வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (03/12/2018)

கடைசி தொடர்பு:13:20 (03/12/2018)

சிலை கடத்தல் விவகாரம்! - உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

'' சிலை கடத்தல் வழக்குகளில், எனது கருத்தைக் கேட்காமல் எந்த முடிவையும் எடுக்க வேண்டாம்'' என்று வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்செய்துள்ளார்.

  சிலைக் கடத்தல் - வழக்கறிஞர் யானை ராஜேந்திரன்

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி-யாகவும், ரயில்வே துறை ஐஜி-யாகவும் பொன்.மாணிக்கவேல் பதவி வகித்துவந்தார். இந்நிலையில் கடந்த  30-ம் தேதி, அவர் ஓய்வுபெற இருந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் 'பொன்.மாணிக்கவேலை சிலை கடத்தல் பிரிவுக்கு சிறப்பு அதிகாரியாக நியமித்து, ஒரு வருடத்துக்கு மறுநியமனம் செய்து உத்தரவிட்டது. மேலும், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்ததையும் தள்ளுபடிசெய்து உத்தரவிட்டது.

இந்நிலையில்,  சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்குகளைத் தொடர்ந்த வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், இன்று காலை உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றைத் தாக்கல்செய்துள்ளார். அதில், ''எனது கருத்தைக் கேட்காமல் சிலை கடத்தல் வழக்குகளில் எந்த முடிவையும் எடுக்க வேண்டாம்'' என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து யானை ராஜேந்திரனிடம் பேசினோம். ''சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பிருக்கிறது. அதனால்தான் கேவியட் மனு தாக்கல்செய்தேன். சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் போது, என் கருத்துகளைக் கேட்க வேண்டும் என்றுதான் மனுத்தாக்கல் செய்தேன்'' என்றார்.