கோவை சாக்கடையில் 5 மாத சிசு - மீட்கப்பட்ட சில மணிநேரங்களில் உயிரிழந்த பரிதாபம் | Coimbatore : 5 months infant rescued from drainage

வெளியிடப்பட்ட நேரம்: 12:32 (03/12/2018)

கடைசி தொடர்பு:12:55 (03/12/2018)

கோவை சாக்கடையில் 5 மாத சிசு - மீட்கப்பட்ட சில மணிநேரங்களில் உயிரிழந்த பரிதாபம்

கோவையில், 5 மாத சிசுவை தொப்புள்கொடியுடன் சாக்கடையிலிருந்து மீட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

5 மாத சிசு

கோவை, ராமநாதபுரம் பெருமாள் கோயில் மைதானம் அருகே உள்ள சாக்கடையில்,  இன்று காலை  ஒரு சிசு கிடந்துள்ளது.  அதைப் பார்த்த அந்தப் பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, உடனடியாக ராமநாதபுரம் காவல்நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், உயிரோடு இருந்த சிசுவை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஐந்து மாதமே ஆன இந்த ஆண் குழந்தை, தொப்புள்கொடியுடன் கிடந்தது காண்போரையெல்லாம் சோகத்தில் ஆழ்ந்தியது.  உயிருடன் மீட்கப்பட்டுள்ள அந்தக் குழந்தையின் உடல் நீரில் ஊறியிருந்தது. அதேபோல, சாக்கடை நீரை குழந்தை குடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மீட்கப்பட்ட சில மணி நேரங்களில் சிசு உயிரிழந்துவிட்டது. 

குழந்தை  எப்படி இங்கு வந்தது? இதன் தாய் யார்? என கோவை ராமநாதபுரம் காவல் நிலைய ஆய்வாளர் லதா தலைமையில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.