையடுத்து, தப்பி ஓட முயன்ற அவரைப் பொதுமக்கள் உதவியுடன் பச்சையம்மாள் துரத்திப் பிடித்தார்.

சிக்கிய வாலிபரின் பாக்கெட்டில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 7 இருந்தன. இதுபற்றி ஆம்பூர் தாலுகா போலீஸாருக்கு உடனடியாகத் தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் விரைந்துசென்று கள்ளநோட்டுகளைப் பறிமுதல்செய்ததோடு, வாலிபரைக் கைது செய்தனர். விசாரணையில், சென்னை மூலக்கடையைச் சேர்ந்த சதாம் உசேன் என்பது தெரியவந்தது. இவர், ஜோலார்பேட்டையில் உள்ள மாமியார் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது, ‘‘ஜோலார்பேட்டை வக்கணம்பட்டியில் வசிக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நகர துணைச் செயலாளர் அலெக்ஸாண்டருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கள்ள நோட்டு

கள்ளநோட்டுகளை அலெக்ஸாண்டர்தான் கொடுத்தார். மாற்றிக்கொடுத்தால் கமிஷன் தருவதாகக் கூறினார். ரூ.20 ஆயிரம் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுத்தால், ரூ.4 ஆயிரம் கமிஷன் கொடுப்பார்’’ என்று சதாம் உசேன் கூறினார். போலீஸார் உடனடியாக அ.ம.மு.க. நகர துணைச் செயலாளர் அலெக்ஸாண்டர் வீட்டுக்குச் சென்று சோதனையிட்டனர். அப்போது, ஜெராக்ஸ் மெஷின் மற்றும் கள்ளநோட்டுகள் சிக்கின. இதையடுத்து, அலெக்ஸாண்டரைக் கைதுசெய்த போலீஸார், வேலூர் மாவட்டம் முழுவதும் இதுவரை எவ்வளவு கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விட்டிருக்கிறார் என்பதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.