`நள்ளிரவில் காரை நிறுத்துவோம்; காரியத்தைக் கச்சிதமாக முடிப்போம்!'- தம்பதியினர் வாக்குமூலம் | Fraud gang caught by police in chennai

வெளியிடப்பட்ட நேரம்: 14:27 (03/12/2018)

கடைசி தொடர்பு:07:21 (04/12/2018)

`நள்ளிரவில் காரை நிறுத்துவோம்; காரியத்தைக் கச்சிதமாக முடிப்போம்!'- தம்பதியினர் வாக்குமூலம்

கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் தம்பதி

`சென்னையில் தனியாக வாகனங்களில் வருபவர்களிடம் ஆசைவார்த்தைக்கூறி நகை, செல்போன், பணம் ஆகியவற்றை கொள்ளையடிப்போம்' என்று தம்பதியினர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். 

ஆந்திர மாநில எல்லையில் உள்ள தமிழகப் பகுதியான கும்மிடிபூண்டி பகுதியைச் சேர்ந்தவர் நாதன் (40). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர், போரூரில் உள்ள தனது நண்பரைப் பார்க்க நள்ளிரவு 2.30 மணி அளவில் வந்தார். அப்போது போரூர் செல்லும் வழியில் ரயில்வே மேம்பாலம் அருகே கார் சென்றபோது இளம்பெண் ஒருவர் வழிமறித்துள்ளார். உடனே, இளம்பெண் மீது பரிதாபப்பட்டு நாதன் காரை நிறுத்தி அவரிடம் விசாரித்துள்ளார். அதன்பிறகு அவரை காரில் ஏறும்படி கூறியுள்ளார். இந்தச் சமயத்தில் இன்னொரு பெண் அங்கு வந்துள்ளார். அவரை தன்னுடைய தோழி என்று கூறியபடி இருவரும் காரில் ஏறியுள்ளனர். காரின் கதவுகளை மூடியபிறகு அங்கிருந்து புறப்பட ஆயத்தமானார்.

இந்தச் சமயத்தில் காரில் கதவைத் திறந்து அதிரடியாக இரண்டு இளைஞர்கள் ஏறினர். அவர்கள், நாதனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினர். அதை சற்றும் எதிர்பாராத நாதன், அதிர்ச்சியில் உறைந்தார். நள்ளிரவு நேரம் என்பதால் அந்தப் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் நாதனின் அலறல் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. சத்தம் போட்டால் கொலை செய்துவிடுவதாக அந்த இளைஞர்கள் மிரட்டினர். பிறகு, அவர் அணிந்திருந்த செயின், கைச்செயின், செல்போன் மற்றும் ரூ.10,000 ஆகியவற்றைப் பறித்தனர். அதன்பிறகு நான்குபேரும் காரிலிருந்து இறங்கி தப்பி ஓடினர். கண் இமைக்கும் நொடிப்பொழுதில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இதையடுத்து உயிர் பிழைத்தால் போதும் என்று கருதிய நாதன், காரை வேகமாக ஓட்டினார். அப்போது சென்னை பாடி மேம்பாலத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த போக்குவரத்து போலீஸாரிடம் நடந்த சம்பவத்தை நாதன் கூறினார்.

தம்பதி கொள்ளையர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள்

அந்தப் பகுதிக்குச் சென்று போலீஸார், வழிப்பறி கொள்ளையர்களைத் தேடினர். ஆனால், அவர்களைப் பிடிக்க முடியவில்லை. நகை, பணம், செல்போன் ஆகியவற்றை பறிக்கொடுத்த நாதன், வில்லிவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். இந்தச் சூழ்நிலையில் இன்னொரு கொள்ளைச் சம்பவத்தில் சிக்கிய ராஜமங்கலத்தைச் சேர்ந்த சுகுமார் (25), அவரின் மனைவி வரலட்சுமி (23) வால்டாக்ஸ் கொண்டிதோப்பு பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் (28), அவரின் மனைவி ரேவதி (24)  ஆகியோரிடம் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் நாதனிடம் கொள்ளையடித்ததை அவர்கள் ஒத்துக்கொண்டனர். அவர்களிடமிருந்து நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து 4 பேரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``நள்ளிரவில் கார், பைக்கில் தனியாகச் செல்பவர்களை வழிமறித்து கொள்ளையடிப்பதே இவர்களின் வேலை. வழிமறிக்கும்போது சூழ்நிலைக்கு ஏற்ப அவர்கள் பேசுவார்கள். சபலபுத்தி உள்ளவர்களிடம் சந்தோஷமாக இருக்கலாம் என்று வழிமறிக்கும் பெண்கள் கூறுவர். அப்போது, அந்தப் பகுதியில் மறைந்திருக்கும் சுகுமாரும் வெங்கடேஷும் கத்தியைக் காட்டி மிரட்டி கொள்ளையடிப்பார்கள். கொள்ளையடித்த பொருள், நகைகளை சமமாகப் பங்கு போட்டுக் கொள்வார்களாம். இவர்களிடம் பணம், நகை, செல்போன்களை பறிகொடுத்தவர்கள் அவமானம் கருதி புகார் கொடுப்பதில்லை. இதனால் இவர்கள் தொடர்ந்து நள்ளிரவு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்துள்ளனர். கொள்ளையடித்த நகை, செல்போன் ஆகியவற்றை விற்று ஆடம்பரமாகவும் வாழ்ந்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் யார், யாரிடம் வழிப்பறியில் ஈடுபட்டார்கள் என்று விசாரித்துவருகிறோம்" என்றனர்.

வழக்கமாக பைபாஸ் சாலைகளில்தான் இதுபோன்ற வழிப்பறிச் சம்பவங்கள் நடப்பதுண்டு. சாலை ஓரங்களில் லிப்ட் கேட்பதுபோல வழிமறித்து கொள்ளையடிக்கும் கும்பல் சென்னையிலேயே கைவரிசை காட்டியுள்ளது. தற்போது தம்பதிகள் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தக் கும்பல் குறித்த முழுவிவரங்களை போலீஸார் சேகரித்துவருகின்றனர்.