``குழந்தைகளை அறைக்குள் அடைத்துத் துன்புறுத்தினர்" - ஶ்ரீபெரும்புதூர் கேளிக்கை கிராமத்தில் கொடூரம்! | school children are beaten by chokhidhani staffs

வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (03/12/2018)

கடைசி தொடர்பு:13:50 (03/12/2018)

``குழந்தைகளை அறைக்குள் அடைத்துத் துன்புறுத்தினர்" - ஶ்ரீபெரும்புதூர் கேளிக்கை கிராமத்தில் கொடூரம்!

``குழந்தைகளை அறைக்குள் அடைத்துத் துன்புறுத்தினர்

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள சோக்கிதானி கேளிக்கை கிராமத்தில், சுற்றிப் பார்ப்பதற்காக அழைத்துவரப்பட்ட தனியார் பள்ளிக் குழந்தைகளை அறைக்குள் அடைத்துவைத்து, இரும்புக் கம்பிகளால் ஊழியர்கள் தாக்கிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஶ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள  சோக்கிதானி கேளிக்கை கிராமம்

ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வருவது, சோக்கிதானி கேளிக்கை கிராமம். ராஜஸ்தான் மாநில கலாசார அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கேளிக்கை கிராமத்தில் தினந்தோறும் ஏராளமானோர் குவிந்து, பொழுதைப் போக்குகிறார்கள். அவ்வப்போது, பள்ளிக் குழந்தைகளையும் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தினர் அழைத்து வந்து சுற்றிக்காட்டுகின்றனர். இந்த நிலையில், கடந்த 28-ம் தேதி, இந்த கிராமத்துக்கு அழைத்துவரப்பட்ட தனியார் பள்ளியைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட குழந்தைகளை, இரும்புக்கம்பிகளால் ஊழியர்கள் சிலர் அடித்துத் துன்புறுத்தியதாகப் புகார் தெரிவித்துள்ளனர் பெற்றோர்கள். 

அன்றைய தினம் என்ன நடந்தது என்பதை விவரிக்கின்றனர் அவர்கள். ``நவம்பர் 28-ம் தேதி காலையில் 400-க்கும் மேற்பட்ட குழந்தைகளை சோக்கிதானி கிராமத்துக்கு அழைத்துச் சென்றுள்ளது பள்ளி நிர்வாகம். அவர்களை பத்திரமாகக் கவனித்துக் கொள்வதற்காக, 22 ஆசிரியர்களும் உடன் சென்றுள்ளனர். மதிய உணவு இடைவேளைவரை எல்லாம் சரியாகவே சென்றிருக்கிறது. ஆனால், உணவு இடைவேளையின்போது, குழந்தைகளை தனியே விட்டுவிட்டு, அனைத்து ஆசிரியர்களும் வேறெங்கோ சென்றுவிட்டனர். அந்த நேரத்தில், அனைத்துக் குழந்தைகளையும் அங்கிருக்கும் சிறிய அறையொன்றில் அடைத்து வைத்துள்ளனர், கேளிக்கை கிராமத்தின் ஊழியர்கள் சிலர். குழந்தைகள் கூப்பாடு போட்டுக் கதறியழுதுள்ளனர். ஆனாலும், ஊழியர்கள் கதவைத் திறக்கவில்லை. அவர்கள் அனைவருமே மூன்றிலிருந்து ஐந்தாம் வகுப்புவரை பயிலும் மாணவ-மாணவிகள். எட்டு வயதுக்குட்பட்ட இந்தக் குழந்தைகள் அடைக்கப்பட்டிருந்த அறையின் கதவைத்திறந்து சிறிதுநேரம் கழித்து அறைக்குள் சென்ற ஊழியர்கள், அங்கிருந்த கம்புகளாலும் இரும்புக்கம்பிகளாலும் குழந்தைகளை அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். இது மிருகத்தனமான செயல்” என்று கலங்கினர்.  

ஶ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள  சோக்கிதானி கேளிக்கை கிராமம்


பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவனின் தந்தை கொதிப்புடன் பேசினார். ``என் மகனுக்கு ஏழு வயதாகிறது. அவனை முழங்காலில் தாக்கியுள்ளனர். அவனால், இப்போது சரியாக நடக்க முடியவில்லை. நான்கு நாள்களாகப் பயந்து போயிருக்கிறான். மனிதாபிமானமே இல்லாமல், மிருகங்களைப் போல நடந்து கொண்டுள்ளனர், சோக்கிதானி ஊழியர்கள். ஆசிரியர்கள் அந்த இடத்தில் இருந்திருந்தால் இதுபோன்று நிகழ்ந்திருக்குமா? நாங்கள் அவர்களை நம்பித்தானே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம். அவர்களே பொறுப்பற்று நடந்துகொண்டால் எப்படி?” என்றவர், சற்றுநேரம் அமைதியாகி மீண்டும் தொடர்ந்தார். ``வீட்டுக்கு வந்து வலியால் துடித்த பிள்ளைகளைக் கண்டு துடித்துப்போனோம். உடனே, பள்ளிக்குச் சென்று முறையிட்டோம். எங்களிடம் பேசிய நிர்வாகத்தினர், எங்களை சமாதானப்படுத்துவதில்தான் குறியாக இருந்தார்களே தவிர, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டனர்

குழந்தைகளை பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில்தான், பள்ளிக்கு அனுப்பி வைக்கிறோம். ஆனால், குழந்தைகளை கவனிக்க வேண்டிய நிர்வாகமும், ஆசிரியர்களும் சிறிதும் அக்கறையே இல்லாமல் நடந்து கொண்டுள்ளனர். லட்சக்கணக்கில் கட்டணம் வாங்குகிறார்கள். ஆனால், குழந்தைகளைப் பாதுகாப்பதில் கோட்டைவிட்டுள்ளனர். பெற்றோர்கள் சார்பிலும், பள்ளி நிர்வாகத்தின் சார்பிலும் காவல்நிலையத்தில் புகார் அளித்து நான்கு நாள்களுக்கு மேலாகிறது. ஆனால், அந்தக் கொடூரத்தைச் செய்தவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையையும் காவல்துறையினர் எடுக்கவில்லை. குழந்தைகள் என்றும் பாராமல், காட்டுமிராண்டித்தனமாக அடித்துத் துன்புறுத்திய ஊழியர்களை, உடனடியாக கைது செய்ய வேண்டும். மனிதத்தன்மையே இல்லாதவர்களை பணியில் அமர்த்தியிருக்கும் சோக்கிதானியின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேசமயம், குழந்தைகளை அழைத்துச் சென்ற பள்ளி ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும். அப்போதுதான், இனிமேல் இதுபோன்ற கொடூரங்கள் நடக்காது” என்று முடித்தார்.

இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மற்றும் சோக்கிதானி நிறுவனம் விளக்கம் தந்தால், பரிசீலனைக்குப் பின்னர் பதிவு செய்யத் தயாராக இருக்கிறோம்.


டிரெண்டிங் @ விகடன்