அன்று குழந்தைகளை காப்பாற்ற உயிரை விட்ட சுகந்தி டீச்சர்; இன்று நிர்க்கதியான குடும்பம் #Gaja | Remembering sugathi teacher on her 9th death anniversary

வெளியிடப்பட்ட நேரம்: 14:25 (03/12/2018)

கடைசி தொடர்பு:14:25 (03/12/2018)

அன்று குழந்தைகளை காப்பாற்ற உயிரை விட்ட சுகந்தி டீச்சர்; இன்று நிர்க்கதியான குடும்பம் #Gaja

டிசம்பர் 3, 2009. வேதாரண்யத்திலுள்ள பனையடிகுத்தகை வழியாகச் சென்றுகொண்டிருந்தது தனியார் பள்ளி வேன் ஒன்றில் 20 குழந்தைகள், ஒரு பள்ளி ஆசிரியை மற்றும் க்ளீனர். வேன், டிரைவரின் அலட்சியத்தால்  ஒரு குளத்துக்குள் பாய்ந்தது. அதிலிருந்த குழந்தைகள் அனைவரும்  10 வயதுக்கு உட்பட்டவர்களே. ஆபத்தை உணர்ந்த சுகந்தி டீச்சர், கண்ணாடி ஜன்னலை உடைத்துக்கொண்டு தண்ணீருக்குள் தத்தளித்த குழந்தைகளை ஒவ்வொருவராகக் காப்பாற்றி கரைக்குக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறார். 11 குழந்தைகளை க்ளீனரின் உதவியுடன் கரைசேர்த்த சுகந்தி டீச்சரின் உடல் அதற்கு மேல் ஒத்துழைக்க மறுக்க, மற்ற ஒன்பது குழந்தைகளுடன் தானும் தண்ணீருக்கு இரையாகிப் போனார். அவர் இறந்து ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன. வேதாரண்யத்தில் உள்ள நாகக்குட்டையான் கிராமத்தில் வசிக்கிறார் சுகந்தி டீச்சரின் அம்மா அன்னலெட்சுமி. 

சுகந்தி டீச்சர்

'' குழந்தைங்களைக் காப்பாத்த தண்ணீல மூழ்கி இறந்தப்ப என் பொண்ணுக்கு 21 வயசு. அவ எங்களை விட்டுப் போய் ஒன்பது வருஷம் ஆகிடுச்சுமா'' என்றவரிடம், அழுகையும் குடும்பத்தில் வறுமையும் மட்டுமே மிஞ்சியிருக்கிறது. 

'' ஒரு பக்கம் என் பொண்ணு போன சோகம், மறுபக்கம் வறுமை, இப்ப கஜா புயலால இருந்த ஒத்த குடிசையும் போயிடுச்சுமா. எங்களுக்கு மட்டும் ஏன்தான் அடிமேல அடியா விழுதுன்னே தெரியல. இருந்த தென்னை, மாமரத்துல கிடைச்ச சொற்ப வருமானத்தை வச்சுகிட்டுதான் வாழ்க்கையை ஓட்டிகிட்டு இருந்தோம். இப்ப அதுவும் இல்ல. குடியிருக்க வீடும் இல்ல. நடுத்தெருவுக்கு வந்தாச்சு. இதுக்கப்புறம் என்ன பண்றதுனே தெரியலைம்மா. இப்போதைக்கு நிவாரண உதவியினால வயிறு நிறையுது. என் பொண்ணு இருந்திருந்தா இந்த நிலைமை எங்களுக்கு வந்திருக்காது. 

சுகந்தி டீச்சர்

ஒரே பொம்பளைப் புள்ளையாச்சேன்னு நல்லா படிக்க வைச்சேன். வீட்டுக் கஷ்டத்தைப் புரிஞ்சுகிட்டு அவளாவே படிச்சு ஸ்கூல் வேலைக்குப் போனா. என் பொண்ணு போனதுக்கு அப்புறமா, நாங்க அரசாங்கத்துகிட்ட என் பையனுக்கு ஒரு வேலை கொடுங்கன்னு கேட்டு நடையா நடக்கிறோம். ஒரு வேலை கிடைச்சாகூட, அதை  வச்சு இருக்கிற காலத்தை ஓட்டிருவோம். பையனுக்கு சரியான வேலை அமையலை. இப்ப என் பொண்ணு இருந்திருந்தா அவளுக்கு முப்பது வயசாகியிருக்கும். குடும்பம், குழந்தைனு சந்தோஷமா இருந்திருப்பா. அவ மாதிரி படிச்ச பொண்ணுங்களை எல்லாம் புள்ள குட்டியோட பாக்குறப்ப, மனசெல்லாம் ரணமா ஆகுது'' என்று வெடித்து அழுதார். 

பிஞ்சுக் குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காகத் தன் உயிரைத் தியாகம்செய்த டீச்சருடைய குடும்பம், இன்று அடுத்தவர்களுடைய உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. அரசு இவர்களுடைய அழுகைக்கு செவி சாய்க்குமா..?

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க