`அப்பாவும் இல்ல; வீடும் இல்ல, இனி என்னம்மா செய்யப்போறோம்!'‍ - தாயைக் கண்கலங்கவைத்த சிறுமிகள் | Tanjore woman lost his husband and house in Gaja cyclone

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (03/12/2018)

கடைசி தொடர்பு:17:00 (03/12/2018)

`அப்பாவும் இல்ல; வீடும் இல்ல, இனி என்னம்மா செய்யப்போறோம்!'‍ - தாயைக் கண்கலங்கவைத்த சிறுமிகள்

மன்னார்குடி அருகே இளம்பெண் ஒருவர் கணவரை இழந்தும் கஜா புயலால் வீட்டை இழந்தும் தன் இரு மகள்களோடு எதிர்கால வாழ்வுக்கு இனி என்ன செய்யப்போகிறோம் எனத் தெரியாமல் கவலையில் பரிதவித்து வருதாகவும் அந்த இளம்பெண் ஒரே நேரத்தில் இரண்டு புயல்களைச் சந்தித்து நிர்க்கதியாய் நிற்பதாகவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.

சிறுமியின் தாய் வனிதா

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே உள்ள  மேலகண்டமங்கலம் கிராமத்தில் வசித்து வருகிறார் வனிதா. இவருக்கு 9-ம் வகுப்பு படிக்கும் தனுஷியா, 3-ம் வகுப்பு படிக்கும் சோபியா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். குடும்ப வறுமையின் காரணமாக வனிதாவின் கணவர் தர்மராஜ் சில மாதங்களுக்கு முன் கடன்கள் வாங்கி மலேசியாவுக்கு வேலைக்குச் சென்றார். அங்கு அவர் மர்மான முறையில் இறந்துவிட்ட செய்தி வனிதாவுக்குக் கிடைத்ததும் துடிதுடித்துப்போனவர், இனி இரண்டு மகள்களை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறேன் எனக் கதறியிருக்கிறார். இந்த நேரத்தில் புயல் அடிப்பதற்கு முதல் நாள் கடந்த 15-ம் தேதி தர்மராஜின் உடல் சொந்த ஊருக்கு வந்து சேர்ந்திருக்கிறது. புயல் வீசப்போவதாகக் கூறி அரசு அனைவரையும் எச்சரிக்கை செய்து பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தியிருந்தது. அதனால் சொந்தங்கள் இறுதிச்சடங்கில் அவசரம் காட்ட கணவரின் முகத்தைப் பார்த்து அழ முடியாத துர்பாக்கிய நிலை தனக்கு வந்ததை எண்ணி வெடித்துக் கதறினார் வனிதா. ஒரு பக்கம் தன் தாயின் கதறல், மறுபக்கம் வெளிநாட்டுக்குப்போன தன் அப்பா சடலமாகக் கிடத்தப்பட்டு இருக்க அதிர்ச்சியில் அப்படியே உறைந்துபோய் இருந்துள்ளனர் அந்தச் சிறுமிகள்.

இறுதிச்சடங்கு செய்ய செலவுக்கு பணம் இல்லாமல் பலரிடம் கடன் வாங்கி கணவரின் உடலை அடக்கம் செய்துவிட்டு, தன் இரண்டு மகள்களோடு பரிதவித்தபடி இருந்திருக்கிறார் வனிதா. இந்த நிலையில் அன்று இரவே கஜா புயல் குருவிக்கூடு மாதிரி இருந்த வனிதாவின் வீட்டையும் அதில் இருந்த பொருளையும் கலைத்துப்போட்டுவிட்டுச் சென்றது. இப்படி ஒரே நேரத்தில் இரண்டு புயல்களைச் சந்தித்து இனி எதிர்காலத்துக்கு என்ன செய்யப்போகிறோம் என்ற கவலையில் செய்வதறியாது கண்களில் நீர் கசிய தன் மகள்களை அரவணைத்தபடி காத்திருக்கிறார் வனிதா. இதுபற்றி அவரிடம் பேச ஆரம்பித்ததுமே பெரும் குரல் எடுத்து அழத் தொடங்குகிறார்.

அப்பாவை இழந்த சிறுமிகள்

ஒரு வழியாகக் கொஞ்சம் தேற்றிக்கொண்டு பேசிய வனிதா, ``என் கணவர் போதிய வருமானம் இல்லாததால் கடன் வாங்கி வெளி நாட்டுக்கு வேலைக்குச் சென்றார். அங்கு அவருக்கு என்ன நடந்ததுனே தெரியலை. திடீர்னு அவர் இறந்துட்டார் எனக் கூறி உடலை அனுப்பி வச்சாங்க. கணவர் இறந்த துக்கமே அடங்காத நிலையில் புயலால் இருந்த வீடும் தூக்கி வீசப்பட்டது. ஒரே நேரத்தில் இரண்டு இடிகள் தலையில் இறங்கியதால் நிலைகுலைந்த நான் இனிமேல் வாழ்ந்து என்ன செய்யப்போகிறேன். நாமும் சென்றுவிடுவோம் என நினைத்த நேரத்தில் என் மகள்கள் இனி நாமா என்னம்மா செய்யப்போறோம் எனக் கேட்டப்ப என் நெஞ்சே வெடித்ததுபோல் இருந்தது. கணவர் வாங்கிய கடன் ஒரு பக்கம் மகள்களைக் கரைசேர்க்க வேண்டிய கட்டாயம் மறுபக்கம் என்ன செய்றதுன்னுதான் தெரியலை'' என மீண்டும் அழுத் தொடங்கினார்.

வனிதா மகள் தனுஷியாவிடம் பேசினோம். `வெளி நாட்டுல வேலை பார்க்கப்போறேன். இனி நம்ம குடும்பத்துக்கு கஷ்டமே இருக்காது. உங்களையும் நல்லா படிக்க வச்சு பெரிய ஆளா ஆக்குவேன். நான் வரும் வரை அம்மாவ நல்லா பாத்துக்கணும் எனக் கூறிச் சென்றார் அப்பா. எங்களைத் தவிக்க விட்டுட்டுப் போயிட்டார். அதை நினைச்சு அம்மா அழுதுகிட்டே இருக்கு. நாங்க படிக்கக்கூடப் போகலை. வேலைக்குப் போய் உன்னை பார்த்துக்கிறோம் எனச் சொன்னோம். அதைக் கேட்டு இன்னும் அதிகமாக அழுது அம்மா'' என்றார்.

உயிரிந்த தர்மராஜ்

அதே ஊரின் அரசுப் பள்ளியின் ஆசிரியர் மணி.கணேசன், `சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கஷ்டப்பட்டது வனிதா குடும்பம். அதனால்தான் அவர் கணவர் வெளிநாட்டுக்குச் சென்றார். ஒரு பக்கம் கணவரை இழந்து தவிக்க கஜா புயலும் வனிதாவின் வாழ்வில் விளையாடிவிட்டது. இரண்டு மகள்களின் எதிர்காலத்துக்கு என்ன செய்யப்போகிறோம் என்ற கேள்விக்குறியோடு இளம் வயதிலேயே கணவரை இழந்து தவிக்கிறார் வனிதா. அரசு கருணையோடு அணுகி நிரந்தர வருமானத்துக்கு ஏற்பாடு செய்தால் வனிதாவின் குடும்பமும், அவர் மகள்களின் எதிர்காலமும் நன்றாக இருக்கும்'' என்றார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க