வெளியிடப்பட்ட நேரம்: 17:32 (03/12/2018)

கடைசி தொடர்பு:17:32 (03/12/2018)

``லோன்ல வாங்குன மாடு, புயல்ல போச்சு... எப்படிக் கடனைக் கட்டுவேன்!?" டெல்டா பாத்திமா மேரி

``லோன்ல வாங்குன மாடு, புயல்ல போச்சு... எப்படிக் கடனைக் கட்டுவேன்!?

காவிரி டெல்டா பகுதிகளில் வீசிய `கஜா புயல்', அந்தப் பகுதி மக்களின் வீடுகளை, சொத்துகளைக் கடுமையாகச் சேதப்படுத்திவிட்டது. அதிலிருந்து அவர்கள் மீண்டு வர பல மாதங்கள் வருடங்களாகலாம். இழப்பு என்பது வேலைக்குச் செல்பவர்களுக்கு மட்டுமல்லாமல் வேலை தருபவர்களுக்கும் ஏற்பட்டிருப்பதால், உடனடி வேலை வாய்ப்புகள் அந்தப் பகுதிகளில் சாத்தியமில்லை என்பதே எதார்த்தம். புயலுக்கு முன்பு வரை மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக தாங்கள் பெற்ற கடன்களுக்குத் தவறாமல் தவணை கட்டி வந்த பெண்கள்... தற்போது மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். போதாக்குறைக்கு, கடன் தந்த வங்கிகள் இப்போதும் கடனைக் கட்டச் சொல்லி நெருக்கடி தர தவித்துப் போயிருக்கிறார்கள் கடன் வாங்கியவர்கள்.

புயல்

தஞ்சாவூர் மாவட்டம், திருமலைராஜபுரம் ஊரைச் சேர்ந்த பாத்திமா மேரி, ``எனக்கு ரெண்டு பசங்க. பையன் ஏழாவது படிக்கிறான், பொண்ணு அஞ்சாது படிக்கிறா. வீட்டுக்காரர் நடத்திட்டு வந்த தொழிலில் நஷ்டமாகி, எங்கள விட்டுட்டு எங்கோ போய்ட்டாரு. நான்தான் தனியா குடும்பத்தைப் பாத்துகிறேன். மாடு வாங்கி வளர்த்தா, பாலை வித்துக் காசு கிடைக்குமேன்னு லோன் போட்டு மாடு வாங்கினேன். எல்லாமும் நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சு. இந்தப் புயல் அடிச்சதுல, மாடு செத்துப்போச்சு. வாடகை வீட்டுலதான் தங்கியிருக்கோம். அந்த வீட்டு மேலேயும் மரம் விழுந்து கூரை போயிடுச்சு. இந்த நெலமையில எப்படி வாங்கின கடனை அடைக்கிறதுன்னு தெரியல. புயல் எங்க வாழ்க்கையையே அழிச்சிருச்சு. ஆனாலும் கடனைக் கட்டச் சொல்றாங்க. அரசாங்கமோ, மத்தவங்களோ ஏதாச்சும் உதவினாதான் கரையேற முடியும்" என்கிறார் உடைந்த குரலில்.

ஆன்மன் காவிரி டெல்டா பகுதியில், புயல் மீட்புப் பணியில் ஈடுபடும் தன்னார்வலர் ஆன்மனிடம் பேசியபோது, ``கஜா புயல் பாதித்த டெல்டா பகுதியில் மக்கள், அடிப்படைத் தேவையான உணவுக்கே யாரையேனும் எதிர்பார்த்திருக்கும் நிலைதான் இப்போதுவரைக்கும் உள்ளது. அவர்களிடம் பணப் புழக்கம் என்பது அறவே இல்லை. இந்த நிலையில் மகளிர் குழுக்களில் வாங்கிய கடனுக்கான தவணையைக் கட்டச் சொல்லி, ஆள்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர். பொதுவாக, 10 பேர் கொண்ட குழு என்று வைத்துக்கொண்டால், அதில் ஒரு சிலர் பணம் தராவிட்டாலும், மற்றவர் சேர்த்துக்கட்டிவிடுவார்கள். ஆனால், இப்போது 10 பேருமே பணம் கட்ட முடியாத நிலையில் இருக்கிறார்கள். இந்த நிலையில், அவர்களுக்குக் கடன் கொடுத்த வங்கிகள் நெருக்கடி கொடுப்பது, உளவியலாகப் பெரும் சிக்கலாக்கிக்கொண்டிருக்கிறது என்பதுதான் எங்கள் பயமாக இருக்கிறது. இந்தப் பெண்கள் வாங்கிய கடன் தொகை பெரிய அளவில் இல்லை என்பதால், மத்திய, மாநில அரசுகள் காவிரி டெல்டா மாவட்டங்களில் சுய உதவிக்குழுக்களில் வாங்கியிருக்கும் நுண் கடன்களைத் தள்ளுபடி செய்யவேண்டும் அல்லது இரண்டு ஆண்டுகளுக்குத் தவனை வசூலிப்பதற்குத் தடை போடவேண்டும். அதுவும் முடியாவிட்டால், இரண்டு, மூன்று மாதங்களுக்காவது தவணை கேட்டு ஆள் அனுப்புவதைத் தடுக்க வேண்டும். வங்கி விதிகளில் இதற்கு வாய்ப்பிருக்கிறதா என்பதைப் பார்க்கலாம். முதலமைச்சரோ அல்லது குறைந்தபட்சம் டெல்டா மாவட்ட ஆட்சியர்களோ ஒன்றிணைந்து இதுகுறித்து ஆலோசித்துச் செய்வது அவசியம் மட்டுமல்ல அவசரமும்கூட. இழப்புகளுக்கு முன்பே நடவடிக்கை எடுப்பதுதானே சரியானது" என்கிறார்.

பேரிழப்பில் சிக்கித் தவிக்கும் மக்களின் மனநிலையை உணர்ந்து அரசு இதில் தலையிடுமா?  


டிரெண்டிங் @ விகடன்