`3 டன் எடை, 22 அடி நீளம்'- நடுக்கடலில் பலியான ராட்சத திமிங்கிலம் | Whale carcass washes up on ECR beach

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (03/12/2018)

கடைசி தொடர்பு:17:20 (03/12/2018)

`3 டன் எடை, 22 அடி நீளம்'- நடுக்கடலில் பலியான ராட்சத திமிங்கிலம்

திமிங்கிலம்

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை கானத்தூர் ரெட்டிகுப்பம் பகுதியில் முகத்தில் காயங்களுடன் 3 டன் எடை உள்ள ராட்சத அரியவகை திமிங்கிலம் இன்று கரை ஒதுங்கியது. அழுகிய நிலையில் காணப்பட்ட அதை ஜே.சி.பி உதவியுடன் கடற்கரையிலேயே புதைக்கப்பட்டது. 

 சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியில் இன்று அதிகாலை அரியவகை திமிங்கிலம் கரை ஒதுங்கியது. அதைப்பார்த்த மீனவர்கள், கடல் வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர். அப்போது, திமிங்கிலம் இறந்து பல மணி நேரமானதை அவர்கள் கண்டுபிடித்தனர். இதனால் திமிங்கிலத்தின் உடலிலிருந்த துர்நாற்றம் அப்பகுதி முழுவதும் வீசியது. இதனால் அதை கடற்கரைப் பகுதியில் குழி தோண்டி புதைக்க முடிவு செய்யப்பட்டது. 

3 டன் எடை திமிங்கிலம்

ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ``கிழக்குக் கடற்கரைச் சாலையில் கரை ஒதுங்கிய திமிங்கிலம் மூன்று டன் எடையும் 22 அடி நீளமும் உடையது. இந்தத் திமிங்கலம் (டாபிகல் வெல்) இனத்தைச் சேர்ந்த ஆண் திமிங்கிலம். இந்தவகை திமிங்கிலம் 44 அடி நீளம் வரை வளரக்கூடியது. ஆழ்கடல் பகுதியில் குடும்பத்துடன் வசிக்கும் இவை பசிபிக் பெருங்கடலில்தான் அதிக அளவில் காணப்படும். இந்தவகை திமிங்கிலத்துக்கு பற்கள் கிடையாது. இதனால் நத்தை, மீன்களைத் தண்ணீருடன் விழுங்கி தண்ணீரை மட்டும் வெளியேற்றிவிடும் என்றனர். தற்போது கரை ஒதுங்கிய திமிங்கிலத்தின் முகத்தில் பலத்த காயம் உள்ளது.

இதனால் ஆழ்கடல் பகுதியில் பெரிய கப்பலில் மோதி இறந்திருக்க வாய்ப்புள்ளது. அழுகிய நிலையில் காணப்பட்ட இந்த திமிங்கிலத்தை ஜே.சி.பி மூலம் பள்ளம் தோண்டி புதைத்துள்ளோம். திமிங்கிலம் எப்படி இறந்தது என்பதைக் கண்டறிய நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்காக, திமிங்கிலத்தின் உடலிலிருந்து சில மாதிரிகளை எடுத்துள்ளோம். ஆய்வுக்குப்பிறகுதான் முழுவிவரம் தெரியவரும்" என்றனர். 

ராட்சத அரியவகை திமிங்கிலம் இன்று கடற்கரையில் இறந்துகிடந்த தகவல் காட்டுத்தீ போல பரவியது. இதனால் அதைப் பார்த்த ஏராளமானவர்கள் அங்கு குவிந்தனர். திருப்போரூரிலிருந்து வனத்துறையினரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்களும் திமிங்கிலம் எப்படி இறந்தது என்பதைக் கண்டறியும் முயற்சியில் களமிங்கியுள்ளனர்.