8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துதல்! - புதிய அறிவிப்பாணையை வெளியிட்ட மத்திய அரசு | centre notifies land accusation for salem - chennai express way project

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (03/12/2018)

கடைசி தொடர்பு:16:40 (03/12/2018)

8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துதல்! - புதிய அறிவிப்பாணையை வெளியிட்ட மத்திய அரசு

8 வழிச்சாலை திட்டம்

சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்துவதற்கான புதிய அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. சென்னையிலிருந்து சேலம் வரை 10,000 கோடி ரூபாய் செலவில் எட்டு வழிச்சாலை அமைக்கப்படவுள்ளது. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களின் வழியே இந்தச் சாலை அமையவுள்ளது. ஏற்கெனவே இந்தத் திட்டத்துக்குப் பொதுமக்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புக்குரல்கள் வந்துள்ளன.

8 வழிச்சாலை

இந்த நிலையில் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்துதற்கான பணிகளைத் தொடங்க மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை புதிய அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 60 கிலோ மீட்டர் தூரம் எட்டு வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்த அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. முதலில் இந்தியிலும், பிறகு ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டுள்ள `அரசிதழ் அறிவிப்பு' காஞ்சிபுரம் மாவட்டத்தில் கையகப்படுத்தப்படவிருக்கும் நிலங்களைப் பற்றிய குறிப்புகளைக் கொண்டுள்ளது. குறிப்பிடப்பட்டுள்ள நில உரிமையாளர்கள் தங்களுடைய ஆட்சேபனைகளை,  

8 வழிச்சாலை

``மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் கையகப்படுத்துதல்) , தேசிய நெடுஞ்சாலை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள்’’ - இந்த முகவரியில் எழுத்துபூர்வமாக தெரிவிக்கலாம். நிலங்களைக் கையகப்படுத்த ஆட்சேபனைகளைத் தெரிவிக்கும் நபர்களுக்கு மட்டுமே விளக்கம் அளிக்கப்படும் என்றும் அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளது.

நிலம் கையகப்படுத்துவதற்கான புதிய அறிவிப்பாணை

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் உள்ளிட்ட தாலுகாக்களில் மொத்தம் 39 கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளன. அரசு புறம்போக்கு நிலங்கள் உட்பட 1500-க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. மத்திய அரசின் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் 277 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்தச் சாலை அமைக்கப்படவுள்ளது. இதேபோல தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் நிலம் கையகப்படுத்த கடந்த இரண்டு நாள்களுக்கு முன் புதிய அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. 

8 வழிச்சாலை திட்டத்துக்காக வெட்டப்பட்ட மரங்கள்

இந்தத் திட்டத்துக்காக சுமார் 2000 ஹெக்டேர் பரப்பிலான நிலப்பகுதி கையகப்படுத்தப்படும் எனத் தெரிகிறது. எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராடி வருகின்றனர். ஏற்கெனவே எட்டு வழிச்சாலை தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.