வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (03/12/2018)

கடைசி தொடர்பு:18:00 (03/12/2018)

`ஆட்டோவுக்கு காசு இல்ல; டிரைசைக்கிளில் மகனை கூட்டிவந்தேன்!'- கலெக்டர் ஆபீஸில் தந்தை கண்ணீர்

தண்டுவடம் பாதிக்கப்பட்ட மகனை டிரைசைக்கிளில் ஏற்றிவந்து மதுரை ஆட்சியரிடம் காண்பித்து கண்ணீர் விட்டு உதவி கேட்ட சம்பவம் மனதை உறையவைத்தது.

மகனை டிரை சைக்கிளில் மதுரை ஆட்சியர் அலுவலகத்துக்கு ஏற்றிவந்த தந்தை

மதுரை  திருப்பாலைப் பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது - ஜெயலானி தம்பதியின் மூத்த மகன் முகமது இப்ராஹிம். மாற்றுத்திறனாளியாக இருந்துவரும் சூழலில் 10 மாதத்துக்கு முன் வீட்டி மாடியிலிருந்து எதிர்பாராத விதமாக கீழே விழுந்துள்ளார். அந்த விபத்தில் இப்ராஹிமின் முதுகுத்தண்டில் பாதிப்பு ஏற்பட்டு படுத்த படுக்கையானார். இதனால் இவரின் பெற்றோரும் வேலைக்குச் செல்ல முடியாத சூழலில், இவரை கவனித்துவருகின்றனர். காப்பகங்களில்கூட சேர்த்துக்கொள்ளாததால் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், படுத்த படுக்கையில் இருக்கும் இப்ராஹிம்மை அவரின் தந்தை 7 கிலோமீட்டர் டிரைசைக்கிளில் ஏற்றிவந்து கண்ணீருடன்  மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜனிடம் மனு அளித்தார். இந்தச் சம்பவம் பலரையும் உறைய வைத்தது.

இது குறித்து சாகுல் ஹமீது கூறுகையில், ``என் மகன் இப்ராஹிம் பல மாதங்களாக படுத்த படுக்கையில் உள்ளான்.  அவனை கவனிக்க வேண்டும் என்ற காரணத்தால் சரியாக வேலைக்குச் செல்ல முடியவில்லை. ஆட்டோவில் கூட்டிவரக்கூட காசு இல்லாமல் டிரைசைக்கிளில் வைத்து அழைத்து வந்துள்ளேன். என் குடும்பத்தை கவனித்துக்கொள்ள வேண்டும். எனக்குத் தொழில் செய்துகொள்ளும் அளவுக்கு பண உதவி செய்தால் போதுமானது. அதற்காக ஆட்சியரிடம் மனு அளித்துள்ளேன். எங்களுக்கு கருணை அடிப்படையில் உதவி செய்ய வேண்டும்'' என கேட்டுக்கொண்டார்.