போக்ஸோ சட்டத்தில் கைதான எஸ்.ஐ வாசு சிக்கியது எப்படி?- காக்கிகளின் சூழ்ச்சியைத் தடுத்த ஐ.பி.எஸ்  | SI Vasu caught in POCSO act

வெளியிடப்பட்ட நேரம்: 13:03 (03/12/2018)

கடைசி தொடர்பு:13:09 (03/12/2018)

போக்ஸோ சட்டத்தில் கைதான எஸ்.ஐ வாசு சிக்கியது எப்படி?- காக்கிகளின் சூழ்ச்சியைத் தடுத்த ஐ.பி.எஸ் 

போக்ஸோ சட்டத்தில் கைதான எஸ்.ஐ. வாசு

சென்னை வில்லிவாக்கத்தில் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைதான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வாசு குறித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

கடந்த சில தினங்களுக்கு முன், இரவு நேரத்தில் வில்லிவாக்கம் பகுதியில் பைக்கில் சென்ற ஒருவரை பொதுமக்கள் விரட்டினர். ஒருகட்டத்தில் பைக்கில் சென்றவர், நிலைத் தடுமாறி கீழே விழுந்ததும் பொதுமக்கள் அவருக்கு தர்மஅடி கொடுத்தனர். அப்போது அவ்வழியாக வந்த ரோந்து போலீஸார், அவரை மீட்டனர். எதற்காக இவரை அடிக்கிறீர்கள் என்று பொதுமக்களிடம் போலீஸார் விசாரித்தபோது, `அவர் செய்த காரியத்தை நீங்கள் கேட்டால் உங்களுக்கும் ரத்தம் கொதிக்கும். அவருடைய பேத்தி வயதிலிருக்கும் பெண்ணிடம் போய் அப்படி நடந்து கொண்டார்' என்றனர் ஒரே குரலில்.

உடனே, அவர், சார், `நான் சப்-இன்ஸ்பெக்டர், மாதவரம் பால்பண்ணைக் காவல் நிலையத்தில் பணியாற்றுகிறேன்' என்று கூறியதும் ரோந்து போலீஸார், அவரை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வில்லிவாக்கம் போலீஸ் நிலையத்துக்குச் சென்றனர். பிறகு பொதுமக்களும் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்களும் அங்கு சென்றனர். இரவு 8 மணிக்குத் தொடங்கிய விசாரணை நீடித்தது. பிறகு, அனைவரும் வெளியேறினர். பைக்கில் வந்த நபரும் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர். அதன்பிறகு, சிறுமிக்கு நேர்ந்த கொடுமை குறித்து மீடியாக்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் வில்லிவாக்கம் போலீஸ் நிலையத்தில் மீடியாக்கள் தரப்பில் விசாரித்தபோது, `யாரும் புகார் கொடுக்கவில்லை. அதனால் நடவடிக்கை எடுக்கவில்லை' என்று கூறப்பட்டது. அதோடு, `நீங்கள் வேண்டும் என்றால் புகார் கொடுங்கள். நடவடிக்கை எடுக்கிறேன்' என்று இன்ஸ்பெக்டர் ஒருவர் கூறினார். இதனால், சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றவர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் என்பதால் அவரை சக காக்கிகள் காப்பாற்ற முயற்சி செய்வதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். 

விசாரணையில் சிறுமியின் குற்றச்சாட்டில் சிக்கியவரின் பெயர் வாசு என்றும் கொளத்தூரில் குடியிருப்பதாகவும் மாதவரம் பால்பண்ணைக் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக இருப்பதும் தெரியவந்தது. அவர் மீது வில்லிவாக்கம் போலீஸார் நடவடிக்கை எடுக்கத் தயங்குவது குறித்த தகவல் நேர்மையான ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. உடனே அவர், தவறு செய்தது யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியதோடு வாசு குறித்து விசாரணை நடத்தி உடனே ரிப்போர்ட் கொடுங்கள் என்று உத்தரவிட்டார். அதன்பிறகு வாசு மீது குற்றம் சுமத்திய சிறுமி, அவரின் அம்மா மற்றும் பொதுமக்களிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அந்தச் சிறுமி, `அந்த அங்கிளை (வாசு) எனக்குத் தெரியும். நாங்கள் குடியிருக்கும் பகுதியில்தான் அவர் குடியிருந்தார். அன்பாகத்தான் என்னிடம் பழகினார். அதன்பிறகு அவரின் ஒவ்வொரு செயல்களும் பேச்சும் அநாகரிகமாக இருந்தது. எனக்கு அப்பா இல்லை. அதனால் அம்மாதான் என்னை கஷ்டப்பட்டு வளர்த்துவந்தார். அங்கிள் குறித்து யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்தேன். அங்கிள் போலீஸ் என்பதால் அமைதியாக இருந்தேன். சம்பவத்தன்று என்னுடைய அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு வந்துவிட்டனர். அப்போது அங்கிளும் அங்கு இருந்து பைக்கில் சென்றுவிட்டார்' என்று முழுவிவரத்தையும் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர். சிறுமியின் வாக்குமூலத்தைக் கேட்ட அந்த ஐ.பி.எஸ். அதிகாரி அதிர்ச்சியடைந்தார். உடனடியாக போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வாசு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து வில்லிவாக்கம் மகளிர் போலீஸார், வாசு மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

வாசு குறித்து விசாரித்தபோது, தமிழகக் காவல்துறையில் காவலராகச் சேர்ந்த அவர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார். இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெற உள்ளார். அவரின் பிள்ளைகளுக்குத் திருமணமாகிவிட்டன. வாசுவுக்கு பேரன், பேத்திகளும் இருக்கின்றனர். அவர் கைதான தகவல் சக போலீஸாருக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. `அவரா அப்படிச் செய்தார். நம்ப முடியவில்லை' என்பதுதான் பெரும்பாலான போலீஸாரின் பதிலாக இருக்கிறது. இருப்பினும் சிறுமியின் வாக்குமூலம், அவரின் உறவினர்களின் நெருக்கடியால் வாசுவை போலீஸார் கைது செய்துள்ளனர். 

இதற்கிடையில் வாசுவை பொதுமக்கள் விரட்டியதும் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக ரோந்து போலீஸார் அவரை மீட்டுள்ளனர். முதலில் வழக்குபதிவு செய்ய தயங்கிய போலீஸார், ஐ.பி.எஸ். அதிகாரியின் உத்தரவுக்குப் பிறகுதான் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்பிறகே சிறுமியின் உறவினர்களும் பொதுமக்களும் அமைதியாகினர். வாசுவை கைது செய்த போலீஸார் ரகசியமாக அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். வாசு குறித்த தகவல்களைத் தெரிவிக்க போலீஸ் அதிகாரிகள் தயக்கம் காட்டினர். 

 போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவானபிறகும் சிறுமிகளுக்கு எதிரான கொடுமைகள் குறைந்தபாடில்லை. பாதிக்கப்படும் பெண்களும் அவர்களின் குடும்பத்தினரும் வெளியில் தெரிந்தால் அவமானம் எனக் கருதி உண்மைகளை மறைத்துவிடுகின்றனர். இதனால் தவறுசெய்பவர்கள் தண்டனையிலிருந்து தப்பிவிடுவதோடு மீண்டும் அதே தவற்றை செய்துவருவதாக சமூகஆர்வலர்கள் சொல்கின்றனர். 

வேலியே பயிரை மேய்ந்த கதையாக சப்-இன்ஸ்பெக்டர் வாசுவை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.