வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (03/12/2018)

கடைசி தொடர்பு:12:30 (03/12/2018)

"ரஞ்சித் சாரின் அம்மாதான், 'காலா' செல்விக்கான இன்ஸ்பிரேஷன்!" - நெகிழும் ஈஸ்வரி ராவ்

ஈஸ்வரி ராவ்

வெற்றிகரமாக நடந்து முடிந்த 'அவள் விகடன் விருதுகள்' நிகழ்ச்சியில், 'காலா' திரைப்படத்தில் சிறப்பாக நடித்திருந்த நடிகை ஈஸ்வரி ராவ், 'குணச்சித்திர நடிகை' விருதை வென்றிருந்தார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டது மற்றும் விருது வென்ற மகிழ்ச்சித் தருணங்களை பகிர்கிறார், ஈஸ்வரி ராவ்.

"எங்க 'காலா' டீமுக்கு கிடைக்கும் முதல் விருது; அதுவும் எனக்குக் கிடைச்சதுல இரட்டிப்பு மகிழ்ச்சி ஒருபக்கம். ரொம்ப நாள் கழிச்சு ஒரு பெரிய விருது நிகழ்ச்சியில கலந்துக்கிறோம்ங்கிற உணர்வு ஒருபக்கம். நிகழ்ச்சியில் ஏதோ ஒரு சர்ப்ரைஸ் நடக்கும்னு மனசு சொல்லிட்டே இருந்துச்சு. இருந்தாலும், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமதான் விருது நிகழ்ச்சிக்கு வந்தேன். விருது வாங்கின பெண்கள் எல்லோரும், பெரிய சாதனைகள் செய்தவங்க. அவர்களைப் பார்த்துப் பெருமைப்பட்டேன். அவங்களோடு, எனக்கும் விருது கொடுத்து கெளரவப்படுத்தினாங்க. என் சினிமா கரியரில், பாலு மகேந்திரா சாரின் பங்களிப்பு முக்கியமானது. அவர் படங்களின் பிரதான நாயகி அர்ச்சனா மேடம் மற்றும் ரேவதி மேடம் இருவரும் நிறைய விருதுகள் வாங்கி சாதனைசெய்தவங்க. அவங்க இருவரின் கையால் விருது வாங்கியது சந்தோஷமா இருந்துச்சு.

ஈஸ்வரி ராவ்

என் உள் மனசு சொல்லிட்டே இருந்ததுபோல, 'காலா' இயக்குநர் ரஞ்சித் சார் மற்றும் எங்க டீம்ல பலரும் எனக்காக வந்திருந்து, எனக்கு விருது கொடுத்துப் பேசியது உண்மையிலேயே பெரிய சர்ப்ரைஸ்தான். ரஞ்சித் சாரின் அம்மாதான், 'காலா' செல்வி ரோலுக்கான இன்ஸ்பிரேஷன். அதை அவரே மேடையில் சொன்னார். பெண்கள்மீது தனி மதிப்பு கொண்டவர். தன் படங்களில் பெண் கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை வழக்கமா வெச்சிருக்கார். அதன்படி எனக்குக் கிடைத்த செல்வி ரோல் மிக முக்கியமானது. மேடையில் திடீர்னு என்னை ஒரு டயலாக் பேசச் சொன்னதும், கொஞ்சம் பதற்றமாகிட்டேன். அப்புறம், ரஜினி சார் எதிரில் நிற்கிறதா நினைச்சு, 'எனக்கும் இஸ்டம்தான்' டயலாக்கை பேசி முடிக்க, எல்லோரும் கைதட்டினாங்க. அந்நிகழ்ச்சியும், எனக்குக் கிடைத்த விருதும், ரொம்ப மகிழ்ச்சியான உணர்வைக் கொடுத்துச்சு" என்று புன்னகைக்கிறார் ஈஸ்வரி ராவ்.