வெளியிடப்பட்ட நேரம்: 17:34 (03/12/2018)

கடைசி தொடர்பு:17:34 (03/12/2018)

ஸ்டெர்லைட் மீது நடவடிக்கைக் கோரி வழக்கு! - வேதாந்தா நிறுவனத்துக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

மாசை ஏற்படுத்தும் வகையில் ஆலைக்கழிவுகளை அகற்றிய வேதாந்தா நிறுவனம் மீது குற்றவியல் நடவடிக்கை கோரிய வழக்கில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர், வேதாந்தா நிறுவனம் பதில் அளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட்

நெல்லையைச் சேர்ந்த முத்துராமன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், "தூத்துக்குடி மீளவிட்டான் கிராமத்தில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை அமைக்கப்பட்டது. அதன் தொழிற்சாலை கழிவுகளை அகற்றும்போது முறையாகத் தெரிவிக்கப்பட வேண்டுமென்ற விதியுடன் ஆலை இயங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், ஸ்டெர்லைட் ஆலை நிறுவனம், 3.52 லட்சம் டன் மதிப்புள்ள கழிவுகளை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தூத்துக்குடி மாவட்டச் சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டு செல்லாமல், தூத்துக்குடி உப்பாற்றில் கொட்டியுள்ளனர். அதேபோல இதே அளவிலான கழிவுகளை தனியார் பட்டா நிலத்திலும் கொட்டி வைத்துள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலை

இது குறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தூத்துக்குடி மாவட்டச் சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரிடம் புகார் அளித்தால், மாசுக்கட்டுப்பாடு மற்றும் தடுப்புச் சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், அவர்கள் அதில் கவனம் செலுத்த தயங்குகின்றனர். ஆகவே, மாசுக்கட்டுப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட வேதாந்தா நிறுவனம் மீது மாசுக்கட்டுப்பாடு மற்றும் தடுப்புச் சட்டத்தின் கீழ், குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

உயர் நீதிமன்ற மதுரை கிளை

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர், வேதாந்தா நிறுவனம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.